Thursday, December 20, 2012

அவகாசம்


       
மாலதியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பரம திருப்தி. மாப்பிள்ளையும் மாலதியைப்பார்த்து முழு சம்மதத்தோடு பெண்ணை பிடிச்சிருக்கு என்றான்

``நிச்சயதார்த்தம் அடுத்த மாசம் வெச்சுக்கலாம் ஆனா கல்யாணம் ஆறு மாசம் கழிஞ்சுதான் நடத்த முடியும், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்!’’ என்று  தீர்மானமாகச் சொன்ன மாலதியின் தந்தை விஸ்வநாதனை எல்லோரும் குழப்பமாகப் பார்த்தார்கள்.

``சரியிங்க உங்க இஷ்டம் அப்படியே நடத்தியிடலாம்!’’ மாப்பிள்ளையின் தந்தை சொல்ல மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியோடு புறப்பட்டு போனார்கள்.

`ஏங்க எல்லா ஏற்பாடும் ரெடியாத்தான் இருக்கு, சட்டு புட்டுன்னு கல்யாணத்த வைக்காம எதுக்கு ஆறு மாசம் டைம் கேக்கறீங்க..? மாலதியின் அம்மா மெல்ல கேட்டாள்.

``அதுக்கில்லை சுந்தரி, இந்த காலத்துல வயசு பிள்ளையிங்க எல்லாருக்கும்  ஒரு காதல் இருக்கத்தான் செய்யும், வெளியில சொல்லாம இருப்பாங்க, கல்யாணத்தண்ணைக்குட்கூட  ஓடிப்போற ஜோடி உண்டு, பொண்ணயும், இவன் என்ன காதலிச்சுட்டு ஏமாத்தியிட்டான்னு கல்யாண மண்டபத்துல வந்து நிக்கற பொண்ணுங்களும் உண்டு, இப்பிடி ஒரு அவகாசம் குடுத்தா அதுக்குள்ள அவங்க மனசுல உள்ளத வெளிப்படுத்தவும், ஒரு தைரியம் வருமில்லையா அதான் அப்படிச்சொன்னேன்!’’    

      ``அதுவும் சரிதான்!.’’ என்று புன்னகைத்தபடியே நகர்ந்தாள் மாலதியின் அம்மா.

 குங்குமம் 17-12-12

No comments: