அரிசி வாங்கும் ஒவ்வொருவருக்கும் இலவசமாக மரக்கன்று ஒன்றை தந்தார் ரேசன் கடைக்காரர் பொன்னுமணி.
“ செல்லாத்தா இந்த மரக்கன்ற உன் வீட்டு முற்றத்து ஓரத்துல நட்டு வளர்த்தணும், அதிகாரியிங்க வந்து பார்ப்பாங்க, நல்லா வளர்ந்துடிச்சுன்னா வருசத்துல ஒரு நாள் பத்து கிலோ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர இலவசமாக குடுத்துடுவோம்!” செல்லாத்தா சரியென்று தலையாட்டி விட்டு அரிசியோடு மரக்கன்றும் வாங்கிச் சென்றாள்.
“ஏங்க அரிசி தர்றப்போ மரக்கன்று தரணுமுன்னும் வருஷத்துல பத்து கிலோ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர இலவசம், இப்பிடி எதுவும் அரசாங்கத்துல அறிவிக்கலையே நீங்க சொல்றீங்க!” அரிசி வாங்க வந்த வேறொரு பெண் கேட்ட போது பொன்னுமணியின் குரல் தாழ்ந்தது.
“வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்முன்னு சொல்றதோட சரி, யார் செய்யறா, அதனால தான் என் சொந்த செலவுல மரக்கன்று வாங்கி வந்து தினமும் பத்து பேருக்கு இலவசமா தர்றேன். என்னொட ஆர்வத்த பார்த்துட்டு பத்து கிலொ அரிசி, ரெண்டு கிலோ சர்க்கர வீதம் எல்லாருக்கும் தர்றதா ஒரு தொண்டு நிறுவனம் ஏத்துகிட்டாங்க, இத அரசாங்கம் செய்தா நல்லா தான் இருக்கும், யார் செய்வா?” என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது எடை கூடுதலாய் கிடைப்பதை உணர்ந்தாள் அந்த பெண்.
குமுதம் வார இதழில் வெளிவந்தது
No comments:
Post a Comment