Friday, May 27, 2011

மனசு

நகரத்தின் மையப்பகுதியில் வீடு விலைக்கு வருகிறது என்ற தகவல் தரகர் மூலம் அறிந்ததும் தாமோதரனும் அவனது மனைவி பரிமளாவும் வீட்டைச் சென்று பார்த்தார்கள்.

இருவருக்கும் வீடு மிகவும் பிடித்திருந்தது. வீட்டு உரிமையாளரிடம் அட்வான்ஸ் தொகையை தந்துவிட்டு அடுத்த வாரம் பத்திரப்பதிவு செய்துவிடலாமென உறுதி செய்தனர்.

``என்னங்க, பத்திரப்பதிவு செஞ்ச மறுவாரமே நாம சொந்த வீட்டுக்கு வந்துடலாம். இத்தனை நாளும் வாடகை வீட்டுல இருந்தோம், இனியாவது சொந்த வீட்டுல நிம்மதியா இருக்கலாம்!’’ பரிமளா புன்முறுவல் பூக்கச் சொன்னாள்.

``இல்ல பரிமளா, வழக்கம்போல நாம வாடகை வீட்டுலதான் இருக்கப்போறோம், ஒரு வருஷம் கழிச்சுத்தான் சொந்த வீட்டுக்கு வரப்போறோம்!’’

``ஏன்?’’ அவரை கோபமாய் பார்த்தபடியே கேட்டாள் பரிமளா.

``நாம வாங்கப்போற வீட்டுல குடியிருக்கிறவங்களோட ரெண்டு குழந்தைங்க ஸ்கூல்ல படிக்குறாங்க. வீட்ட நாம வாங்கிட்டோமுன்னு திடீர்ன்னு வீட்ட காலி பண்ணச் சொன்னா படிக்குற குழந்தைங்க பாதிக்கப்படுவாங்க, அதுவுமில்லாம எல்லா ஸ்கூல்லயும் அட்மிஷன் முடிந்துவிட்ட நேரம், இந்த நேரத்துல அவங்கள காலி பண்ணச்சொல்றது நல்லதில்ல!’’ அவரது நல்ல மனதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தாள் பரிமளா.

குமுதம் 25-05-2011

No comments: