Saturday, September 22, 2012

நீல கேசி அம்மன் - சிறுகதை


சுவேதா பொட்டக்குளத்தில் குதித்தபோது அவளுக்கு நீச்சல் தெரியும் என்ற நம்பிக்கையோடு பதட்டமில்லாமல் அவள் எவ்வளவு மணிநேரம் உள்நீச்சல் அடிக்கிறாள் என்று நேரம் கணக்கிட்டு அவள் எப்பொழுது மேலே தெரிவாள் என்று ஆவலோடு பார்த்தபடியே நின்றார்கள் அவளோடு வந்த சிறுமியர்கள். தண்ணீருக்கு வெளியே நீர்க்குமிழிகள் பல உடைந்து வெளியேறியது. ஐந்து நிமிடங்கள் கரைந்த பிறகும் சுவேதா எழுவதாய் இல்லை. அவளோடு குளித்துக்கொண்டிருந்த சிறுமியர்கள் பயத்தில் நடுங்கினார்கள்.

``அய்யய்யோ அக்காவக் காணோம்!’’ சிறுமிகளின் அழுகைக்குரல்கள் அந்த குளக்கரை முழுவதும் எதிரொலித்தது.

எதிர் திசையில் குளித்துக்கொண்டிருந்த ரமேஷ்சும் மணிகண்டனும்  நீச்சலடித்தபடியே வந்து சேர்ந்தார்கள். இருவரும் சுவேதா குதித்த பகுதியில்  மூழ்கி தேடினார்கள். அவள் தட்டுப்படுவதாக இல்லை.

மீண்டும் ஆழமாய் தேடியபோது குளத்தின் தரைமட்டத்தில் ஒரு உருவம் தலைவிரி கோலமாய் நிற்பதுபோல் தெரிய ரமேஷ் பயந்தபடி கரையேறினான். அவனைத்தொடர்ந்து மணிகண்டனும் கரையேற அனைவரது முகங்களிலும் பயம் பயமில்லாமல் படர்ந்திருந்தது.

குளத்திற்கு குளிக்க வந்துகொண்டிருந்த ஷிபு, குளத்தைச்சுற்றி ஆட்கள் கலவரத்துடன் நிற்பதைப்பார்த்ததும் தனது நடையின் வேகத்தை துரிதப்படுத்தி பின்பு ஓட்டமெடுத்தான். காற்று அவனை எதிர்திசையில் வழிமறித்தது. காற்றை கிழித்துக்கொண்டு ஓடினான் ஷிபு.

வந்த வேகத்தில் சிறுமிகள் அடையாளம் காட்டிய இடத்தில் அணிந்திருந்த ஆடையோடு குளத்தில் குதித்தான். நெடுநேரத்திற்க்குப்பிறகு தண்ணீருக்கு வெளியே தெரிந்த ஷிபுவின் கைகளில் கொத்தாய் தலைமுடி தெரிய கூடவே சுவேதாவின் தலையும் தெரிந்தது.

ஷிபு கரையேறியபோது மணிகண்டனும் ரமேஷ்சும் அவனுக்கு உதவ சுவேதா கரையேற்றப்பட்டாள். அவள் உடம்பில் உயிர் தங்கியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் கூடியிருந்தவர்கள் தண்ணீர் நிரம்பியிருந்த அவள் வயிற்றை விரல்களால் அழுத்தி பார்த்தார்கள்.

அவள் உடம்பில் கொஞ்சமேனும் உயிர் நிலைத்திருக்குமென்ற நம்பிக்கை மெல்ல மெல்ல நழுவ ஆரம்பித்தது. சுவேதா இறந்தாள் என்ற இறுதி முடிவுக்கு வந்தபோது கூடிநின்றவர்களின் அழுகைக்குரல் குளமெங்கும் எதிரொலித்தது.

