திருவிழா என்றாலே உறங்கி கிடக்கும் ஊர்களெல்லாம் உற்சாகப்பட்டுவிடும்.அதிலும் நவராத்ரி என்றால் குஜராத் மாநிலமே குதூகலப்பட்டுவிடும், காரணம் அவர்களின் அழகிய நவராத்திரி நடனங்கள்.தாண்டியா ஆட்டமும் ஆட குஜராத் குமரிகள் ஆட என்று காதலர் தினம் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அது நூற்றுக்கு நூறு உண்மைதான். நவராத்திரி தினங்களில் நடனம் ஆடாத குமரிகளை குஜராத்தில் பார்க்கவே முடியாது.
நரகாசுரனை அழித்து அவன் இறந்த நாளை தீபாவளி திருநாள் என்று கேரளாவைத் தவிர இதியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இதைப்போல ராமன் இராவணனை வதம் செய்து அழித்த தினத்தை வெற்றியின் அடையாளமாக கருதி ஒன்பது தினங்கள் நவராத்திரி கொண்டாடி மகிழ்கிறார்கள் குஜராத் மக்கள்.
இன்னும் ஒரு சாரர் துர்கா, லட்சுமி, சரசுவதி ஆகிய மூவரையும் வழிபடும் நாட்கள் நவராத்ரி என்று கொண்டாடுகிறார்கள். இந்த நவராத்ரி நாட்களில் அனைவரும் வயது வித்யாசமின்றி நடனமாடி தங்களது மகிழ்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நடனத்தை கர்பா நடனமென்று சொல்வதுண்டு. இது பெண் சுதந்திரத்தின் மற்றுமொரு அடையாளமாகவே கருதப்பட்டு வருகிறது. ஒரு பெண்ணின் தந்தையோ அல்லது கணவனோ எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல் அந்த ஒன்பது இரவுகளிலும் சுதந்திரமாக பெண்களை நடனமாட அனுமதித்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
எந்தவித கவலையுமின்றி குடும்பமாகவோ, அல்லது ஒரு குழுவாகவோ மைதானத்தில் ஆடுவது பார்ப்பதற்கு படு ரம்யமாக இருக்கும். நம்மூர்களில் கோவில் திருவிழாவின் போது மேடை அமைத்து அதில் கலை நிகழ்சிகள் நடத்துவார்கள். நிகழ்சியை கண்டு களிப்பவர்கள் மேடையின் முன் அமர்ந்தோ அல்லது நின்றோ பார்க்கவேண்டும். ஆனால் குஜராத் நவராத்ரிகள் அப்படி அல்ல, பெரிய மேடை அமைத்து அதில் இன்னிசை கச்சேரி நடத்துவார்கள். மேடையின் முன்பு வட்ட வடிவமாக சுமார் 1500 அடிவரை அனைவரும் நடனமாடுவதற்கென்றே காலியாக இடம் போட்டிருப்பார்கள்.
ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளிலிருந்து வரும்பொழுதே நடனத்திற்கென்றெ பிரத்யோக முரையில் வடிவமைக்கப்பட்ட ஆடை அணிந்து வருவார்கள். கண்ணாடிகள், சிப்பிகள், சம்கி போன்ற நுண்ணீய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளையே அதிகம் விரும்பி அணிவார்கள்.
நெற்றியில் சுட்டி, கை நிறைய வளையல்கள், கால்களில் கொலுசு, தண்டை அணிந்துகொண்டு கைவிரல்களிலும் கால்விரல்களிலும் மருதாணி போட்டுகொண்டு குஜராத் குமரிகள் ஆடுவது கண்கொள்ளா காட்சியாகும். சில பெண்கள் தலை மீது ஆறு மண் பானைகள் வரை அடுக்கி வைத்து அது கீழே விழுந்து விடாமல் ஆடுவது வெகு சிறப்பாக இருக்கும்.
இருபது பேர், பத்து பேர், ஏழு பேர் என தனித்தனி குழுக்களாக பிரிந்து நடனமாட ஆரம்பிப்பார்கள். நடனமாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமே தவிர நடனத்தை கண்டு ரசிப்பவர்கள் மிக குறைவே. பெரிய பெரிய கிளப்புகள் தங்கள் வசதிக்கேற்ப மிகப்பெரிய இன்னிசை கச்சேரிக்கு ஏற்பாடு செய்து நடனப்போட்டி வைத்து மிகச் சிறப்பாக நடனமாடும் குழுக்களுக்கு பரிசு வழங்குவதுண்டு.
