Friday, October 17, 2008

ஏமாற்றம்

ஊரிலிருக்கும் அப்பாவுக்கு மணியார்டர் அனுப்பி வைத்தால் தாமதமாகப் போய்ச் சேருமென்று கருதி, வங்கியில் அப்பா பெயரில் கணக்கு ஒன்று தொடங்கி டெபிட் கார்டும் வாங்கித்தந்தேன்.சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக அப்பா கணக்கில் பணம் போட்டுவிட்டு தகவல் தெரிவித்தேன். ஏ.டி.எம் சென்டரிலிருந்து பணம் எடுத்துக்கொண்டதாக அப்பாவும் தகவல் தெரிவித்தார்.அடுத்து நான்கு மாதங்கள் தொடர்ந்து வங்கியில் பணம் போட்டும் அவர் எடுக்கவில்லை.தொலைபேசியில் அப்பாவை தொடர்பு கொண்டு “வங்கியிலிருந்து ஏன் பணம் எடுக்கவில்லை” என்று கேட்டேன். ``முன்னயெல்லாம் மணியார்டர் வரும். நீ பணத்த அனுப்பியிருக்கிற விசயத்த தபால்காரர் வந்து சொல்றப்போ கேக்குற என்க்கு ஒரு சந்தோஷம், அந்த பணத்துலயிருந்து அஞ்சோ பத்தோ இனாமா தபால்காரருக்கு தர்றப்போ அவர் முகத்துல தெரியுற மகிழ்ச்சி இதெல்லாம் டெபிட் கார்டுல பணம் எடுக்கறப்போ கிடைக்கலப்பா என்ற போது அவரது ஏமாற்றம் புரிந்தது.

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

No comments: