Friday, October 17, 2008

அப்பப்பா

மாலாவுக்கு வரன் பார்த்த விஷயத்தை அவளிடம் சொன்ன போது வேண்டாமென்று மறுத்தவளை வெறுப்புடன் பார்த்தார் மணிமாறன்.
``அப்பா ரொக்கம் நகையின்னு ரெண்டு லட்ச ரூபாய் இல்லாம என்னை யாருக்கும் உங்களால கட்டி வைக்க முடியாது. அந்தப் பணத்த என்கிட்ட குடுத்துடுங்க. காட்டன் வலை தயாரிக்குற கம்பெனிக்கு வேலைக்குப் போற நானே, சுயமான காட்டன் வலை தயாரிக்குற கம்பெனி ஆரம்பிச்சு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணி நிறைய இலாபம் சம்பாதிச்சு தர்றேம்பா, எனக்கும் என் தங்கச்சி கல்யாணத்துக்கும் அது உதவும்ப்பா!'' மாலாவின் வார்த்தைகளைக் கேட்டதும் மணிமாறனுக்கு அது நகைப்பாய் தோன்றியது.
``இருக்குற பணத்தைத் தொலைக்கிறதுக்கு வழிசொல்ற!'' என்று மறுத்தார் மணிமாறன்.
``யாரையோ மாப்பிள்ளையின்னு நம்பி பணத்தக் குடுக்கத் தயாரா இருக்கற நீங்க, பெத்த பொண்ண நம்பமாட்டேங்கறீங்க!'' மாலாவின் கேள்வி நன்றாகவே உறைத்தது மணிமாறனுக்கு.
``எப்போ கம்பெனி ஆரம்பிக்கப் போற!'' என்ற அவரது பதிலில் நம்பிக்கைகள் மெல்ல மெல்ல சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்தன..

குமுதம் வார இதழில் வெளிவந்தது

No comments: