Sunday, December 2, 2012

தேர்வு


பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தின் வகுப்பு தேர்வு பேப்பர் திருத்தப்பட்டு வாங்கியதிலிருந்து மதிவதனி ஒரு மாதிரியாகவே இருந்தாள், காரணம் அதில் முப்பது மதிப்பெண்கள் வாங்கி தோற்றிருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு எல்லோரும் புறப்பட்டு போனபின்பும் மதிவதனி வீட்டுக்குப்போகாமல் அழுதபடியே நின்றாள்.

``ஏம்மா அழற…?’’ தலைமை ஆசிரியர் நிர்மலா அவள் கரம் பற்றியபடி கேட்டாள்.

``கணக்கு பாடத்துல தோத்துட்டேன் வீட்டுக்குப்போனா அம்மா அடிப்பாங்க..!’’ மறுபடியும் அழுகை வந்து அவள் குரலை அடைத்தது.

``உன் வீட்டு ஃபோன் நம்பர் குடு நான் பேசறேன்!’’’

``அம்மா இங்கதான் டீச்சரா வேல பார்க்கிறாங்க, பேரு ஜமுனா’’ அவள் சொல்லும்பொழுதே ஜமுனா டீச்சர் அங்கு வந்து சேர்ந்தாள்.

``குழந்தையிங்க தேர்வில தோத்துட்டா அடுத்த தேர்வுல ஜெயிச்சுடலாமுன்னு ஆறுதல் சொல்லணும், இத ஒவ்வொரு பெற்றோரும் புரிஞ்சிக்கணும், நீங்க இந்த பள்ளிக்கூடம் வந்தா மட்டும் டீச்சரா இருங்க, வீட்டுக்குப்போனா நல்ல பெற்றோரா இருங்க..!’’ நிர்மலா டீச்சர் சொன்னது நறுக்கென்று கொட்டியதுபோல் வலிக்க ஜமுனா டீச்சரின் தலை குனிந்திருந்தது.

தனது தவறை உணர்ந்து மதிவதனியின் கரம் பற்றி பரிவோடு அழைத்துப்போனாள் ஜமுனா டீச்சர்.

குமுதம் 05-12-2012

No comments: