Wednesday, October 3, 2012

எகிப்து தேசத்தில் யோசேப் - நாடக விமர்சனம்


ஐரேனிபுரம் பால்ராசய்யா எழுதி பல மேடைகளில் நடிக்கப்பட்ட எகிப்து தேசத்தில் யோசேப் எனும் நாடகத்தை வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தில் நடிக்கப்பட்டபோது ஒரு பார்வையாளனாக அந்த நாடகத்தை பார்க்கும்  வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

விவிலியத்தில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் ஒரு சிறந்த நாடகமாக நடிக்கப்பட வேண்டுமென்றால் அதற்கு யோசேப் கதை தான் மிக சிறந்த தேர்வு.
யாக்கோபு தனது மகன் யோசேப்புக்கு அங்கி தைத்துக்கொடுக்கும் காட்சியோடு துவங்கி அவன் சகோதரர்கள் அவன்மீது பொறாமைப்பட்டு அவர்கள் ஆடு மேய்க்கச் செல்வது அவனை தேடிச்செல்லும் யோசேப்பை பாளும் கிணற்றில் தூக்கி வீசுவது, பின்பு அவனை ஒரு வணிகனுக்கு வியாபாரம் செய்வது, அவன் எகிப்து தேசம் சென்று அதிகாரியின் வீட்டில் வேலை செய்வது, அந்த வீட்டின் எஜமானியம்மா அவன் மீது மையல் கொள்வது, பின்பு அவன் சிறையிலடைக்கப்பட்டு வருந்துவது, மன்னரின் கனவுகளுக்கு பதில் சொல்லி அதன் மூலம் ஆளுநராவது, வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் யாக்கோபு தனது மகன்களை தானியம் வாங்க அனுப்புவது, சகோதரர்களை அடையாளம் கண்டு தனது தந்தை யாக்கோபை வரவழைத்து அவரிடம் ஆசி வாங்குவது என்று இரண்டு மணி நேரம் நாடகம் விறுவிறுவென்று நடக்கிறது.

அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து மிக சிறப்பாக நடித்துள்ளார்கள், குறிப்பாக யோசேப்பாக நடித்த வேங்கோட்டைச்சேர்ந்த பிரதாப்பின் நடிப்பு அருமை. அதுபோல யாக்கோபாக நடித்த பாலோட்டை சேர்ந்த சேம் தத்ரூபமாக நடித்துள்ளார். அதிகாரியாக நடித்த தேவகுமார், பார்வோன் மன்னராக நடித்த இந்த நாடகத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதிய ஐரேனிபுரம் பால்ராசய்யா, காமடியன்கள் என்று அனைவரின் நடிப்பும் மிகவும் ரசிக்க வைத்தது.

யோசேப் இறந்தான் என்ற செய்தி கேட்டு துடிக்கும் யாக்கோபு “ மகனே உன் தோழிலே சாய, எனக்கிப்போ ஆசையா இருக்கு’’ என்ற பாடலை பாடியவர் பின்னணிப்பாடகர் ஜேசுதாஸ் குரலில் பாடியிருப்பது சிறப்பு.

தேவஜனமே தேவ ஜனமே மகிழ்ந்து களிகூருங்கள் என்ற பாடலும், தேவ எந்தன் தேவா உந்தன் உயிரென பணிந்தேன் உந்தன் பாதம் என்ற பாடல்களுக்கு இசை அமைத்த மலமாரி ஜோய் அவர்களுக்கு ஒரு பூச்செண்டு தரலாம். மிக அற்புதமாக பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

எல்லா கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடக்கும் திருவிழாக்களில் நடத்தப்படவேண்டிய அற்புதமான நாடகம்.
ஸ்னேகங்களுடன்
குழிவிளை விஜயகுமார்
பத்திரிகை நிருபர்
நன்றி : புகைப்படம் உதவி : சேவியர்தாசையன்

எகிபது தேசத்தில் யோசேப் நாடகத்தின் ஒரு காட்சி

                                 காட்சி-1
இடம்         : வீடு
அ.வகிப்போர்: யோசேப், யாக்கோபு, சகோதரன், சிமியோன், பென்யமின்
அமைப்பு:     (யாக்கோபு அங்கி ஒன்றை தைத்துக்கொண்டிருக்க யோசேப் வருகிறான்)

யோசேப்:     தந்தையே…என்ன விந்தை இது, தனியாக அமர்ந்து அங்கி தைக்கிறீர்களே, தங்களுக்கு அங்கி தேவையென்றால், ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருந்தால் நான் வடிவமைத்து தைத்து தந்திருப்பேனே…உங்கள் ஆசையை நிறைவேற்றி இருப்பேனே.. இப்படி தாங்கள் உடல் வருந்தி அங்கியை தைக்கலாமா?

யாக்கோபு:    மைந்தனே…என் அன்புக்கு அடிபணிபவனே…என் அன்பைப்பெற்று, என் சொல்படி கேட்டு, எனக்காக உயிரையும் விட தயங்காதவன் நீ, உன் மீது எனக்கு கொள்ளை பிரியமுண்டு, இந்த அங்கி எனக்கல்ல, என் ஆசை மகனே உனக்குத்தான்.

யோசேப்:     என்ன….இந்த அங்கி எனக்காகவா? தங்களின் வார்த்தை என்னை வியப்பூட்டுகிறது, பாசம் காட்ட தங்களுக்கு மைந்தர்கள் பலரிருக்க என் மீது பிரியம் வைத்து இந்த அங்கியை எனக்காக தைத்தீர்களே, நான் எத்தனை மகிழ்ச்சிக்குரியவன், ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பும் பாசமும் சடுதியில் விலகுவதில்லை. இந்த அங்கியை நீங்கள் எனக்களித்தால் என் தமையன்கள் பொறாமைப்படுவார்கள், அதை நினைத்தால் தான் என் உள்ளம் தடுமாறுகிறது.

யாக்கோபு:    மகனே…என் அன்புக்கு அடிபணிபவன் நீ ஒருவன் தான். உன் மீது நான் செலுத்தும் அன்பு நிலையானது, நிரந்தரமானது. அதனால்தான் இந்த அங்கியை உனக்காக வடிவமைத்தேன், இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது. இதோ இந்த அங்கியைப் பெற்றுக்கொள், நான் தோட்டம் வரைச் சென்று வருகிறேன், நீ இந்த அங்கியை அணிந்துகொண்டு தான் மறுபடி என்னை சந்திக்க வேண்டும்.

யோசேப்:     சரி தந்தையே…அப்படியே செய்கிறேன்.
              (யாக்கோபு உள்ளே போகிறான்) (சகோதரன், சிமியோன், பென்யமின் வருகிறார்கள்)

யோசேப்:     அண்ணா…இதோ பாருங்கள். நம் தந்தை எனக்காக தைத்து தந்த அங்கி. நன்றாக இருக்கிறதா பாருங்கள்.
              (சகோதரன் அங்கியை வாங்கி வீசி எறிகிறான்)

சகோதரன்:    யோசேப்…நீ எங்களை முட்டாளாக்கியது போதும், தந்திரமாக பேசி நம் தந்தையை அபகரித்ததும் போதும், அவருக்கு அடி பணிந்து அவரின் அன்பை மொத்தமாகப் பெற்றதும் போதும்.

சிமியோன்:    மூத்தவர்கள் நாங்களிருக்க இளையவன் உனக்கு அங்கி தைத்து தந்திருக்கிறார் நம் தந்தை. இந்த வீட்டில் எங்களுக்கில்லாத அன்பு உனக்கு கிடைத்திருக்கிறது, இதை நாங்கள் ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம்.

பென்யமின்:   அண்ணா, நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம் தந்தையை ஏமாற்றி இவன் ஒருவன் மட்டும் நல்ல பெயர் வாங்கிக்கொள்ள வேண்டும், நாமெல்லாம் நம் தந்தைக்கு விரோதிகளாய் வாழ வேண்டுமா?

யோசேப்:     என்ன வார்த்தை கூறுகிறீர்கள், நம் தந்தைக்கு விரோதியாய் நீங்கள் மாற அதற்கு காரணம் நானா? பெற்ற மகன் தந்தையிடம் பாசமாக இருப்பது தவறா? தந்தையின் சொல் கேட்டு நடப்பது குற்றமா? என் மீது ஏன் இப்படி வீண் பழி சுமத்துகிறீர்கள்?

சகோதரன்:    நீ நம் தந்தையிடம் அளவுக்கதிகமாக அன்பு வைத்தாய், பாசம் வைத்தாய், வேசம் காட்டும் உன்னை நம் தந்தைக்கு பிடித்துவிட்டது. நம் தந்தைக்கு மொத்தம் 12 புதல்வர்கள், அதில் உன் மீது மட்டும் ஏன் இந்த அளவு கடந்த பாசம். நீ உன் கள்ளத்தனமான பேச்சால் நம் தந்தையை மயக்கி வைத்துள்ளாய்.

சிமியோன்:    இவனுக்கு நம்மையெல்லாம் அடக்கியாளும் அதிகாரம் வேண்டுமென்று ஆசைப்படுகிறான், இவன் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு நாமெல்லாம் அடிமைகளாக இருக்க வேண்டுமென்று கனவு காண்கிறான்.

யோசேப்:     என்ன..? எனக்கு உங்களை அடிமையாக்கும் எண்ணமா? இல்லவே இல்லை. உங்களுக்கும் சரி நம் தந்தைக்கும் சரி, அன்புக்கு கட்டுப்பட்டு வாழும் ஒரு தம்பியாகத்தான் வாழ ஆசைப் படு கிறேனே தவிர, உங்களை அடக்கி ஆளும் எண்ணம் எனக்கில்லை.

பென்யமின்:   இவன் சொல்வதை நம்பாதீர்கள். நேற்று இவனொரு கனவு கண்டதாகச் சொன்னான். வயலில் அறுவடை முடிந்து கதிர்களை நாமெல்லாம் கட்டுகளாய் கட்டிக் கொண்டிருந்தோமாம், இவனது கதிர்கட்டு திடீரென எழுந்து நின்றதாம், இவனது கதிர்கட்டை நம்முடைய கதிர்கட்டுகள் வணங்கி நின்றதாம்.

சிமியோன்:    இதற்கு முன்பும் இவன் இதுபோல் இன்னொரு கனவு கண்டதாகச் சொன்னான், சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் இவனை வணங்கியதாகச் சொன்னான். நம் தந்தையின் அன்பு இருக்கிறது என்று கருதி எங்களிடம் அதிகாரம் செலுத்தலாம் என்று கனவு காணாதே…

சகோதரன்:    தம்பியர்களே…இவனோடு இனியென்ன பேச்சு, வாருங்கள் நாமெல்லாம் சேர்ந்து பக்கத்து ஊரான செக்கேமிற்கு ஆடு மேய்க்கச் செல்வோம், இவன் இங்கேயிருந்து நம் தந்தைக்கு பணிவிடை செய்யட்டும்.
              (மூவரும் புறப்படுகிறார்கள்)
  
யோசேப்:   அண்ணா என்னிடம் அன்பாக இருப்பதற்கு பதிலாக ஆத்திரப்படுகிறீர்களே, பாசமாக இருக்க வேண்டிய என்னிடம் பழிவாங்கும் விரோதிகளைப்போல் நடந்து கொள்கிறீர்களே, தந்தையிடம் அன்பு காட்டுவது தவறா? அவர் சொல் கேட்டு நடப்பது குற்றமா? என்னை வேதனைப்படுத்தி விட்டு சென்று விட்டீர்கள், என் மீது வீண் பழி சுமத்தி விட்டு சென்றீர்கள், தேவனே…என் மீது வெறுப்பைக்காட்டும் இவர்கள் என் மீது அன்பு செலுத்தும் அண்ணன்களாக மாற்றிக்காட்டும்.
              (யாக்கோபு வருகிறான்)

யாக்கோபு:    மகனே…ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய், உடல் சோர்ந்திருக்கிறது, முகம் வாடியிருக்கிறது, உன் உள்ளம் நொந்து போகும்படி கயவர்கள் கடும் சொற்களால் ஏசினார்களா? என்ன நடந்தது மகனே…ஏனிந்த முகவாட்டம்.

யோசேப்:     தந்தையே…தவறிழைக்கவில்லை நான், இருந்தும் கடும் சொற்களால் என்னை காயப்படுத்திவிட்டார்கள். அன்பு காட்டி பேசினேன், அவர்களோ என்னை வம்பு செய்யும் நோக்கோடு வசை மாரிப் பொழிந்தார்கள்.

யாக்கோபு:    உன்னிடம் வம்பிழுத்த அந்த கொடியவர்கள் யார்? உன் மனம் நோகும்படி உன்னை துன்புறுத்தியவர்கள் யார்? என் அன்புக்கு பாத்திரமானவனே, உன் மனம் நோகும்படி நடந்து கொண்டது யார்? சொல் மகனே சொல்.

யோசேப்:     வேறு யாருமல்ல தந்தையே..என் சகோதரர்கள் தான்,  அன்பாய் நீங்கள் தைத்துத் தந்த அங்கியை அவர்களிடம் காட்டினேன், பொறாமையின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்கள். தாங்கள் என்னிடம் மட்டுமே அன்பு காட்டுவதாய் கூறி என்னை கடும் வார்த்தைகளால் திட்டி விட்டு சென்று விட்டார்கள்.

யாக்கோபு:    மகனே…அறிவிலிகள் அவர்கள், மூத்தவர்கள் என்றாலும் முட்டாள்கள், அவர்கள் சொல் கேட்டு மனம் தளராதே, நீ தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவன், கவலைகளை மறந்துவிடு, என்றும்போலவே என்னோடு அன்போடு இருந்துவிடு, இந்த யாக்கோபின் அன்பு எப்பொழுதும் உன்னிடம் நிலைத்திருக்கும், போய் குளித்து உடை மாற்றி விட்டு வா.

யோசேப்:     அப்படியே செய்கிறேன் தந்தையே.
              (யோசேப் போகிறான், சகோதரன் வருகிறான்)

சகோதரன்:    தந்தையே…ஆட்டு மந்தைகளை அழைத்துக்கொண்டு செக்கேமிற்குச் செல்கிறோம், அங்கு பயிர்கள் பல உண்டு, நம் ஆட்டு மந்தைகள் அங்கு மேய்ந்தால், கொழுத்த ஆடுகளாய் மாறும், ஆடுகளை அழைத்துக்கொண்டு நானும் என் சகோதரர்களும் செல்கிறோம், விடை கொடுங்கள்.

யாக்கோபு:    சகோதரர்கள் அனைவரும் என்றால் யோசேப்பையும் அழைத்துச் செல்கிறீர்களா? வேண்டாம், என் அன்பிற்குரிய மகன் யோசேப்பை நீங்கள் அழைத்துச் செல்ல வேண்டாம். அவன் ஒருவன் மட்டும் என்னுடனே இருக்கட்டும், அல்லாமலும் அவன் மீது உங்களுக்கு வெறுப்பு வந்து விட்டது, நான் ஆசையாய் அங்கி ஒன்றை தைத்து கொடுத்ததும் உங்களுக்கு பொறாமை வந்து விட்டது.யோசேப்பின் மனம் நோகும் படி நீங்கள் நடந்து கொண்டீர்கள், அவனை உங்களுடன் அழைத்துச் செல்ல வேண்டாம், நீங்கள் எல்லோரும் போங்கள்.

சகோதரன்:    அப்படியே செய்கிறேன் தந்தையே..
                                         திரை

No comments: