கையில் பூமாலையோடு இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தனுக்கு இணையாக அவருக்கு அருகில் அமர்ந்து அவரைப்போல மிடுக்காக கால் மேல் கால் போட்டு போட்டோவுக்கு போஸ் தந்தார் மயில்சாமி.
போட்டோ எடுத்து முடிந்ததும் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன் மயில்சாமியின் கரங்களை அழுத்தமாய் குலுக்கி `கிளமபறேன்!’ என்றபோது மயில்சாமிக்கு கண்கள் பனித்தது.
இன்று ரிட்டையர் ஆகிவிட்டோம் நாளையிலிருந்து போலீஸ் வேலைக்கு வரவேண்டியதில்லை என நினைத்தபோது மனதிற்க்குள் பாரமேறியதைப்போல உணர்ந்தான் மயில்சாமி.
``சார், உங்ககூட ஒரு விஷயம் பேசணும்!’’
`` ம், சொல்லு என்ன விஷயம்!’’ அதட்டாமல் கேட்டார் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன். எதற்க்கெடுத்தாலும் தன்மீது எரிந்துவிழும் இன்ஸ்பெக்டர் இன்று சாந்தமான குரலில் கேட்டது மயில்சாமிக்கு ஆறுதலாக இருந்தது.
``ரிட்டையர் ஆகி வீட்டுல இருந்து பொழுது ஓட்டுறதுக்குப்பதிலா நம்ம ஸ்டேசன் பக்கத்துல ஒரு டீக்கடை போட்டு காலத்த ஓட்டலாம்ன்னு நினைக்கிறேன், நீங்க சம்மதிச்சீங்கன்னா நாளைக்கே டீக்கடை போட்டுடுவேன்!’’ பணிவாய்க் கேட்ட மயில்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன்.
`` நாலுபேரு வந்துபோற இடத்துல ஒரு டீக்கடை போட்டா உனக்கு வியாபாரம் அமோகமா நடக்கும், நம்ம ஸ்டேசன் ஒதுங்குன இடம், இங்க டீக்கடை போட்டா உனக்கு கட்டுபடியாகாது!’’
`` பரவாயில்ல சார், ஆரம்பத்துல வியாபாரம் குறைச்சலா நடந்தாலும் போகப்போக பிக்கப் ஆயிடும், அதுவுமில்லாம நம்ம ஸ்டேசன்லயும் அடிக்கடி டீ தேவைப்படும், சமாளிச்சுக்குவேன் சார்!’’
`` சரி உன் இஷ்டம்!’’ என்றபடி புறப்பட்டுப்போனார் சந்திரகாந்தன். மயில்சாமிக்கு மனசு குதூகலித்திருந்தது. நிறைந்த மனதோடு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்.
மறுநாள் காலை ஸ்டேசன் ஓரமாக டீக்கடை போட்டு முதல் டீயை இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தனுக்கு நீட்டியபோது அவரும் நினைத்த நேரத்தில் டீ சாப்பிடலாம் என சந்தோஷமாய் டீயை எடுத்துக்கொண்டார்.
மாலை நான்கு மணிக்கு டீக்கடைக்கு வந்தார் மயில்சாமியின் நண்பர் மணிகண்டன்.
`` சர்க்கரை கம்மியா ஒரு டீ!’’ சொல்லிவிட்டு அன்றைய தினசரியைப் புரட்ட ஆரம்பித்தார்.
மயில்சாமி சர்க்கரை குறைவாக டீ போட்டு தந்தார். டீயை தினசரியைப் பார்த்தவாறே ஒரு வாய் உறிஞ்சினார் மணிகண்டன். டீயின் உஷ்ணம் அவரது நாக்கையும் உதடுகளையும் பதம் பார்க்கவே டீ ஆறட்டும் என கீழே வைத்தார்.
`` மயில்சாமி, இங்க வந்து டீக்கடை போட்டியே உனக்கு கட்டுப்படியாகுமா?’’ இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தன் கேட்ட அதே கேள்வியை அவரும் கேட்டார்.
மயில்சாமியால் அதற்குமேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.
`` என்ன ஆளாளுக்கு வந்து கட்டுப்படியாகுமா கட்டுப்படியாகுமான்னு கேக்கறீங்க, நான் ஒண்ணும அதிக லாபம் சம்பாரிக்கிறதுக்காக இங்க வந்து டீக்கடை போடல, வீட்டுல சும்மா இருந்தா போர் அடிக்குமேன்னு நினைச்சும் இங்க வந்து டீக்கடை போடல, உங்க எல்லாரோட மனசும் குறுகிடக்கூடாதுன்னுதான் இங்க வந்து டீக்கடை போட்டேன். இதுக்குமுன்னால இன்ஸ்பெக்டருக்கும்சரி, ஏட்டையாவுக்கும்சரி டீ வேணும்னா உடனே நாமதான் முட்டுச்சந்துக்கு போயி அங்கயிருந்து டீ வாங்கிகிட்டு வரணும், வழியுல யாராவது தெரிஞ்சவங்க டீ வாங்கிகிட்டு வர்றதப்பார்த்தா மனசு குறுகி படுற வேதனைய நானும் அனுபவிச்சவன்தான். இனிமே அந்த வேதனைய மத்த போலீஸ்காரங்க யாரும் அனுபவிக்கக்கூடாதுன்னுதான் இங்கவந்து டீக்கடை ஆரம்பிச்சேன்!’’ தனது மனதிலிருந்த பாரங்களை கொட்டித்தீர்த்தார் மயில்சாமி.
மணிகண்டனுக்கு பேச வார்த்தைகளற்று அவர் கரங்களைப்பற்றிக்கொண்டான். கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் மயில்சாமியின் கரங்களில் பட்டுத்தெறித்தது. வார்த்தைகள் வரமறுத்து ஒளிந்து கிடந்த போதிலும் `ரொம்ப நன்றிப்பா’ என அவர் உதடுகள் அசைவது மயில்சாமிக்கு புரிந்தது.
No comments:
Post a Comment