துணியில் உடல் கிடத்தப்பட்டு மணிகண்டனும் ரமேஷ்சும் தூக்கியபோது உடலில் பாரம் கூடியிருந்தது. ஷிபுவும் ஒரு கை தூக்க அழுகையினூடே ஊர்வலமாக சுவேதாவின் உடல் அவள் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அன்று மாலை நான்கு மணிக்கு சுவேதாவின் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு குளித்து ஈர உடையுடன் இட்டகவேலி நீலகேசி அம்மன் முன்பு பிரம்மை பிடித்தவன் போல் நின்றான் வேலாயுதன்.

`` ஆத்தா உன் கோபம் இன்னும் தீரலையா? குளத்துல வருஷத்துக்கு ஒரு சாவு விழுதே ஏன்? இன்னைக்கு என் அக்கா பொண்ணு, போன வருஷம் என் தம்பி பொன்ணு, அதுக்கு முந்தின வருஷம் என் பொண்ணு, எல்லாரையும் இதே குளத்துலயிருந்துதான் புணமாக வெளியில எடுத்தோம். ஏன் என் குடும்பத்த சுத்தி இப்பிடியெல்லாம் நடக்குது?’’ பதில் சொல்லு ஆத்தா?’’ ஆத்தாவிடம் பதில் வருமென்று காத்து நின்று பின்பு பசியெடுக்கவே முடிப்புரையை விட்டு வெளியேறினான் வேலாயுதன்.

கோவிலைச்சுற்றி மரவள்ளியும் கமுகு மரங்களும், ரப்பர் மரங்களும் வெளிச்சம் மறைத்து நின்றிருந்தன, மாலை ஐந்து மணிக்கே அந்த பகுதி முழுவதும் இருள் கவ்வியிருந்தது.

வயல்வெளியிலிருந்து எழுந்த தவளைச்சத்தம் கிலியை ஏற்படுத்தியது. பாம்புகள் தவளைச்சத்தம் கேட்ட இடம் நோக்கி தங்களது பயணத்தை தொடங்கின. ஆள் நடமாட்டமற்றதொரு மண் சாலையில் ஈர உடம்புடன் நடந்தான் வேலாயுதன். வழியில் இருந்த முறுக்கான் கடையில் வெத்திலை போட்டு பொழுது விரட்டிக்கொண்டிருந்த நாராயணன் வேலாயுதனைப் பார்த்ததும் கையிலிருந்த தடிக்கம்பை ஊன்றியபடி எழுந்து அவனோடு நடக்க ஆரம்பித்தார்.

 நாராயணனுக்கு வயது எழுபது கடந்திருந்தது. முதுகெலும்பை மூடியிருந்த தோல்கள் இறுகி எத்தனை எலும்புகள் இருக்கின்றன என்று எண்ணிவிடலாம் போலிருந்தது. மேல்சட்டை அணியாமல் போனதில் முன் மார்பில் முளைத்திருந்த வெள்ளை முடிகள் மண்டிக்கிடந்ததில் விலா எலும்புகள் தோலுக்கு வெளியே காண கிடைக்கவில்லை.

``வேலாயுதா, வருஷா வருஷம் உங்க குடும்பத்துல நடக்குற சாவுக்கு அந்த நீலகேசி அம்மன் தான் காரணம். நம்ம சாதியுல பொறந்து இண்ணைக்கு கணியான் சாதிக்காரங்களுக்கும் நமக்கும் தெய்வமா இருக்கிற. நீலகேசி அம்மனுக்கு நம்ம சாதிக்காரங்க மேல இருக்கிற கோபம் இன்னும் தணியல, அதுதான் உண்ம, ஆத்தாளுக்கு நாமளும் தான் சேர்ந்து கொடை எடுக்கிறோம், கணியான் சாதிக்காரங்களும் நம்ம சாதிக்காரங்களும் ஒண்ணு சேர்ந்து உலகத்துல எந்த மூலயிலயும் மாமியார் மருமக சண்டை வரக்கூடாதுன்னு கமுகு மரத்த இழுத்து நாம தோற்று கணியான் சாதிக்காரங்க ஜெயிக்கிறதா திருவிழா நடத்தி என்ன புரயோஜனம், ஆத்தாவுக்கு இன்னும் நம்மமேல இருக்கிற கோபம் தீரலையே!’’ நாராயணன் சொல்லச் சொல்ல வேலாயுதனும் தன் தாத்த சொன்ன பழைய கதையை நினைவுக்கு கொண்டு வந்தான்.

நாராயணன் சொன்னதுபோல நீலகேசி அம்மனுக்கு நம் குலத்தின் மீதிருக்கும் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை.போலும் அது தான் உண்மை என்று நினைக்கத் தோன்றியது.

``பெரியவரே, இனியும் இதுபோல ஒரு சாவு எங்க குடும்பத்தில் விழக்கூடாது அதுக்கு என்ன பரிகாரம் செய்யலாம்!’’ அவரிடமே கேள்வி கேட்டான் வேலாயுதன்.     

``வர்ற கோவில் திருவிழாவுல ஆத்தாவுக்கு என்ன குறை வைச்சோம்ன்னு கணியான் பூசாரிய 
வெச்சே கேட்போம், ஆத்தா அருள் சொன்னா அதுபடியே நடந்துக்குவோம்!’’

``சரி பெரியவரே அப்படியே செய்வோம்,!’’ வேலாயுதன் அவரை விட்டு விலகி தனது வீட்டை நோக்கி நடந்தான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நீலகேசி அம்மன் இட்டக்வேலி கோவிலில் அம்மன் ஆன கதையை நினைவுபடுத்தியபடியே நடந்தான்.

இட்டகவேலியில் தீண்டத்தகாதவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட கணியான் இன மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க நீலகேசி அம்மனே மறுவடிவம் பூண்டு ஒரு நாயர் வீட்டில் மகளாகப் பிறந்தாள். அந்த நாயருக்கு குழந்தைகள் இல்லாமலிருந்தது. அவரது சகோதரிக்கு பிறந்த பெண்ணை தான் வளர்ப்பதாகச் கூறி இட்டகவேலிக்கு அழைத்து வந்தார் நாயர். அந்தப்பெண் நல்ல ஐஸ்வர்யம் கொண்டவளாகவும் தொட்டதெல்லாம் துலங்கும் என்றும் அந்த பெண்ணின் மீது அதிக பாசம் வைத்திருந்தார் நாயர்.

அதை பொறுக்க முடியாத நாயரின் மனைவி அவள் மீது பழி சுமத்தி அவளை அந்த வீட்டை விட்டே துரத்த கங்கணம் கட்டினாள். ஒரு அந்தி சாயும் நேரத்தில் நாயரின் மனைவி தேங்காய் சிரட்டையின் கண்களை துளையிட்டு அந்த பெண்ணிடம் கொடுத்து அருகிலுள்ள கணியான் வீட்டிலிருந்து தீ கங்கிகள் வாங்கிவரச்சொன்னாள். அந்த பெண் கணியான் வீட்டிற்க்குச் சென்று தூரே நின்றபடி தீ கங்கி கேட்டாள்.

கணியான் வீட்டார் தேங்காய் சிரட்டையில் தீ கங்கிகள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். கையில் தீ கங்கிகளை தாங்கியபடி வந்தபோது, தீ அவள் கைகளை சுட்டிருக்கிறது தீ சுடாமலிருக்க கைகளை நாவால் நக்கி எச்சில் பரப்பினாள். அம்மியில் அரைத்துக்கொண்டிருந்த நாயரின் மனைவி ஒடிச்சென்று அவள் கைகளைப்பிடித்தபோது அவள் கையில் ஒட்டியிருந்த மசாலா அந்த பெண்ணின் கை விரல்கள் மீது பட்டிருக்கிறது.

``ஏன் கையை நக்கியபடி வந்தாய்  நீ அந்த கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றாயா என்று அவள் மீது பழி போடுகிறாள். அந்த பெண் எவ்வளவு சொல்லியும் நம்பாமல் அவள் கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கி தின்றாள் என்று நாயரிடம் புகார் சொன்னாள் நாயரின் மனைவி.

நாயருக்கு கோபம் வந்தது. இதுநாள் வரை பாசம் வைத்திருந்த அந்தப்பெண் ஒரு கணியான் வீட்டிலிருந்து மாட்டுக்கறி வாங்கித்தின்றாள் என்ற ஒரே காரணத்திற்க்காக அவளை பிரம்பால் அடித்தார் நாயர்.

தன் மீது அபாண்டமாக பழி சுமத்தி அடிக்கவும் செய்கிறார்களே என்று பயத்தில் வீட்டை விட்டு ஓடி பக்கத்திலிருந்த ஒரு காவில் மறைந்துகொண்டாள் அந்தப்பெண்.

நள்ளிரவு நேரம். யாருமற்றதொரு காவில் தனியாக பயந்தபடியே இருந்தாள் அவள். இரவு ஒரு மணியிருக்கும் மாதுகணியான் என்பவர் மந்திரவாததிற்க்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது காவிலிருந்து எழுந்த அழுகுரலைக்கேட்டு அங்கே எட்டிப்பார்த்தார். காவில் பயந்தபடியே இருந்த பெண் பக்கத்து வீட்டு நாயரின் மருககள் என்பதை அறிந்துகொண்டார்.
      
`` வாம்மா உன்ன வீட்டில கொண்டு விடுகிறேன்!’’ அழைத்தார் மாதுகணியான்.

``ம்கூம் நான் வரமாட்டேன், எனக்கு பசிக்குது ஏதாவது சாப்பிடக்குடுங்க!’’

கணியான் சமுதாயத்தோடு தீட்டு வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்தபெண் பசிக்கிறது என்று கேட்கிறாளே என்ன செய்வது என்று யோசிதார் மாதுகணியான். அவர் கையிலிருந்த இளநீரையும் பொரியையும், பச்சரிசியையும் கமுகம்பூவையும் உண்ணக்கொடுத்தார். பசி வந்தால் பத்தும் மறக்கும் என்பார்கள் அதைப்போல  பசியோடு இருந்த பெண்ணுக்கு தீட்டு மறந்துபோனது. எல்லாவற்றையும் தின்று பசியாறினாள் அந்த பெண்.

அன்றிரவு அந்த பெண் மாதுகணியான் வீட்டில் தங்கநேர்ந்ந்தது. மறுநாள் காலை நாயரின் வீட்டுக்கு தகவல் சொல்ல அப்பெண்ணின் தாயாரும் பாட்டியும் அப்பெண்ணை அழைத்துச்செல்ல வந்தார்ர்கள். அவளுக்கு கணியான் வீட்டில் தீட்டு பட்டிருக்கிறது எனவே பக்கத்திலிருந்த குளத்தில் குளித்துவிட்டு செல்லலாமென்று குளக்கரைக்கு போனார்கள்.

முதலில் அந்த பெண் குளத்தில் இறங்கினாள். குளத்தில் மூழ்கியவள் நெடுநேரமாகியும் வெளியில் அவள் உருவம் தெரியவில்லை. தனது மகளுக்கு என்ன நேர்ந்ததோ என்று பயந்தபடி அவள் தாயாரும் குளத்தில் குதிக்கிறாள், தாயாரும் குளத்தைவிட்டு எழுவதாக இல்லை. இருவரையும் காண்வில்லையென்று குழந்தையின் பாட்டியும் குளத்தில் குதிக்கிறாள்.

தண்ணீரில் குதித்த மூவரையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் காணாமல்போகவே அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பார்கள் என்ற செய்தி நாயர் குடும்பத்திற்க்கு தெரியப்படுத்த எல்லோரும் குளத்தில் இறங்கி தேடினார்கள் அவர்கள் கையில் அந்த மூன்று உடல்களும் சிக்கவே இல்லை. பிறகு குளத்து தண்ணீர் முழுவதையும் திறந்துவிட்டு தேடிப்பார்த்தார்கள். தண்ணீர் முழுவதுமாக வற்றிய பிறகும் அந்த மூன்று உடல்களும் கிடைக்கவே இல்லை.

எட்டாவது நாள் பக்கத்திலிருந்த ஒரு குளத்தில் பாக்கு அளவில் மூன்று முடிக்கட்டுகள் தண்ணீரில் மிதந்து விளையாடிக் கொண்டிருந்தன. அந்த வழியாகச்சென்ற ஒருவர் அந்த முடிக்கட்டுகளை எடுக்க இறங்கியிருக்கிறார். முடிக்கட்டுகள் திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கி மறைந்திருக்கிறது.

குளத்தில் முடிக்கட்டுகள் மிதக்கும் விஷயம் ஊரெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. எல்லோரும் குளத்திற்க்குள் நடக்கும் அதிசயத்தைப்பார்த்து அசந்துபோய் நின்றனர். இந்த தகவல் ஒரு ஜோசியருக்கு தெரியப்படுத்த ஜோசியர் வந்து பார்த்தபோது முடிக்கட்டுகள் குளத்தில் நீந்துவது குளத்தில் குதித்த அந்த மூன்று பெண்களும்தான் என்பதை உணர்ந்தார்.

``இந்த முடிக்கட்டுகள் யார் கைக்கும் சிக்காது, இதை கணியான்கள் வந்து பிடித்தால் அவர்கள் கைக்கு சிக்கும்!’’ என்றார் ஜோசியர். ஜோசியரின் ஆலோசனைப்படி கணியான் வரவழைக்கப்பட்டு ஒரு முறத்தோடு குளத்தில் கணியான் இறங்கியபோது அந்த முறத்தில் வந்து ஒதுங்கியது அந்த முடிக்கட்டுகள்.

கணியான்கள் அதை சாதாரண நிகழ்வாகக் கருதாமல் தெய்வீகச்செயலாகவே கருதி தங்களது இனத்தின் மீது மேல்தட்டு வர்க்கத்தின் தீண்டாமை எனும் பேயை விரட்ட தெய்வமே நாயரின் மருமகள் வடிவம் பூண்டு பிறந்ததாய் கருதி அந்த முடிக்கட்டுகளை எடுத்து வந்து காவின் அருகில் பலமான மரப்பெட்டியில் வைத்து பூட்டி பூஜை செய்து இன்று அது இட்டகவேலி முடிப்புரை கோவிலாக மாறியிருக்கிறது.  

வேலாயுதன் தன் பழைய நினைவுகளிலிருந்து விலகியபோது அவன் வீடு வந்து சேர்ந்தது.

அந்த குளத்தில் இதற்கு முன்பு இறந்த பெண்களின் ஆவி தான் சுவேதாவையும் தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்திருக்கும், சுவேதா நீச்சல் தெரியாத பெண் ஒன்றும் அல்ல, அவளுக்கு நன்றாக நீச்சல் தெரியும். இது ஆவிகளின் வேலையா இல்லை குளத்தில் குதித்த நீலகேசி அம்மனின் வேலையா என்று ஒருவருக்கொருவர் மர்ம முடிச்சுகளோடு பேசி இரவு ஏழு மணிக்கே கதவை தாளிட்டுக்கொண்டார்கள், மீசை வைத்த ஆண்கள் கூட இரவு நேரங்களில் முட்டிக்கொண்டு வந்த  சிறுநீரை அடக்கி வைத்துக்கொண்டு பொழுது விடியட்டும் என்று காத்திருந்தனர்.  

இரண்டு மாதம் கழிந்து நடந்த திருவிழாவில் நீலகேசி அம்மனிடமே சுவேதாவின் மரணம் குறித்து குறி கேட்கப்பட்டது. அருள்வாக்கு சொல்பவர் பரவசநிலையில் ஆடியபடியே இருந்தார். அவரிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை.

அருள்வாக்கு கேட்க கூடிநின்ற கூட்டத்தில் நின்றிருந்த சுந்தரமூர்த்தி ஆத்தா என்ன பதில் சொல்லப்போறாளோ என்று பயந்தபடியே நின்றான். ஆத்தாவிடமிருந்து பதில் வராமல்போகவே கூட்டம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கிய போது விடியற்காலை மணி ஐந்து ஆகியிருந்தது.

சுந்தரமூர்த்தி நேராக பொட்டக்குளத்துக்கு வந்து குளத்தின் கரையோரமாக நின்ற எல்லைக்கல்லை கண்டறிந்து அதன் நேராக உள்நீச்சல் போட்டு பத்தடி ஆழத்தில் திறந்திருந்த மதகை கையில் வைத்திருந்த துணியால் இறுக மூடிவிட்டு பின்பு தண்ணீருக்கு வெளியே வந்து மூச்சு வாங்கினான்.

குளத்தை சுற்றியிருக்கும் வயல்வெளிகளுக்கு குளத்திலிருந்து இரவு நேரத்தில் மதகு வழியாக தண்ணீர் திறந்துவிடுவதும், விடியற்காலை ஐந்துமணி வாக்கில் மதகை மூடும் வேலையை சுந்தரமூர்த்தி வாரம் இருமுறை செய்து வந்தான்.

அவனது வேலைக்கு கூலியாக வயலில் நெல்கதிர் அறுவடை செய்யும்போது ஒரு பாட்டை நெற்கதிர் கூலியாக கொடுப்பது வழக்கம். குளத்திலிருக்கும் மதகை திறந்தால் தண்ணீர் பாய்ச்சலாக உள்பக்கம் இழுத்துக்கொள்ளும். ஒருமுறை சுந்தரமூர்த்தி மதகை திறந்துவிட்டு தண்ணீர் வேகமாக இழுக்கிறதா என்று பார்க்க தனது கையை திறந்திருந்த மதகில் விட்டுப்பார்த்தான்.

தண்ணீர் இழுத்த வேகத்தில் அவனால் கையை திரும்பபெறமுடியவில்லை. தண்ணீருக்குள் தம் கட்டி இறங்கியிருக்கும் அவனால் மேற்கொண்டு தம் கட்ட முடியாமல் தன் மொத்த பலத்தையும் பயன்படுத்தி கையை இழுத்து அன்று தெய்வாதீனமாக தப்பித்துக்கொண்டான்.

சுவேதா தண்ணீரில் இறந்த ஒருநாள் முன்பு இரவு மதகை திறந்தவன் மறுநாள் காலை வந்து மதகை மூட மறந்திருந்தான். திறந்திருந்த மதகில் சுவேதாவின் கால் சிக்கியிருக்கக்கூடும் அவளால் காலை வெளியே எடுக்க முடியாமல் இறந்திருக்கலாம், இதுபோலத்தான் கடந்த வருடமும் அதற்கு முந்தின வருடமும் மதகை திறந்து வைத்து அதை மூட மறந்த நாட்களில் மதகில் சிக்கி சுவேதாவோடு சேர்த்து மூன்று பேர்கள் இறந்திருக்கிறார்கள். பாவம் நீலகேசி அம்மன் எல்லா மரணங்களுக்கும் பக்தர்கள் ஏதாவது ஒரு காரணத்தைச்சொல்லி பழியை அவள் மீதே போட்டுவிடுகிறார்கள்.

`` இனிமே இப்பிடி மதக மூட மறக்கமாட்டேன்!’’ ஈர உடையோடு மனதிற்குள் வேண்டியபடி நடக்க ஆரம்பித்தான் சுந்தரமூர்த்தி. 

உண்மை மாதமிருமுறை இதழ் 15-31 ஆகஸ்ட்

No comments: