Wednesday, April 22, 2009

பெருமை

திருமண மண்டபத்துக்கு காலை பத்து மணிக்கு கிளம்பி விடுவது என தீர்மானித்து காலை ஏழு மணிக்கே தனது மனைவியை நினைவூட்டினான் அருண்.

மணி பத்தரை ஆன பிறகும் தனது மனைவி மேக்கப் அறையை விட்டு வெளிவராததை கண்டு ஆத்திரமானான்.

’’உங்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே லேட் பண்றதுதான், இதுவே என் பிரண்ட் சுகுமாரனோட மனைவியா இருந்தா, டைம் கொஞ்சம் கூட செலவு பண்ணாம சீக்கிரமா ரெடியாயிடுவாங்க, அவங்களப் பார்த்தாவது திருந்து!” என திட்டித் தீர்த்தான் அருண்.

ஒரு வழியாக இருவரும் தயாராகி திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார்கள். மண்டபத்தில் அருணும் அவனது நண்பர் சுகுமாரனும் சந்தித்துக்கொண்டனர்.

“கல்யாணமே எதுக்கு பண்ணிகிட்டோமுன்னு இருக்கு, சம்பாதிக்கிற பணத்த அப்படியே என் மனைவிகிட்ட குடுத்தா அதுலயிருந்து எந்த சேமிப்பும் பண்ணாம கண்ட கண்ட செலவெல்லாம் பண்றா!” தனது மனைவியைப் பற்றிய கவலையை சுகுமாரன் சொன்னபோது ‘ இதுக்கு நேரத்த செலவழிக்கிற என் மனைவி பரவாயில்ல!’ என்று தனது மனைவியை பெருமையாக நினைத்துக்கொண்டான் அருண்.

No comments: