Thursday, September 10, 2009

வேலை இல்லாமல் ஒரு வேலை

வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலைப்பளு அதிகமாகி எப்பொழுது வேலை முடியுமென்று கவலைப்படும் மனிதர்கள் பலரையும் பார்த்திருக்கிறோம், ஆனால் குஜராத்தில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு ஆள் எடுத்துவிட்டு அவருக்கு எந்த வேலை கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறி ஏதாவது ஒருமணி நேரம் பார்க்கும் அளவுக்கு ஒரு வேலையைத் தந்துவிட்டு மீதி நேரம் முழுவதும் அவர் அரட்டை அடித்தாலென்ன, இணையதளத்தில் புகுந்து மேய்ந்தாலென்ன நிர்வாகம் அதைப்பற்றி துளியளவும் கவலைப்படுவதில்லை. ஆறு மாதங்கள் வரை அவருக்கு எந்த கவலையுமின்றி ஊதியத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக சுத்துவார்கள், அதன்பிறகு தான் அவருக்கு தலைவலியே ஆரம்பிக்கும்.

வேலை கொடுக்கப்படாமலேயே அவரது பெர்மாமென்ஸ் மேலதிகாரியால் சரிபார்க்கப்பட்டு இவர் லாயக்கில்லை என்று ஒரு முடிவுக்கு வந்து பிறகு கொடுத்த ஒருமணி நேர வேலையையும் தருவதில்லை. காலையில் அலுவலகம் வருவதும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை வீடு கிளம்பிப்போவதும் தான் அவரது வேலையாக இருக்கும். கிட்டத்தட்ட இருபது நாள் அல்லது ஒரு மாதம் வரை இதே நிலைதான். அதன்பிறகு அவரே மனசொடிந்து வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.

மீண்டும் தினசரியில் வேலைக்கான விளம்பரம் வரத்தொடங்கும். சலித்துப்போன குஜராத்வாசிகள் ஒரு கட்டத்தில் அந்த கம்பெனிக்கு வேலைக்கு விண்ணப்பிப்பதே இல்லாமல் போக, புது டெக்னிக் கண்டுபிடித்தது நிர்வாகம். கம்பெனியில் நிறைய தமிழ்பேசும் ஆட்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வேலையை தேடிப்பிடித்து செய்வார்கள், இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தலாம் என முடிவெடுத்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழில் விளம்பரம் கொடுத்து குஜராத்துக்கு நேர்காணலுக்கு வர விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வரவழைத்தார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நல்ல ஊதியம், தங்குவதற்க்கு ஹெஸ்ட் அவுஸ், சமைத்துப்போட தனிஆட்கள், ஹெஸ்ட் அவுஸ்சிலிருந்து அலுவலகம் வந்து போக கார், இருசக்கர வாகனம் என எல்லா வசதிகளையும் செய்து தந்தது அந்த நிறுவனம். ஆனால் அவர்களும் ஆறு மாதம் தாக்குப்பிடிக்கவில்லை காரணம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் வேலையில் பகிர்தல் இல்லாமல் வந்த வழியே திரும்பி போய்விட்டார்கள்.

அஸ்திவாரம் கட்டுவதற்க்கு முன்பு ஜன்னலுக்கு வர்ணம் பூசும் கொள்கைஉடையவர்கள் இந்த நிறுவனத்தினர். விற்பனைத்துறையில் அடித்தள வேலையாட்களை தேர்வு செய்யாமல் உயர்ந்த பதவிக்கு ஆட்களை அதிக சம்பளத்துக்கு எடுத்துவிட்டு மேல் மட்டமாக வேலை செய்தால் விற்பனை எப்படி உயரும். லாபம் குறைந்துவிட்டால் உடனடியாக ஆட்குறைப்பு என்ற மந்திரத்தை ஏவி நாலைந்து விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள்.

இங்கு வேலைக்கு ஆள் எடுப்பதே ஒரு வேலையாக வைத்துக்கொண்டு காலம் கடத்துபவர்கள் உண்டு. ஒருபுறம் வேலைக்கு ஆள் எடுப்பதும் மறுபுறம் வேலையை ராஜினாமா செய்வதும் வாடிக்கையாகிப்போன ஒன்று. வேலையை விட்டு செல்லும் பொழுது யாருக்கும் எந்த மன வருத்தமும் இருப்பதில்லை.

ஒவ்வொரு உயர் அதிகாரிகளுக்கும் தனி கேபின், ஒவ்வொரு கேபினுக்கும் ஒரு பீயுண், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஜெராக்ஸ் மெசின், அந்த ஜெராக்ஸ் மெசினிலிருந்து ஜெராக்ஸ் எடுத்து தர தனிப் பீயுண் ஆக மொத்தம் பீயுண்களின் எண்ணிக்கையே 35 க்கு மேல்.

இத்தனை வசதிகள் நிறைந்த கம்பெனியில் பணியில் அமர்ந்து நிறுவனத்துக்கு போட்டு கொடுக்கும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்து பணியில் வேலை செய்யாமலேயே காலத்தை ஓட்டலாம். நிறுவனத்தின் முட்டாள்தனமான முடிவுகளுக்கு தலை ஆட்டினால் வேலை தொடரும், எதிர்த்து பதில் பேசினால் வேலை காலி.

இங்கு நிர்வாகத்துக்கு பிடிக்காத நபர்களுக்கு சம்பளத்தை குறைத்துவிட்டு இடமாற்றம் கொடுப்பார்கள். பொருளாதார சரிவின் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டு வேலை செய்பவர்களும் உண்டு. அங்கிருந்து வேறு ஊருக்கு இடமாற்றம் சொல்லி மறுபடியும் சம்பளத்தை குறைத்து அனுப்ப முடிவு செய்வார்கள்.முடியாது என்று மறுத்தால் இங்கு வேலை இல்லை, வேண்டுமானால் நீங்களே ஒவ்வொரு துறைக்கும் சென்று எங்காவது வேலை இருக்கிறதா என்று பார்த்து நீங்களே என்ன வேலை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று முட்டாள்தனமாக சொல்வார்கள்.

தொடர்ந்து 20 நாட்கள் எந்த வேலையும் தரப்படாமல் போகவே போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று ராஜினாமா கடிதம் எழுதி தந்து விட்டு போய்விடவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்ப்பது.

இவ்வலவும் எழுதியிருக்கிறீர்களே நீங்க எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்.
மேலே சொன்ன நிறுவனத்தில் தான் நான் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். முதலில் 3000/= சம்பளம் குறைத்து ஜெய்ப்பூர்க்கு இடமாற்றம் பெற்று மறுபடியும் 6000/= குறைத்து பெங்களூர் செல்லச் சொன்னபோது வெகுண்டெழுந்து முடியாது என்று மறுக்கவே 20 நாட்கள் வேலை எதுவும் தராமல் இழுத்தடித்து அய்யோ ஆள விடுங்கடா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பியவன் வேறுயாருமல்ல சாட்சாத் நானே தான்.

என்ன கொடுமை சார் இது. எனக்கு வயது 42 இன்னமும் 25 வயது இளைஞனைப்போல் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.

1 comment:

dondu(#11168674346665545885) said...

இம்மாதிரி தனியார் துறையில் நிறுவனமா? அதுவும் குஜராத்திலா? ஆச்சரியமாக இருக்கிறதே.

சமீபத்தில் 1970-களில் திரையிடப்பட்ட “புன்னகை” படத்தில் ஜெமினி கணேசனுக்கு கிடைக்கும் முதல் வேலை நீங்கள் சொல்வது போலத்தான் இருந்தது. அவர் உடனே ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்.

அதில் என்ன சொன்னார்கள் என்றால், வெறுமனே ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இடத்தை வளைத்து போட வேண்டியது, பிறகு ஒரு தொழிலுக்கான லைசன்ஸையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டியது. பிறகு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது, பிறகு வேறு யாருக்காவது கணிசமான தொகைக்கு அந்த இடத்தையும் லைசன்சையும் மாற்றுவது என்றுதான்.

ஆனால் இன்னுமா அம்மாதிரி கம்பெனிகள் உள்ளன? கம்பெனியின் பெயரையாவது எழுதுங்கள் ஐயா, புண்ணியமாகப் போகும். வேறு சிலராவது ஏமாறாமல் இருக்கலாம் அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்