சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம் தான் அதைப்போல இலக்கியம் என்றால் நினைவுக்கு வருவது சேலம் தான் என்று கூட சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த மாவட்டத்தில் பிரபலமான கவிஞர்களும் எழுத்தாளர்களும் . இங்கே குவிந்து கிடக்கிறார்க்ள்.
அந்த வரிசையில் இந்த மாத எழுத்தாளர் அறிமுகம் பகுதியில் வலம் வருபவர் கவிஞர் ச. கோபிநாத். கவிதை அலைவரிசைக்கு வார்த்தை வரம் கொடுக்கும் வித்தகர். தமிழ் நெஞ்சங்களில் கவிதை மழை பொழியும் கவி சக்கரவர்த்தி.
இந்த இளைய கவிஞருக்கு வயதென்னவோ இருபத்தி இரண்டுதான் ஆனால் அறிஞர் பெருமக்கள் அள்ளித்தந்த பட்டங்களும் விருதுகளும் நம்மை வியக்க வைக்கிறது கலைத்திலகம், யுவகலாபாரதி, சகலகலாவித்தகர், கலைத்துறைகருவூலம், முத்தமிழ்வித்தகர், சாதனையாளர், நகைச்சுவைஅரசு, கவித்தென்றல் இவையெல்லாம் இவர் பெற்றுள்ள விருதுகள் என்கிறபோது சற்று மலைப்புத்தான் தோன்றிவிடுகிறது.
தமிழ்மொழியை மட்டும் நேசிக்காமல் ஆங்கிலத்தையும் அறிந்துகொண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றிக்கொண்டு தமிழ் மொழியில் தரமான கவிதைகளைத்தர மனிதர்களை மதித்து, மனித மனங்களை நுகர்ந்து சைக்கிள் ஓட்டுவதற்கு பயிற்சியும் முயற்சியும் தேவை என்பதுபோல கவிதைக்களத்தில் நல்ல பயிற்சி பெற்று நல்ல முயற்சி உடையவர்தான் கவிஞர் ச. கோபிநாத்.
இவர் எழுதிய கவிதைகள் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், வடக்குவாசல், புன்னகை, பொதிகை மின்னல், இணையட்டும் இதயம், தமிழச்சி, பயணம், நீலநிலா, உயிர்த்துளி, மற்றும் குறுஞ்செய்திகள் இதழ்களிலும் வெளிவந்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார்.
இதுதவிர கூட்டுமுயற்சியாக வெளிவந்த பல நூல்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. தூண்டுகோல், வசந்தவாசல் கவிச்சாரல், எழுத்துச்சிற்பிகள், புல்லாங்குழலின் பூபாளம், வசந்தவாசல் கவிப்பேழை, கவிஞர்கள் பார்வையில் அண்ணா, அண்ணா நானூறு, அன்பென்று எதனைச்சொல்ல, சிந்தனைவயல், ஹைக்கூ-500, சிந்தனைவயல்-2, வசந்தவாசல் கவிதைக்களஞ்சியம், சிந்தனைவயல்-3, வசந்தவாசல் கவிதைக்கடல் போன்ற நூல்களில் இவரது கவிதைகள் இடம்பெற்று இலக்கியத்திற்கு இரத்ததானம் செய்திருக்கிறார்.
இவர் கவிஞர் மட்டுமல்ல கேட்பவர்களின் இதயங்களை துயிலெழுப்பும் சிறந்த பேச்சாளரும்கூட, பட்டிமன்றங்களில், தொலைக்காட்சிகளில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இவரது அனல் தெறிக்கும் பேச்சுக்கள் கேட்பவரை அசர வைக்கும், கருத்து தூவல்கள் இதயங்களை உரச வைக்கும் .
இவரது பேச்சில் தமிழ் இயற்கையாய் வந்துவிழும் ஒரு அருவியைப்போல வந்து விழும். விஜய் தொலைக்காட்சி நடத்திய ``தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களுக்கான தேடல் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேச்சாளர்களில் ஒருவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.
ஜி தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ஞாயிறுபட்டிமன்றம் நிகழ்ச்சியில் சிறந்த பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.
பள்ளி கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற போட்டிகளில் மாவட்டம் மாநிலம் மற்றும் அகில இந்திய அளவுகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி சேலம் பெரியார் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய 800 மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்று செம்மொழி மாநாட்டில் பங்கேற்றிருக்கிறார்.
ஆனந்தவிகடன் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின்கீழ் 2008-2009 ஆம் ஆண்டின் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி திட்டத்தின் நிறைவில் மிகச்சிறந்த மாணவ பத்திரிகையாளர் எனும் சான்றிதழும் பெற்றிருக்கிறார்.
சிறந்த சிந்தனைச் சிற்பியான இவர் பல தன்னம்பிக்கை கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சேலம் மாநகரிலிருந்து வெளிவரும் தமிழச்சி இதழில் தன்னம்பிக்கை கட்டுரைத்தொடர் தொடர்ந்து எழுதிவருகிறார்.
சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக ஜொலிக்கும் கவிஞர் ச.கோபிநாத் எதிர்காலத்தில் தரமான படைப்புகளைத்தந்து அவையெல்லாம் நூல்களாகி இலக்கியத்தில் இடம் பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அவர் மேன்மேலும் வளர முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.
முகவரி :
27/12, அம்மாபேட்டை முதன்மைசாலை,
பாவடி பெண்கள் பள்ளி எதிரில்,
சேலம்-636 001
கைபேசி : 9790231240
மின்னஞ்சல் : gopinath.success@gmail.com
வலைப்பூ : www.kavivanam.blogspot.com
1 comment:
தமிழுக்கும் அதன் மூலம் தன் ஊருக்கும் பெருமை சேர்க்கும் கோபிநாத்தை அறிந்து கொண்டோம். உங்களின் அறிமுகம் மூலம் மேலும் பல சேற்றில் முளைத்த செந்தாமரைகள் வெளிச்சத்திற்கு வரட்டும்.
Post a Comment