அத்தியாயம்-1. (அறிமுகப் பாடல்)
கன்யாகுமரியின் கடலலைகள் ஆரவாரங்களுடன் கரைக்கு வருவதும் போவதுமாக அலைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த காற்று ஈரத்தையும் சேர்த்து வீசியதில் மழைத்துளி போல சிறு துளிகள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. சூரியனை மொத்தமாய் விழுங்கியிருந்த கடல் சுண்டு விரல் அளவுக்கு சூரியனை வெளியேற்றியதில் வெளிச்சம் லேசாக கசியத்தொடங்கியது.
திருநெல்வேலி சாரதா மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சூரியன் எழுந்து வரும் அழகை தரிசிக்க கவிந்திருந்த இருளையும் பொருட்படுத்தாமல் ஒரு தனியார் பேருந்தில் புறப்பட்டு வந்தார்கள் பிளஸ் டூ படிக்கும் தேவதைகள்.
பஸ் கடற்கரையில் வந்து நின்றதும் ஓ கோ ஓகோ என்ற குரல் எழுந்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் குரலுக்குரிய மாணவிகள் வரிசையாக இறங்க ஆரம்பித்தார்கள். மொத்தம் நாற்பது மாணவிகள் என்று கணக்கெடுத்தார்கள் நிர்மலா டீச்சர்.
‘’எல்லாரும் சூரிய உதயத்த பார்த்துட்டு எட்டு மணிக்கு டிபன் சாப்பிட பஸ்ஸுக்கு வந்திடணும், யாராவது லேட்டா வந்தா பைன் போட்டுடுவேன் புரிஞ்சுதா?’’ தனது மூக்குக் கண்ணாடியை விரலால் அழுத்தி ஏற்றிவிட்டு சொன்னார்கள்.
மணி ஆறைத் தொட ஐந்து நிமிடங்கள் மீதமிருந்தது, இரண்டு மணிக்கு மேல் நேரமிருக்கு என்றபடி தங்களுக்கு பிடித்த மாணவிகளோடு கடற்கரையின் இதமான மணலில் சூரியனை பார்த்துக்கொண்டே நடந்தார்கள் ஐந்து மாணவிகள்.
’' ஏய், அங்க பாருடி கடலுக்கு மஞ்சள் தேச்ச மாதிரி சூரியன் தெரியறான் என்னா அழகு பாத்தியா!'' புஸ்பா சூரியனின் அழகை ரசித்தபடி சொன்னாள்.
‘' இன்னும் கொஞ்ச நேரத்துல உன்ன ஒருத்தன் சுடப்போறான்''
`' யாருடி?''
’’சூரியன் தான்!''கொல்லென்ற சிரிப்பு சத்தம் எழுந்து அடங்காமல் தொடர்ந்துகொண்டிருந்தது. வெகுதூரம் வந்துவிட்டதை உணராமல் கால்கள் நடந்துகொண்டிருந்தன. ஆள் அரவமற்ற பகுதியில் வந்த பிறகு அனைவரின் முகத்திலும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.
’' ஏய் வாடி திரும்ப போயிடலாம்!''புஸ்பா எச்சரித்தாள்.
'’ பொழுது விடிஞ்சுகிட்டே இருக்கு, இதுல பயப்பட என்ன இருக்கு!'' அவளது தோழி சொன்னபோது புஸ்பாவுக்கு அது சமாதானமாக தெரிந்தது.
கடற்கரையின் ஓரத்திலிருந்த பாறைகளில் ஏறி அமர்ந்து அந்த குளிரிலும் சூரியனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பாறைகளுக்கிடையே மறைந்திருந்த லிங்கம் தனது கரங்களை புஸ்பாவின் பின் கழுத்து பகுதியை நோக்கி மெல்ல நகர்த்தினான்.
புஸ்பா சட்டென்று திரும்பவும் அய்யோ என்று அலறினாள். சட்டென்று அனைவரும் பாறையிலிருந்து மணலில் குதித்து ஓட ஆரம்பித்தார்கள். லிங்கமும் அவர்களை துரத்திக்கொண்டு ஓட ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள்.
புஸ்பா ஓட்டப்பந்தையத்தில் ஓடிவரும் முதல் மாணவியைப்போல, கண்மண் தெரியாமல் ஓடினாள்.
கடற்கரைக்கு வெகுதூரம் தள்ளி தென்னைமர கீற்றுகளால் மறைக்கப்பட்ட கடைகள் முன்புறம் திறந்து பாசி சங்கு வளையல் விற்பனை செய்துகொண்டும் பின்புறம் மறைக்கப்பட்டும் இருந்தது. கடையின் பின்புறம் ஓடி வந்த புஸ்பா சட்டென்று அந்த கடையின் பின் புற ஓலையை பெயர்த்து உள்ளே நுழைந்தாள் லிங்கமும் அவளைத்தொடர்ந்து உள்ளே நுழைந்தான்.
சிறிது நேரத்தில் அந்த கடையின் மேல்கூரை ஓலைகள் பறக்க லிங்கம் அதற்க்கு பின்னால் பறந்து அந்தரத்தில் மூன்று முறை டைவ் அடித்து மணலில் தொப்பென்று விழுந்தான். கடைக்கு உள்ளே இருந்த இருபத்திஐந்து வயதுக்கு சொந்தக்காரனான பழனி லிங்கத்துக்கு விட்ட குத்தின் வீரியம்தான் அவன் மேல்கூரையை பிய்த்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தான் என்ற விபரம் பின்னர் தான் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஒரு திரைப்படத்தின் ஹீரோவைப்போலே ஜெம்ப் செய்து மேல்கூரை வழியாக மணலில் குதித்து நின்றான் பழனி.
லிங்கம் தாக்கப்பட்டான் என்ற செய்தி எப்படி தெரிந்ததோ தெரியவில்லை ஐந்தாறு ரவுடிகள் திடீரென்று முளைத்து பழனியை வட்டமிட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிவிட்டது.
புஸ்பா திகைத்தபடி தனது தோழிகளின் தோழ்களைப்பற்றி பயந்தபடி நின்றாள்.
பழனி ஒவ்வொரு ரவுடிகளையும் பந்தாடினான். கொஞ்ச நேரத்தில் ரவுடிகள் சுருண்டு விழ பழனியை இருவர் தூக்கிப் பிடிக்க பூ மழை பொழிந்தது
ஏய் பழனி வந்தான் பழனி வந்தான் பாரு- இவன்
பட்டயத்தான் கிளப்பப்போறான் பாரு என்று பாடல் பாடி ஆட, கட் கட் என்று சொன்னார் இயக்குநர் பேரரசு.
2) பிரிய மனமின்றி
பேருந்துக்குள் அனைத்து தேவதைகளும் அமர்ந்திருக்க அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. புஸ்பா ஜென்னலோரம் அமர்ந்து எதிரிலிருந்த கடையில் இளநீர் வியாபாரம் செய்துகொண்டிருந்த பழனியை பார்த்துக்கொண்டிருந்தாள்.
பழனி இளநீர்காயை அரிவாளால் லாவகமாகச் சீவி வாடிக்கையாளருக்குத்தரும் ஸ்டையில் அவளுக்குப் பிடித்திருந்தது. சற்று நேரத்துக்கு முன்னால் தன்னை காப்பாற்ற நடந்த சண்டையில் தனி ஒருவனாக நின்று அத்தனை பேரையும் அடித்து துரத்திய அவனது வீரம் அவளை வெகுவாக கவர்ந்தது.
கடற்கரையில் உயிருக்குப் பயந்து ஓடியதில் புஸ்பாவுக்கு காய்ச்சல் கண்டிருந்தது. பொங்கலை சாப்பிட மனமின்றி பழனியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
" எல்லாரும் விவேகானந்தா பாறை, திருவள்ளுவர் சிலை, காந்திமண்டபம் சுற்றிப்பார்த்துட்டு மதியம் ஒரு மணிக்கு இந்த பஸ்ஸுக்கு வந்துடணும்'' நிர்மலா ஆசிரியை சொன்னதும் மாணவிகள் கோரஸ் குரலெழுப்பி பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொண்டார்கள்.
புஸ்பாவுக்கு பஸ்ஸை விட்டு இறங்கவோ, இடங்களை சுற்றிப்பார்க்கவோ மனசு வரவில்லை. அன்று முழுவதும் இப்படியே பஸ்ஸுக்குள் இருந்து பழனியை பார்த்துக்கொண்டிருக்கலாம் போல் தோன்றியது.
" என்ன புஸ்பா நீ வரலை!'' தோழிகள் அவளது தோளை உலுக்கி கேட்டார்கள்
" எனக்கு உடம்புக்கு முடியல, நீங்க போயிட்டு வாங்க, நான் பஸ்லேயே இருந்துடுறேன்!'' நடுக்கத்தோடு சொன்னாள் புஸ்பா.
பேருந்தை விட்டு இற்ங்கும்போது புஸ்பாவுக்கு உடம்புக்கு முடியவில்லை என்ற தகவலை நிர்மலா ஆசிரியையிடம் சொல்லிவிட்டு இறங்கினார்கள் அவளது தோழிகள்.
" சரி, நீங்க புறப்படுங்க, நான் புஸ்பாவுக்கு துணையா பஸ்ல இருந்துடுறேன்!'' சொல்லிவிட்டு தனது கைப்பையில் வைத்திருந்த குரோசின் மாத்திரை ஒன்றை புஸ்பாவுக்குத் தந்தார்கள் நிமலா ஆசிரியை.
புஸ்பா மாத்திரையை விழுங்கிவிட்டு தண்ணீர் குடித்த போது வெறும் வயிற்றில் போன மாத்திரை குமட்டிக்கொண்டு வர வாந்தி எடுத்தாள். அடி வயிற்றை பிசைந்துகொண்டு வந்த வாந்தி அவளது உடலின் சக்தியை அபகரிக்க அப்படியே மயங்கி சரிந்தாள்.
" அய்யய்யோ யாராச்சும் ஓடி வாங்களேன்" நிர்மலா ஆசிரியை புஸ்பாவை தாங்கி பிடித்துக்கொண்டு உரக்க கத்தினாள்.டீச்சரின் குரல் கேட்டு நிமிர்ந்த பழனி ஒரே தாவலில் பஸ்சுக்குள் ஏறினான்.
"என்னாச்சு டீச்சர்?"
" இவளுக்கு காய்ச்சல்ன்னு மாத்திர குடுத்தேன், சாப்பிட்டதும் வாந்தி எடுத்திட்டா!" பழனி சற்றும் தாமதிக்காமல் புஸ்பாவை அலக்காக தூக்கி தனது தோளில் போட்டுக்கொண்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு ஓடினான்.
புஸ்பாவின் வாயிலிருந்து வழிந்த எச்சில் அவன் அணிந்திருந்த ஆடையில் பட்டு ஈரமாகியது. அவனது ஓட்டமான நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவனுக்குப்பின்னால் ஓடினார்கள் நிர்மலா ஆசிரியை.
பழனி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அருகிலிருந்த பெஞ்சில் புஸ்பாவை படுக்க வைத்து விட்டு நிமிரவும் டாக்டர் ஓடிவந்தார். டாக்டர் புஸ்பாவின் கையைப்பிடித்து பார்த்து நர்ஸ்சிடம் குளுக்கோஸ் ஏற்றச்சொல்லிவிட்டு ஊசி ஒன்றைப்போட்டார்.
" பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல ரெண்டு மணி நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிடும்!"
அன்று மாலை சூரியன் மறைவதைப்பார்க்க யாருக்கும் மனமின்றி மாணவிகள் திரும்ப புறப்பட தயாராகி பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.ஜென்னலோரம் அமர்ந்திருந்த புஸ்பா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பழனியைப்பார்த்து கேட்டாள்.
" ஒரு இளநீர் தாங்க!"
பழனி கட்டி தொங்கவிட்டிருந்த இளநீர் குலையிலிருந்து ஒரு இளநீர் காயை வெட்டி அதில் ஸ்டிரா போட்டு கொண்டு வந்து தந்தான்.
" உங்க பேரென்ன?" சன்னமான குரலில் கேட்டாள் புஸ்பா.
தனது தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக்கொண்டு சொன்னான்
" பேரு பழனிச்சாமி அப்பிடி கூப்பிட்டா எவனுக்கும் தெரியாது, பழனியின்னு சொன்னாதான் தெரியும்"
" ரொம்ப நன்றி, நீங்க என்ன ரவுடிங்ககிட்ட இருந்து காப்பாத்தினதுக்கும் அப்பறம் ஆஸ்பிட்டலுக்கு கொண்டு போய் சேர்த்ததுக்கும்!"
" இதுக்கெதுக்கு நன்றி, பஸ் புறப்பட போவுது பார்த்து போங்க!"
" இளநீருக்கு எவ்வளவு காசு?"
" பரவாயில்ல போங்க"
பஸ் கிளம்பிக்கொண்டிருந்தது, புஸ்பா ஜென்னலுக்கு வெளியே தலையை நீட்டி கையசைத்து டாட்டா காட்ட, பழனியும் பதிலுக்கு டாட்டா காண்பிக்க அவனது கண்களிலிருந்து மறைந்தது தேவதைகள் வந்த அந்த பேருந்து.
(தொடரும்)
No comments:
Post a Comment