படித்தவர்கள் அதிகமிருக்கும் குமரி மண்ணில் படித்தவன் தனக்கு உரிய நேரத்தில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் எப்படி தடம் மாறுகிறான் என்ற சமூக கோபத்தோடு குமரி மண்ணில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு வெளிவந்திருக்கிறது தம்பி வெட்டோத்தி சுந்தரம் திரைப்படம்.
குமரி மண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக இயக்குநர்கள் ஆனதில்லை, அந்த வகையில் களியக்காவிளை ஊரில் பிறந்த வி.சி வடிவுடையான் இயக்குநர் ஆனது பெருமைக்குரியது என்பதற்கு அடையாளம் அவர் கையிலெடுத்த கதைக்களமும் அந்த கதையை தொய்வின்றி விறுவிறுப்பாக இயக்கியிருப்பதும் தான்.
பி.ஏ பி.எட் படித்து பட்டம் பெற்ற சுந்தரம் என்ற இளைஞன் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அலையும் நேரத்தில் அவனது நண்பன் சாளை அவனை கடத்தல் தொழில் செய்ய அழைக்கிறான், தான் ஒரு படித்தவன் என்றும் படிப்புக்கு ஒரு மரியாதை இருக்கு என்று வாதம் செய்துவிட்டு கடத்தல் தொழிலை நிராகரிக்கும் சுந்தரம் ஒரு கட்டத்தில் வீட்டு லோண் கட்ட முடியாமல் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்யப் போகும் நோட்டீஸ் ஒட்டி திரும்பும்போது இந்த உலகில் வாழ பணம் வேண்டும் என்பதை உணர்ந்து கடத்தல் தொழில் செய்ய மனம் மாறுகிறான் சுந்தரம்.
கடத்தல் தொழிலில் ஈடுபட்டதால் அவன் விரும்பும் லூர்துமேரியை கட்டிதரமுடியாது என்று இன்னொரு கடத்தல் தாதா சிலுவை சொல்ல இந்த தொழிலை விட்டுட்டா என்று கேட்க அவனுக்கு தனது மகளை கட்டித்தர சம்மதிக்க, சுந்தரமும் மதம் மாறுவதாகச்சொல்லி பின்பு மதம் மாறுவதில் தடை ஏற்பட லூர்துமேரியை கட்டித்தர மறுக்கிறான் சிலுவை.
காதலை பிரித்தாலும் காதல் உறுதியுடன் இருக்க நள்ளிரவில் வீட்டை விட்டு கிளம்பும் லூர்துமேரி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள். சுந்தரத்தை பழி வாங்க கிளம்பும் சிலுவை அவன் கண்களில் ஆசிட் கலந்த சுண்ணாம்பு கலவையை ஊத்தி கண்களை பறிக்கிறான். தன்னால் இனி லூர்துமேரியை வைத்து காப்பாத்தமுடியாது என்று கருதி மாட்டுவண்டியின் குறுக்கே கிடந்து உயிரை விடுகிறான் சுந்தரம். சுந்தரம் இறந்த பிறகு அவன் வீடு தெடி வாத்தியார் வேலைக்கான பணிநியமன கடிதம் வருகிறதோடு படம் முடிகிறது.
படத்தின் ஆரம்ப காட்சிகள் அனைத்தும் ரத்தமும் சதையுமாக காட்டி இருந்தாலும் நெஞ்சைத்தொடும் காட்சிகள் ஏராளம் உண்டு. பாதாள குழியில் வெடிகுண்டு தூக்கிபோட்டு அது வெடித்து சிதறும் காட்சியில் சிலுவையின் மனைவி அணிந்திடுந்த குருசுமாலையில் ரத்தம் கசிந்து ஒழுகுவது நேர்த்தியான காட்சி.
ஒரு பெண் ஆம்பளகிட்ட நட்பா இருக்ககூடாதா? என்ற சுந்தரத்தின் கேள்வி நறுக்கான வசனம், எழுதிய எழுத்தாளர் ப.ராகவன் பல இடங்களில் பாராட்டுக்குரியவராகிறார்.
தன் முகத்தின் மீது வெற்றிலைபோட்டு துப்பிய உடும்புவை அதுபோலவே சுந்தரமும் வெற்றிலை போட்டு துப்புவது, கடத்தல் லாரியை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்ப்பது, போன்ற காட்சிகளில் சுந்தரம் தூள் கிளப்புகிறார்..
லாரியை கடத்திவிட்டு கேரளாவுக்கு வந்தபிறகு சாளை அவனை கடத்தல் செய்ய சொன்னபோது பத்து பயல்வளுக்கு நல்லது செய்யணும்னுதான் வாத்தியார் வேலைக்கு படிச்சேன், இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேல கிடைக்கலேன்னா பாழாப்போறது அவன் இல்லடேய் இந்த சமூகம் தான். என்று சுந்தரம் சொல்வது சமுதாயத்தின் மீது வீசும் சாட்டை நிச்சயம் அரசாங்கத்துக்கு வலிக்கும் இந்த வசனம்..
கடத்தல் தொழில் செய்யும் சுந்தரம் நாசுக்க்காக களியக்காவிளை செக்போஸ்ட்டில் காத்திருக்கும் அம்புறோஸ் எஸ்.ஐ யை திசை திருப்பும் முயற்சியாக ஐஸ்கட்டிக்குள் தண்ணீர் பாக்கெட்டை வைத்து ஏமாற்றி ஸ்பிரிட்டை தீயணைப்பு வண்டியில் வைத்து கடத்துவது அசத்தல்.
சுந்தரத்தின் நண்பனாக வரும் சாளை சுந்தரத்துக்காக இரவு ஒரு மணிக்கு பணம் கடன் வாங்க அவனது பங்காளி ஆடு தாமஸ் வீட்டுக்குச் சென்று அடி வாங்கி திரும்பும்போது சாளையின் ஒரு கால் ஊனம் என்பதும் செயற்கை கால் பொருத்தியிருப்பது தெரியும் இடத்தில் இயக்குநரின் டச் தெரிகிறது. சாளை வலிக்குது தோழா என்று கண்ணீர் விட்டு அழுவது பார்ப்பவரை அழ வைக்கிறது. இவ்வளவு நகை போட்டிருக்கேனே இதை வெச்சு எதுவும் நமக்கு செய்யலையே என்று நினைச்சிடாத, இதெல்லாம் வெறும் கவரிங் என்று சொல்லிவிட்டு கதறி அழும் காட்சியில் ஒட்டுமொத்த கைத்தட்டல்களை வாங்கிவிடுகிறார் சாளை.
சுந்தரத்தின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பாபு குடித்துவிட்டு அழுது வேலைக்காக காத்திருந்து தனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்று கதறி அழுவதும் இந்த கள்ளிவெட்டிச்சாரின ஊர்ல படிச்சவனுக்கு வேல இல்ல என்று கண்ணீர் விட்டு அழுவதும் பின்பு தூக்கில் தொங்கி தற்கொலை செய்வதும் பார்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.
படம் முழுக்க இயக்குநரின் மெனக்கெடல் பளிச்சென்று தெரிகிறது, சுந்தரத்தின் மீது லூர்துமேரியின் காதலும் அவளின் துறு துறு நடிப்பும் பலரையும் கவர்ந்துவிடுகிறது. பஸ்சில் லூர்துமேரியின் ஜாக்கெட்டில் காசு விழும் இடத்தில் பரவும் பின்னணி இசை சிலிர்க்க வைக்கிறது.
கொலைகாரா பாடல் காட்சியில் குமரியின் இயற்கை அழகும், தென்னை மரங்களின் கொள்ளை அழகும் பளிச்சிடுகிறது. பாடலின் இடையே தண்ணீரில் குடம் மூழ்குவது, நீர்ப்பாம்பு ஓடுவது, இளநீர் விழுவது, நங்கூரம் விழுவது, பாட்டில் விழுந்து உடைவது துருப்பிடித்த கப்பலை காட்டுவது என இயக்குநரின் கலை ரசனை பளிச்சிடுகிறது.
சுந்தரத்தை வெட்டிப்பயல் என்று லூர்துமேரியின் தோழி சொல்ல அவளை நூலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் கல்லூரி ஆண்டுமலரில் சுந்தரம் பற்றிய தகவல்களை லூர்துமேரி கண்ணீரோடு சொல்வது பார்ப்பவர்களையும் கண்ணீர் சிந்த வைக்கிறது.
லூர்துமேரியின் தந்தையாக வரும் சிலுவையின் யதார்த்தமான நடிப்பு பார்ப்பவரை மிரள வைக்கிறது, லூர்துமேரியின் தோழியை அவளின் தந்தை வெட்டி கொன்றது பற்றி சிலுவையிடம் அழுது புலம்பும்போது பொறுமையாக கேட்டுக்கொண்டு நின்ற சிலுவை ``அவன் பேர் என்ன மக்களே’’ என்று கேட்பது அசத்தல். தனது மகள் சுந்தரத்தை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் சுந்தரத்தைப்பார்த்து விட்டிரு மக்களே என்று தன் இழப்புகளை சொல்லும் காட்சியில் நடிப்பில் உயர்ந்து நிற்கிறார் சிலுவை. எல்லா திரைப்படங்களிலும் வில்லனுக்கென்று தனி சோக வரலாறு இருப்பதில்லை ஆனால் இந்த படத்தில் வில்லன் சிலுவைக்கென்று ஒரு சோகம் இருப்பது வித்தியாசமாக உள்ளது.
குமரிமாவட்ட வட்டாரவழக்கு பேச்சில் இதுவரை எந்த படங்களும் வந்ததில்லை, ஆனால் முதல் முயற்சியாக இந்தப்படம் வெளிவந்திருப்பது குமரிமாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. ஆனால் படம் முழுக்க வட்டார தமிழிலேயே பேசியிருந்தால் கூடுதல் கவன ஈர்ப்பு பெற்றிருக்கும். படத்தில் சில கதாபாத்திரங்கள் வழக்கமான சினிமாவில் பேசுவதுபோல் உள்ளது சற்று நெருடலாக உள்ளது. தொட்டிப்பயலே, தொடங்கி வேறு சில கெட்ட வார்த்தைகளும் படத்தில் இடம் பெற்றிருக்கிறது இது வேறு மாவட்டத்துக்காரர்களுக்கு புரியாமல் போனாலும் குமரிமாவட்டத்துக்காரர்களுக்கு நன்றாக புரியும்படியான கெட்டவார்த்தைகளாக இருப்பது சற்று சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
படத்தின் கதாபாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள் இதுவரை எந்த படங்களிலும் பயன்படுத்தாத பெயர்களாகவே இருக்கிறது. சாள,, பாக்கு, ஆப்ப, கறண்ட், உடும்பு, என்று வித்யாசமான பெயர்களில் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்திருப்பது வித்யாசமாக உள்ளது.
அம்புறோஸ்டே…. வீசுற காத்தே நின்னுட்டு போவும் என்று பஞ்ச் டயலாக் பேசும் எஸ்.ஐ அம்புறொஸ்சின் நடிப்பு அசத்தலாக இருக்கிறது, என்ன விசயம்டேய், சொல்லுடேய், டூட்டியில இந்த அம்புறோஸ் யாருன்னு தெரியுமாடே என்று அவர் பேசும் வசனம் பார்ப்பவர்களை வசீகரிக்கிறது.
படத்தில் குறைகள் எதுவும் இல்லை என்றாலும் சில கவனக்குறைவுகள் உள்ளது. இயக்குநர் வி.சி வடிவுடையான் ஆரம்ப காட்சியில் சுந்தரத்தை அறிமுகப்படுத்தும்போது எம்.ஏ, பி.எட் படித்தவர் என்று சொல்கிறார், ஆனால் சுந்தரம் சொல்லும்போது பி.ஏ, பி,எட் என்று சொல்கிறார்.
திரைக்கதை நிகழ்வது பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு, பதினைந்து வருடங்களுக்கு முன்பே 102சி பஸ்சின் எண்களையெல்லாம் 82சி என்று மாற்றியாகிவிட்டது, இயக்குநர் 82சி என்றே காட்டியிருக்கலாம், அதுபோல சிகப்பு கலர் பெயின்ட் அடித்த பஸ்கல்ர்களும் மாறிருந்தது. கதை நிகழ்வது பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்றிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
சுந்தரமும் அவன் நண்பர்களும் ஒரு பாரில் தண்ணி அடிக்க அமர்ந்திருப்பார்கள் அந்த பாரின் பின்னணியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த திருப்பாச்சி படத்தின் பாடல்கள் பின்னணியில் ஒலிபரப்பாகும்.
மேலும் 12 வருடங்களுக்கு முன்பு பிளக்ஸ் கலாச்சாரம் வரவில்லை ஆனால் படத்தில் சாலையின் ஓரத்தில் பெரிய பிளக்ஸ் மாட்டிவைக்கப்பட்டிருக்கும். அதுபோல செல்போன் கலாச்சாரம் குமரிமாவட்டத்துக்கு வந்து எட்டு வருடங்கள் தான் ஆகிறது பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு செல்போன் கலாச்சாரம் வந்தது ஆனால் யாரும் வாங்கி பயன்படுத்தவில்லை, விலைகுறைப்பு மற்றும் கைபேசிகட்டணம் குறைப்பு வந்தபிறகே எல்லார் கைகளிலும் கைபேசி வர ஆரம்பித்தது.. இவையெல்லாம் குறைகளல்ல கவனக்குறைவுகள். நிறைய உதவி இயக்குநர்கள் படத்தில் இருந்தும் கவனிக்க தவறியிருக்கிறார்கள்.
களியக்காவிளையில் நிஜமாகவே ஒரு வெட்டோத்தி சுந்தரம் என்று ஒருவர் இருக்கிறார். அவரது வாழ்க்கையில் நடந்த உண்மைக்கதை என்றே நினைக்கத்தோன்றினாலும் திரைப்படத்தில் சுந்தரம் சாகடிக்கப்பட்டிருப்பதால் அப்படி நினைக்கத்தோன்றவில்லை என்றாலும் நிஜ சுந்தரம் ஸ்பிரிட் கடத்துவதில் கில்லாடி என்று கேள்விப்பட்டதுபோல படத்தில் வருவது உண்மை சம்பவம் என்று நிரூபணமாகிறது.
படத்தின் எந்த காட்சியிலும் தொய்வு இல்லை. படம் முழுக்க விறுவிறுப்பு கூடி இருப்பது படத்திற்கு பலம், படத்தில் ஒவ்வொரு பிரேம்களிலும் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது அதற்க்காகவே இயக்குநருக்கு நிறைய சபாஷ்கள் மாலையாக போட்டுவிடலாம். இந்த நாட்டுல படிச்சவனுக்கு வேல கிடைக்கலேன்னா பாழாப்போறது அவன் இல்ல இந்த சமூகம் தான் என்ற சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுகளுடன் படம் வெளிவந்து வெற்றி பெற்றிருப்பது குமரி மண்ணுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
3 comments:
சிறுகதைகள் தொகுப்பும், திரைப்பட விமர்சனமும் அருமை.
என்றென்றும் வாழ்த்துகளுடன்...பூங்கதிர்.
நன்றி எஸ்.எஸ். பூங்கதிர் அவர்களே
Post a Comment