ஸ்கூல் வேன் பீஸ் கட்ட வந்த நான் அப்படியே என் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்லலாமென தீர்மானித்து, பக்கத்து கடைக்குச் சென்று நான்கு பைவ்ஸ்டார் சாக்லெட் வாங்கிக்கொண்டேன்.
முதலில் எனது மூத்த மகன் இளமதியன் படிக்கும் ஆறாவது வகுப்பு எங்கிருக்கிறதென்ரறு கேட்டு தெரிந்துகொண்டு மாடிப்படியேறினேன். தூரத்தில் என் வருகையைப் பார்த்ததும் பாதி சாப்பிட்ட கையோடு வேகமாக ஓடி வந்து என் கைகளை பிடித்துக்கொண்டான். அவனை வாரி அணைத்து வாங்கி வைத்திருந்த பைவ்ஸ்டார் சாக்லெட்டில் இரண்டை அவனுக்குத் தந்தேன். சாக்லெட் கிடைத்த சந்தோஷத்தில் மீதி சாப்பாடு அவனுக்கு மறந்து போனது.
’' மதிவதனி படிக்கிற கிளாஸ் ரூம் எங்கே இருக்கு?'' என்றேன்.
''நீங்க இங்கேயே இருங்க மம்மி நான் போயி தங்கச்சிய கூட்டிகிட்டு வர்றேன்!'' கைகளை அவசரமாக கழுவிவிட்டு வேகமாக ஓடினான்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் நீலம் வெள்ளை சீருடையில் உட்கார்ந்து சாப்பிடுவது பார்ப்பதற்க்கு ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் மகன் மட்டும் திரும்பி வந்தான்.
’’மம்மி தங்கச்சி சாயந்தரம் வீட்டுல வந்து உங்கள பார்த்துக்கிறேன்னு சொல்லி அனுப்பியிட்டா!'' எனக்கு பகீரென்றிருந்தது.
மாலை ஐந்து மணிக்கு வேனிலிருந்து இறங்கி வேகமாக வந்தாள் மதிவதனி.
‘’சாரி மம்மி ஸ்கூல்ல உங்கள பார்க்க ஏன் வரல தெரியுமா? நான் வந்தா கூடவே என் தோழி நிவேதாவும் வருவா, நீங்க என்ன தூக்கி வெச்சு கன்னத்துல கிஸ் பண்ணி சாக்லெட் கொடுப்பீங்க, இதெல்லாம் நிவேதா பாத்தா அவ மனசு கஸ்டமாயிடும் பாவம் அவ போன மாசம் நடந்த பஸ் ஆக்சிடென்டுல அவ அம்மா இறந்துட்டாங்க அவளுக்கும் அம்மா இருந்திருந்தா இது மாதிரி சாக்லெட்டெல்லாம் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு ஒரு பீலிங் வருமில்ல அதனாலதான் உங்கள பார்க்க வரல!'' மகளின் செயலை நினைத்து அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.
குமுதம் வார இதழில் வெளிவந்தது
No comments:
Post a Comment