Friday, May 27, 2011

கிறுக்கல்கள்

மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டுச் சுவருக்கு வெள்ளை பிரைமர் அடித்து அடுத்த மாதம் கலர் பெயிண்ட் அடிக்க திட்டமிட்டிருந்தான் பாக்யத்தின் மூத்த மகன் விஜயன்.

பச்சை இலைகளைக்கொண்டு கிறுக்கியும் படம் வரைந்தும் குழந்தைகளின் பெயர்கள் எழுதியும் அந்த பளிச் சுவர் அசிங்கப்பட்டிருப்பதைக் கண்டதும் மார்க்கெட் சென்றுவிட்டு வந்த பாக்யத்திற்க்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

``தறுதலையிங்க, எழுதறதுக்கு வேற இடம் கிடைக்கலையா? என்வீட்டு சுவத்துலதான் எழுதணுமா? என பக்கத்து வீட்டு குழந்தைகளை சபித்தாள். அறையில் சுருண்டு படுத்திருந்த ராமசாமி பாக்யத்தின் குரலைக்கேட்டு வெளியே வந்தார்.

``பாக்யம், சத்தம் போடாதடீ, நம்ம வீட்டு சுவத்துல கிறுக்கி வைச்சது நான் தான்!’’

``உங்களுக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு, எதுக்கு கிறுக்கி வெச்சீங்க?’’

``சென்னையிலிருந்து சின்ன மகனும் மருமகளும் பேரக்குழந்தைகளும் நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர்றாங்க, வீடு வெள்ளை அடிச்சு சுத்தமா வெச்சிருந்தா குழந்தைங்களுக்கு எதையாவது கிறுக்கி வைக்க மனசு வராது, இப்பிடி கிறுக்கி வைச்சா குழந்தைங்களும் சந்தோஷமா எதையாவது வரைஞ்சு தள்ளுவாங்க!’’

தன் பேரக்குழந்தைங்களின் கிறுக்கல்களைக் காண ஆசைப்படும் கணவனை மேற்கொண்டு திட்ட மனமின்றி மெளனமானாள் பாக்யம்.

குங்குமம் 30-05-2011

No comments: