Wednesday, August 17, 2011

வீட்டுக்காரர்ராகவனும் அவனது மனைவி சுசீலாவும் வாடகைக்கு வீடு தேடி அலைந்து சலித்துப்போனார்கள். ஷோபாநகரில் ஒரு புது வீடு வாடகைக்கு கிடைக்கும் என்ற தகவல் கிடைக்க இருவரும் போய் வீட்டை பார்த்தார்கள்.

ஒரு அறையும் ஒரு சமையலறையுமென வீடு சிம்பிளாக இருந்தது. வீட்டு உரிமையாளர் தினகரனை சந்தித்து அட்வான்ஸ், மாத வாடகை எவ்வளவு என்று கேட்டான் ராகவன்.

``அட்வான்ஸ் எதுவும் வேணாம், வாடகை மூவாயிரம் மட்டும் குடுத்தா போதும்!’’ சாந்தமாய் சொன்னார் தினகரன். ராகவன் ஒரு கணம் யோசித்தான்..

``என்னங்க யோசிக்கிறீங்க, வாடகை கூடினாலும் அட்வான்ஸ் கிடையாது சட்டுன்னு வீடு புடிச்சிருக்குன்னு சொல்லிடுங்க!’’ சுசீலா அவசரப்படுத்தினாள்.

ராகவன் வீடு பிடித்திருக்கிறது என்றும் ``பத்தாம் தேதி குடி வர்றோம்!’’ என்று சொன்னான்.

``நல்லது வாங்க!’’ என்று புன்முறுவலோடு பதில் சொன்னார் தினகரன்.

வீட்டை விட்டு கிளம்பும்போது இருவரின் முகத்தில் மகிழ்ச்சி இழையோடியிருந்தது..

``வீட்டுக்காரர் ரொம்ப தங்கமானவர் போல, யாருங்க இந்த காலத்துல அட்வான்ஸ் இல்லாம வீடு வாடகைக்கு விடுறது!’’ வழியில் நடந்தவாறே வீட்டுக்காரரைப்பற்றி புகழ்ந்தாள் சுசீலா.

``அட்வான்ஸ் இல்லதான் ஆனா வாடகை அதிகமில்ல!’’

``ஏங்க, அந்த வீட்டுக்கு குறைஞ்சது இருபதாயிரமாவது அட்வான்ஸ் குடுக்கணும், நம்மகிட்ட அவ்வளவு பணம் இப்போ எங்கே இருக்கு!’ சுசீலாவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் நடந்தான் ராகவன்.

பத்தாம்தேதி இருவரும் குடிவந்தபோது வீட்டு உரிமையாளரின் மனைவி கெளசல்யா பால் கொண்டு வந்து தந்து சுசீலா கையால் பால் காய்ச்ச வைத்து நன்றாக பழகிக்கொண்டாள்.

வீட்டு உரிமையாளர் என்ற கர்வம் இல்லாமல் நல்ல குடும்ப நண்பர்களைப்போல் பழகி வந்தார் தினகரனும் அவரது மனைவியும்..

இரண்டு வருடங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை. ஊரிலிருந்து ராகவன் மனைவியின் அக்கா மகன் வேலை தேடி வருவதாக சொன்னபோது ராகவன் மனம் சங்கடப்பட்டது.

அவன் இங்கு வந்து அவர்களோடு தங்குவதாக இருந்தால் இந்த வீடு போதாது. இரண்டு அறையுள்ள வேறு வீடு தான் பார்க்க வேண்டும். வேறு வீடு பார்க்கலாம்தான் ஆனால் அந்த வீட்டுக்கு குறைந்தது இருபதாயிரம் ருபாய் அட்வான்ஸ் தரவேண்டும், உடனே அவ்வளவு பணத்தை எப்படி புரட்டுவது, வருத்தம் படிந்த முகத்தோடு வாசலில் அமர்ந்தபோது தினகரன் வேலை முடிந்து வந்து சேர்ந்தான்.

``என்ன ராகவன் ஒரு மாதிரியா இருக்கிறீங்க, ஏதாவது பிரச்சனையா?’’ வீட்டுக்காரர் வலியக்கேட்டது ராகவனுக்கு ஆறுதலாக இருந்தது.

``ஊரிலயிருந்து என் மனைவியோட அக்கா மகன் வேலை தேடி இங்க வரப்போறான், அவன் எங்ககூட தங்குறதா இருந்தா வேற இதவிட பெரிய வீடாத்தான் பார்க்கணும், அதான் கஷ்டமா இருக்கு!’’ தயங்கியபடியே சொன்னான் ராகவன்.

``ராகவன், எண்ணைக்கும் ஒரே வீட்டுல இருக்க முடியாது, நான் உனக்கு வாடகைக்கு விட்டிருக்கிறது ஒரு பெட்றூம் ஒரு கிச்சன், அதுக்குள்ள உன் மனைவியோட அக்கா மகனையும் சேர்த்து தங்க வைக்க முடியாது அதனால வீட்ட மாத்திதான் ஆகணும், வேற வீடு உடனே பார்த்துடு, நீ எங்கே தங்கினாலும் நம்ம நட்பு அப்பிடியேதான் இருக்கும்!’’ தெளிவாய்ச் சொன்னார் தினகரன்.

``வீடு பார்க்கலாம்தான் ஆனா உடனே அட்வான்ஸ் தர்றதுக்கு என்கிட்ட பணமில்ல, எல்லாரும் உங்களமாதிரி அட்வான்ஸ் இல்லாம வீடு தருவாங்களா என்ன!’’

தினகரன் பதிலெதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்று இருபத்தி நான்காயிரம் பணத்தை எடுத்து வந்து ராகவன் கையில் திணித்தார்.

``இது உங்க அட்வான்ஸ் பணம்தான் வைச்சுக்கோங்க, நீங்க வீடு கேட்டு வந்தப்போ உங்ககிட்ட நான் அட்வான்ஸ் வாங்கல, மொத்தமா இருபதாயிரம் அட்வான்ஸ் கேட்டிருந்தா நீங்க சிரமப்பட்டிருப்பீங்க, அதனாலதான் அட்வான்ஸ் வேண்டாமுன்னு வாடகையில ஆயிரம் ரூபா அதிகமா வெச்சு கேட்டேன், உங்களுக்கும் அது ஒரு சின்ன செலவா தெரிஞ்சிருக்கும், அந்த பணத்த நான் வங்கியுல போட்டேன், இப்போ அது இருபத்திநாலாயிரமாயிடிச்சு, இந்த பணத்த வெச்சு வேற வீடு பாத்து அட்வான்ஸ் குடுத்திடுங்க!’’ தினகரன் சொல்ல சொல்ல அவரை கையெடுத்து கும்பிடலாம்போல தோணியது ராகவனுக்கு.

1 comment:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அவ்வளவூ நல்லவரா அவூரூ .... அண்ணே உடனே அட்ரச SMS பண்ணுங்க ... :) :)