உலகின் மிக நீள நடனமென்று குஜராத் நவராத்ரி ஆட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. ஊரே திருவிழா மயம் போல் காட்சி அளிக்கும். ஆரம்பத்தில் நவராத்ரி நடனங்கள் விடியும்வரை தொடரும் கூத்தாகவே இருந்து வந்தது. தற்பொழுது இரவு ஒரு மணி வரை மட்டுமே நடத்தப்படவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள்.
நவராத்ரிகளில் காதலர்கள், திருமணம் நிச்சயமானவர்கள் ஆடும் ஆட்டம்தான் அரங்கத்தை அமர்களப்படுத்தும். தனது காதலனுடன் கைகோர்த்து நடனமாடுவதை குடும்பத்திலுள்ளவர்கள் பார்த்தாலும் கடிந்து கொள்வதில்லை. நடனமாடும் பெண்களின் சிகை அலங்காரம் வெகு சிறப்பாக இருக்கும். தலைமுடிகளை பல டிசைன்களில் அலங்கரித்திருப்பார்கள். சிலர் ஒரு ரிப்பன் கூட கட்டாமல் தலைவிரி கோலமாக வும் ஆடுவார்கள்.
நடனமாடத்தெரியாத ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ குஜராத்தில் பார்ப்பது கடினம், அந்த அளவிற்கு சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நடனம் கற்றுத் தருகிறார்கள், கூட்டத்தில் அனைவரையும் கவர்ந்துவிடுவது இரண்டு வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் நடனம் தான். தன் தாயின் ஆட்டத்தைப் பார்த்து அப்படியே ஆடிக்காட்டுவது பிரமிப்பாக இருக்கும்.
காந்தியடிகளின் சுதந்திரக் கனவு என்பது ஒரு பெண் கழுத்து நிறைய நகை அணிந்துகொண்டு இரவு 12 மணிக்கு தன்னந்தனியாக நடந்து வரவேண்டும் என்பது தான். அது குஜராத் மாநிலத்தை பொறுத்த வரை உண்மையே.பெண்கள் எந்தவித பயமுமின்றி தனியாக இருசக்கர வாகனத்தில் இரவு ஒருமணிக்கு மேல் செல்வதை கண்கூடாகக் காணலாம். ஒரே ஒரு வித்தியாசம் குஜராத் பெண்கள் அதிகம் நகை அணிவதில்லை. தமிழகத்து பெண்களைப்போல நகைமோகம் அவர்களிடம் இல்லை. ஒரு சிறு மாலை அணிந்து கொண்டோ அல்லது அணியாமலோ செல்வதுதான் குஜராத் குமரிகளின் வழக்கம்.
நவராத்ரி தினங்களில் பெண்களுக்கு சுதந்திரம் இருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாக இருந்தாலும், தமிழ் நாட்டைபோல கட்டுப்பாடுகள் இல்லாதிருப்பது பெரும் குறையாகவே உள்ளது. காதலனும் காதலியும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருப்பது இந்த நவராத்ரி தினங்களில் சகஜம், இதனால் நவராத்ரிக்கு பிறகு கருக்கலைபுகள் அதிகம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வருடம் ஆணுறை விற்பனை 50% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
பெற்றவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு நழுவிவிடும் பெண்களையும், திருமணமான ஆண்கள் வேறு பெண்களை நாடிச்செல்வதையும் கண்காணிக்க தனியார் டிடெக்டிவ் ஏஜென்சிகளை நாடியிருக்கிறார்கள் பெற்றோர்கள். இதன்மூலம் தவறுகள் நடப்பது தவிர்க்கப்பட்டுவிடும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.
கட்டுப்பாடுகள் இல்லாமல் போவதால் சில அசிங்கங்கள் அரங்கேறிவிடுகின்றன, அதை தவிர்த்துப் பார்த்தால் குஜராத் பெண்களின் துயரங்களை துடைத்தெறியும் நவராத்ரிகள் அவர்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளே.
வெளிச்சம் உங்கள் கையில் மாத இதழில் வெளிவந்தது
No comments:
Post a Comment