Monday, August 29, 2011

நாணயம்



இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெலினாவிடம் பத்து ருயாய் நோட்டை கொடுத்து பக்கத்து கடைக்கு சென்று வாசிங் சோப்பும் ஷாம்புவும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ராதிகா.

``சரிம்மா!’’ என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள் ஜெலினா. கடைக்காரரிடம் வாசிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ருபாய் நோட்டை நீட்டினாள்.

``மொத்தம் ஒன்பது ரூபாய் ஆச்சு மீதி ஒரு ருபாய்க்கு சில்லரை இல்லை அதுக்கு ஒரு சாக்லெட்டு வாங்கிக்க!’’ என்றார் கடைக்காரர்.

``எனக்கு சாக்லெட் வேண்டாம், பாக்கி ஒரு ரூபா தான் வேணும்!’’ அடம் பிடித்தாள் ஜெலினா.

``ஏம்மா சாக்லெட் வேண்டாங்கறே, சாக்லெட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமுன்னு உன் அம்மா சொன்னாங்களா? ஆச்சர்யமாய் கேட்டார் கடைக்காரர்.

``சாக்லெட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ உங்ககிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க, நான் தான் வேணுமுன்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கிட்டேன்னு என்ன தப்பா நினைப்பாங்க.!”” ஜெலினா சொல்லச்சொல்ல இந்த சின்ன வயதில் அவளுக்கிருக்கும் நாணயத்தை பாராட்டியபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ருபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்...

No comments: