Tuesday, September 6, 2011

அம்மா

``ஸ்வேதா, நாம ஊர விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணி ஆறு மாசம் ஓடிப்போச்சு. இப்போ நீ வாயும் வயிறுமா இருக்கே, உன் அம்மா அப்பாகிட்ட சமாதானம் பேசலாமுன்னு உன் வீட்டுக்குப்போனேன்…அவங்க வீட்ட காலி பண்ணிகிட்டு போயிட்டாங்களாம்…உன் அப்பாவ எனக்குத்தெரியும், ஆனா உன் அம்மாவ நான் பார்த்ததே இல்ல, அவங்கள நான் பார்க்கவே முடியாதா?’’ ஸ்வேதாவின் விரல்களை தனது விரல்களோடு பிணைத்தபடியே கேட்டான் ராமன்,

``அம்மாவப்பத்தி பேசாதீங்க, நம்ம காதலுக்கு குறுக்கே நின்னதே அம்மா தான்…’’ கடும் கோபத்தில் சொன்னாள் ஸ்வேதா.

``சரி, வேற விஷயம் பேசலாம்…சந்தையில தினமும் ஒரு அம்மாகிட்ட காய்கறி வாங்குவேன், ஐம்பது ரூபாய்க்கு கேட்டா ஒரு கூடை நிறைய அள்ளிப்போடுவாங்க, நேற்று அந்தம்மா இல்லையின்னு பக்கத்துல வியாபாரம் பண்ணிகிட்டு இருந்த பாட்டிகிட்ட வாங்கினேன், ஐம்பது ரூபாய்க்கு அவங்க தர்றதுல கால் பங்கு கூட தரல!’’

``அப்படியா? அந்தம்மாவ எனக்கும் அறிமுகம் செஞ்சுவெச்சுடுங்க…நான் போனாலும் அவங்ககிட்டே வாங்கிடுறேன்.!’’

மறுநாள் ஸ்வெதாவை அழைத்துக்கொண்டு சந்தைக்குச்சென்று தூரத்தில் இருந்தபடியே காட்டினான் ராமன். பார்த்தபோது ஒரு கணம் அதிர்ந்து ஓடிச்சென்று கட்டி அணைத்தாள் ஸ்வேதா. அறிமுகம் செய்து வைக்காமலேயே அவனுக்கு அது யாரென்று புரிந்தது.

குங்குமம் 12-09-2011

No comments: