பூகம்ப பூமி, கலவர பூமி, குண்டு வெடித்த பூமி என்று குஜராத்துக்கு பல முகங்கள் உண்டு. ரயில் நிலயங்களில் அதிரடி சோதனைகள் செய்வதன் மூலம் தீவிரவாதிகள் தப்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் போலீசாரிடம் இருப்பது கண்டு வியந்து நின்றேன்.
குஜராத்தில் மணி நகர் ரயில் நிலயத்தில் மொத்தம் 53 நபர்களை பிடித்து வைத்து விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரையும் வரிசையாக நிற்க வைத்து பெயர், வயது, முகவரி, வேலை செய்யும் இடம், வசிக்கும் இடம் முதலியவற்றை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இதில் குஜராத்தில் குண்டு வைத்தவன் ஒருவனாவது இருக்கக்கூடுமென்று காலையில் எட்டு மணிக்கு டிக்கெட் முன்பதிவுக்கு வந்த நான் தீவிரவாதிகள் பற்றி நாலு விசயம் நாமும் தெரிந்து வைத்திருப்போம் என்று காத்திருந்தேன்.
மணி இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரையும் வரிசையாக சுடும் வெயிலில் நிற்க வைத்திருந்தார்கள்.
ரயில் நிலயத்தில் வந்திருந்த பயணிகள் ஒவ்வொருவரும் வரிசையாக நின்றிருந்தவர்களைப் பார்த்து என்ன தப்பு பண்ணினாங்க என்று விசாரிக்க துவங்கினார்கள். யாரும் பதில் சொல்ல தயாரில்லை.
சட்டென்று IRF வண்டி வர வண்டியில் அனைவரையும் ஏற்றினார்கள். நானும் அந்த வண்டியை பின் தொடர்ந்தேன். காலப்பூர் ரயில் நிலயத்தில் வண்டி நின்றது. அவர்கள் காவலுக்கென்று துப்பாக்கி ஏந்திய நான்கு போலீசார் காவலுக்கு நின்றார்கள். மீண்டும் வரிசையில் நிற்கும்படி சொன்னார்கள். ஒவ்வொருவரையும் பெயர் கூறி அழைத்து விசாரணைக்காக மாடியிலிருந்த அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். மாலை நான்கு மணிக்கு விசாரணை முடிந்து வெளியில் வந்தவரை சந்தித்து என்ன விஷயமென்று கேட்டேன். அவர் சொன்ன பதிலில் எனக்கு தலை சுற்றியது.
"ஒண்ணுமில்ல சார், அவசரத்துல ரயில் தண்டவாளத்த கிராஸ் பண்ணி அந்தபக்கம் போனேன், பிடிசுட்டாங்க, கிராஸ் பண்ணினது தப்பு தான், அதுக்குண்டான fine இருபது ருபாய மணிநகர் ரயில் நிலயத்திலெயெ வாங்கிகிட்டு அனுப்பியிருந்தா நான் வேலைக்கு போயி கூலி வாங்கியிருப்பேன். குண்டு வைக்கிறவங்கள பிடிக்க வக்கில்ல தண்டவாளத்த கிராஸ் பண்றவங்கள பிடிக்கிறாங்க '' என்று அன்றைய ஒரு நாள் கூலி போய்விட்டதே என்ற கவலையுடன் நடக்க ஆரம்பித்தார்.
அவரையும் அவரோடு வந்திருந்தவர்களையும் பார்க்க எனக்கும் பரிதாபமாக இருந்தது. தண்டவாளத்தை கிராஸ் பண்ணும்போது ரயில் வந்து மோதி இறந்தவர்கள் உண்டு தான், அதற்கான அறிவிப்போ விழிப்புணர்வோ அங்கு இல்லை. தண்டவாளத்தை கடக்கும் மனிதர்களை பிடிக்க காத்திருக்கும் போலிசார் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கையில் ஏன் கண்டிப்பதில்லை என்ற கேள்வியுடன் வீடு திரும்பினேன்
No comments:
Post a Comment