Friday, October 17, 2008

பாட்டி

"டாடி, பாட்டிகிட்ட கதை கேட்கணும்போல இருக்கு, அம்மா கூட்டிக்கிட்டு போகமாட் டேங்கறாங்க!'' என்று அடம்பிடித்தான் இளமதியன்.``இவ்வளவுதானா, நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுறேன்!'' என்று அவனைச் சமாதானப்படுத்தினார் அவனது தந்தை.மறுநாள் காலையில் தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த முதியோர் இல்லத்துக்குச் சென்றார் அவர்.பேரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு கதை சொல்ல ஆரம்பித்தாள் பாட்டி.``கதை இதோட முடியல. அடுத்தவாரம் வா, மீதிக்கதைய சொல்றேன்!'' என்றாள் பாட்டி. கதை கேட்ட மகிழ்ச்சியில் சரியென்று தலையாட்டிவிட்டு தனது தந்தையோடு வெளியேறினான் இளமதியன். ``ஒரு குட்டி கதைய அருமையா சொல்லி முடிச்சுட்டு, பேரன்கிட்ட `கதை முடியல, அடுத்த வாரம் வா'ன்னு பொய் சொன்னீங்களே ஏன்?'' அந்தப் பாட்டியுடன் தங்கியிருந்த விசாலாட்சி கேட்டாள். ``அப்படியாவது என் மகனும் பேரனும் என்ன பார்க்க வர்றதுக்கு மறுபடியும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமில்லையா?'' என்றபோது, விடைபெற முடியாமல் துளிர்த்திருந்த ஒரு துளி கண்ணீரும் பொசுக்கென்று வெளியேறியது.

குமுதம் வார இதழில் வெளிவந்தது

No comments: