Friday, January 23, 2009

ஜெயிப்பது நிஜம்

இலையை எடுத்து டேபிளை துடைத்துக்கொண்டிருந்த ஏழு வயது சிறுவனை
வைத்த கண் எடுக்காமல் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம். சாப்பிட்டு முடிந்ததும் அந்த சிறுவனை அழைத்தார்.

’’இந்தாப்பா இந்த சூட்கேஸ வெளியில நிக்கற காருல கொண்டு போய் வெச்சிடு!'' சிறுவன் சூட்கேஸை தூக்கிகொண்டு நடந்தான். சந்தானம் கார் டோரை திறந்து வைக்க சூட்கேசை காருக்குள் வைத்தான் சிறுவன்.

’’உன் பேரென்ன ?''

‘’சரவணன்’’

சரவணன், சின்ன வயசுல உன்ன மாதிரி நானும் ஒட்டல்ல டேபிள் துடைச்சவன்தான், இண்ணைக்கு ஏழு ஒட்டல் வெச்சிருக்கேன், படிக்கவேண்டிய வயசுல உன்ன மாதிரி பசங்க ஒட்டல்ல வேல செய்யறதப்பாத்தா மனசு கஷ்டமாயிடும் அவங்கள என் சொந்த செலவுல படிக்க வெச்சு நல்ல நெலமைக்கு கொண்டு வந்திடுவேன், நீயும் என்கூட வந்தா உன்னையும் பெரிய மனுஷன் ஆக்கிடுவேன்!''

‘’சார் நீங்க என்மேல காட்டுற அக்கறைக்கு ரொம்ப நன்றி, இந்த ஒட்டல்ல நான் மட்டும் வேல பார்க்கல, என் அம்மாவும் வேல செய்யறாங்க, அதுமட்டுமில்ல இந்த ஒட்டல் என் அப்பாவோட சொந்த ஒட்டல், தொழில்ல நஸ்டம் ஏற்பட்டதால திடீர்ன்னு ஒருநாள் தற்கொலை பண்ணிகிட்டாரு அப்பாவுக்கு கடன் குடுத்தவரு இந்த ஓட்டல நடத்திகிட்டு எங்களையும் வேலைக்கு சேர்த்துகிட்டாரு, நான் பெரியவனாகி இந்த ஓட்டல விலைக்கு வாங்குவேன், இதுதான் என் லட்சியம்!'' சொல்லிவிட்டு ஓட்டலுக்கு வேகமாய் நடந்தான் சரவணன்.

இவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையுடன் காரை ஓட்டத்தொடங்கினார் சந்தானம்.


குமுதம் வார இதழில் வெளிவந்தது

1 comment:

கோகுலன் said...

கதை நன்றாக உள்ளது நண்பரே..