Friday, May 2, 2014

பெருமிதம்


சுந்தருக்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் சொல்லி அனுப்பறோம் என்ற வழக்கமான பதிலுடன் வெளியேறினார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்து பேசிய சுந்தர் ஒரு முடிவுக்கு வந்தான்.

" சாரிப்பா..இந்த பொண்ணு வேண்டாம்..!"

" டேய்..அண்ணைக்கு பொண்ண புடிச்சிருக்குன்னு சொன்ன..? அதுவுமில்லாம நாற்பது பவன்நகையும் ஐந்து லட்சம் ரொக்கமும் தர்றதா சொன்னாங்க, அப்பறம் ஏன் வேண்டாம்ங்கற,,!" புரியாமல் கேட்டார் அப்பா.

"அப்பா, அண்ணனுக்கு போனவருஷம் திருமணம் பண்ணினப்போ நாம எதுவும் கேக்கலையின்னாலும் முப்பது பவன் நகை, மூணு லட்சம் ரொக்கமுன்னு அண்ணிக்கு சீர் செஞ்சாங்க, இப்ப இவங்க கூடுதலா சீர் செஞ்சு திருமணம் பண்ணி வெச்சா ரெண்டு மருமகள்கிட்டயும் ஒரு ஏற்றத்தாழ்வு வரும். அதனால நேத்து அந்த பொண்ணோட வீட்டுக்குப்போய் நீங்க முப்பது பவன் நகை, மூணு லட்சம் ரொக்கம் மட்டும் செய்தா போதும்னு சொன்னேன், அந்த பொண்ணு கேட்கல, நான் மூத்த மருமகளவிட ஒரு படி மேல இருக்க விரும்பறேன்னு பிடிவாதமா சொல்றா, அப்படிபட்ட பொண்ணூ எனக்கு தேவையில்லப்பா..!"

சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்ட தனது மகனை தட்டி அணைத்தார் அவனது அப்பா. அந்த அணைப்பில் பெருமிதம் நிரம்பி வழிந்தது.

 07-02-2014 குங்குமம் இதழில் வெளிவந்தது) 
9

No comments: