நாங்கள் கன்னியர்கள்
திருமணம் எனும் பூட்டை திறக்க
வரதட்சணை சாவி இல்லாத
ஜென்னல் கைதிகள்!
புகுந்த வீடு செல்ல முடியாமல்
பிறந்த வீட்டிலேயே வாழும்
வாழாவெட்டிகள்!
தினமும் மாப்பிள்ளை வரன்களின்
பார்வை அம்புகளுக்கு பலியாகும்
புள்ளிமான்கள்!
மாப்பிள்ளை வரன்களின்
நேர்காணலுக்குப் பிறகு
ராஜகுமாரர்களின் கனவுகள் மட்டுமே
மிச்சமாகிவிடுகின்றன!
வரதட்சணை இருந்தால்நிச்சயதார்த்தமும்
இல்லையென்றால் புறக்கணிப்புகளும்
எங்களுக்கு பழகிவிட்டன!
மாப்பிள்ளையை விலைக்கு வாங்கிவிட்டு
மாடிவீட்டு மயில்களெல்லாம்
தோகை விரித்தாடும்போது
குடிசை வீட்டு குயில்கள் நாங்கள்
வேதனையில் வாடுகிறோம்!.
வாழ்க்கை சுவர்களில்
வறுமை சித்திரம் வரைந்து வரைந்து
வசப்பட்டு போனவர்கள்!
தங்க நகைகளை
நகைக்கடைகளில் மட்டுமே
பார்த்து பார்த்து
பழகிப்போனவர்கள்!
அன்பார்ந்த வானொலி நிலையமே
கார்த்திகை மாசமடி
கல்யாண சீசமடி என்ற பாடலை
இனியும் ஒலி பரப்ப வேண்டாம்
இங்கே கல்யாணம் ஆகாமல்
நிறைய முதிர்கன்னியர்கள்
காத்துக் கிடக்கிறார்கள்!
நாங்கள் கன்னியர்கள்
திருமணம் எனும் பூட்டை திறக்க
வரதட்சணை சாவி இல்லாத
ஜென்னல் கைதிகள்
No comments:
Post a Comment