Saturday, February 4, 2012

மருமகள்

புதிதாக திருமணமான அனுஷா சமையயலறையில் மாங்கு மாங்குவென வேலை செய்ய ஆரம்பித்தாள். காய்கறி நறுக்குவது, வாணலியில் வதக்குவது என்று பம்பரமாய் சுழன்று வேலை செய்தாள். காரம், உப்பு போடும்போதுமட்டும் தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அனுஷா.

மாமியார் மனோகரியும் சலிக்காமல் அவள் அழைக்கும்போதெல்லாம் சென்று காரம், உப்பு சரிவர இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பராட்டவும் செய்தாள்.

“ என்னடி இவ்வளவு நல்லா சமைக்கிற, ஆனா உப்பு, காரம் போடுறதுக்கு மட்டும் அம்மாவ கூப்பிடுறியே!ஒருவேளை சமையல்ல உப்போ, காரமோ கூடியிருந்தா பழிய அம்மா மேல போட்டுட்டு நீ தப்பிக்கலாம்ங்கற ஐடியாதானே!” அனுஷாவின் கணவன் சந்தேகமாய் கேட்டான். தனது மாமனார் அத்தையின் முன் அப்படி கேட்டது அனுஷாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

” டேய், அவமேல தப்பில்லடா ,அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததும், சமையயல நீ பண்ணு, ஆனா காரமும் உப்பும் நான்தான் போடுவேன்னு சொன்னேன், அதுப்படியே அவ நடந்துக்கறா!” என்றாள் மனோகரி. அதன்பிறகு அனைவரும் திருப்தியாய் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்குச் சென்றனர்.

” மகன் கேட்டது சரிதானே , அனா நீ மருமகள விட்டுக்கொடுக்காம நம்ம மகன்கிட்ட அப்பிடி பேசினியே ஏன்?’’ மனோகரியின் கணவர் மெல்லக்கேட்டார்.

“ அனுஷா படிச்ச பொண்ணு, அவ வீட்டுல சமையல் செஞ்சுகிட்டும் படிச்சுகிட்டும் இருந்திருந்தா எம்.எஸ்.சி யுல பர்ஸ்ட் கிளாசில பாஸாகி வேலையும் வாங்கியிருக்கமாட்டா! அவ சமையல்ல கொஞ்சம் வீக்குன்னு வந்த மொத நாளே தெரிஞ்சுகிட்டுதான் அப்படிச் சொன்னேன்!”

தனது மருமகளை மகனிடம் விட்டுக்கொடுக்காத மனைவியை பெருமையாகப்பார்த்தான் அவளது கணவன்.

1 comment:

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நல்ல பதிவு. அருமை. வாழ்த்துகள் சார்!