Monday, August 20, 2012

சலவைக்குப் போன மனசு


 சலவைக்குப் போன மனசு
                                                                              
                                                                                - ஐரேனிபுரம் பால்ராசய்யா


ஏரியா மேனேஜர் வேலை எனக்கு சரிப்பட்டுவராது என்பதை நான் உணர ஆரம்பித்தபோது எனக்கு வயது நாற்பத்திரண்டை நெருங்கியிருந்தது. பஸ்ஸில் இரவு நெடுந்தூரம் பயணம் செய்யும்போது  குறைந்தது இரண்டு முறையாவது டிரைவர் அருகில் சென்று பஸ்ஸை நிறுத்தச் சொல்லி சிறுநீர் கழிக்கச் சென்றுவிடுவேன் . சர்க்கரை வியாதி  இருக்கிறது தினமும் காலையில ஒருமணி நேரம் நடக்கணும் என்று டாக்டர் சொன்னபோது  முயற்சி செய்வதாய் சொல்லிவிட்டு கிளம்பி வந்தேன். சோடா புட்டியின் மூடியை திறந்ததும் வரும் கேஸ் போல ஆரம்பத்தில் சில நாள் நடக்கச்சென்றேன், பிறகு அதையும் நிறுத்திக்கொண்டேன்.

’’மாதத்தில் பதினைந்து நாட்கள் டூர் சென்று ஆர்டர் சேகரிக்க உங்களால் முடியாது பேசாமல் தலைமை அலுவலகம் வந்து விடுங்கள், கிளை அலுவலகங்களிலிருந்து  சேல்ஸ், அவுட்ஸ்டேண்டிங், ஸ்டாக் தகவல் வாங்கி எனக்கு  ரிப்போர்ட் தந்தால் போதும்!’’  என்று ஜி.எம் ஷானிஷ் சொன்ன போது எனக்கு அது நல்ல விஷயமாகவேபட, தலைமையகம் இருக்கும் மும்பைக்குச்சென்றேன் .

கிட்டத்தட்ட ஷானிஷ்சின் தனி செக்ரட்டரி போலவே நடந்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டேன். அவரது  இ.மெயில் ஐ.டியும் பாஸ்வேர்டும் என்னிடம் தரும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது.. அவருக்கு  வரும் மெயில்களைப் படித்து நானே அவரது பெயரில் பதில் எழுதிவிட்டு அதை அவருக்கு தெரிவிப்பேன்.

ஷானிஷ்சின்  பிறந்த நாளை அவரது பாஸ்போர்ட்டில் பார்த்து தெரிந்த போது நானே அசந்து போனேன். இன்றைய நாளில் நாற்பத்திஐந்து வயது கடந்தவர் அவர். ஆனால் என்னைவிட பத்து வயது குறைந்தவராகவே எனக்குத்தெரிந்தார்.   சிவந்த அவரது இதழோரம் தெரிந்த கறுப்பு மச்சம்  பார்க்க என்க்கே ஒரு மாதிரியாக இருக்கும் இதில் பெண்களைப்பற்றி சொல்லத்தேவை இல்லை.

எல்லாப் பெண்களுக்கும் ஏன் அவர் மீது ஒரு கள்ளப்பார்வை என்று எனக்கே சில நேரங்களில் பொறாமை  வந்ததுண்டு. மனுஷர் யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் போவது அவரது பதவிக்கு பெருமை சேர்த்திருந்தது, ஆனால் சம்பந்தமே இல்லாமல் புரோடக்சன் துறையில் புதிதாய் சேர்ந்த பார்வதி உன்னிக்கிருஷ்ணனிடம் எப்படி விழுந்தார் என்ற ஆச்சரியம் என்னை விட்டு விலக வெகுநாள் ஆனது.

ஒருநாள் அவரது  இ.மெயில் ஐ.டி யிலிருந்து காதல் வயப்பட்ட கடிதம் ஒன்றை அழகாய் தீட்டி, பார்வதி உன்னிக்கிருஷ்ணனுக்கு அனுப்பியிருந்தார். அவரது இ.மெயில் ஐடி யின் பாஸ்வேர்ட் எனக்கு தெரியும் என்பதை மறந்து அப்படியே விட்டுவிட்டார். அன்று எதோச்சையாக நான் மெயில் ஐ.டியை செக் செய்துவிட்டு  அலுவலக விஷயமாக அனுப்பிய வேறு ஒரு மெயிலின் தேதியை தெரிந்து கொள்ள சென்ட் பகுதிக்குச் சென்றபோது  ஷானிஷ்  எழுதிய கடிதம் என் பார்வையில் பட்டது. அந்த கடிதத்தில் இருவரும் ஏற்கனவே சந்தித்த விஷயங்கள், வரும் நாட்களில் எங்கு எந்த ஹோட்டலில் சந்திப்பது போன்ற விபரங்கள் முழுவதும் அதில் பதிவாகி இருந்தது.

கடிதத்தை படித்ததும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இந்த பூனையும் பால்குடிக்குமா, அமைதியாக இருக்கும் பூனை தான் பானையை உருட்டும் என்றெல்லாம் எனக்குள் சிந்தனைகள் சிதறிக்கொண்டிருந்தது. ஏதோ ஒருவகையில் எனக்கு வேலை விஷயமாக ஏதாவது ஆபத்து வந்தால் இந்த கடிதத்தை காட்டி மிரட்டலாம் என்ற அல்ப ஆசையுடன் அந்த கடிதத்தை  தனியாக காப்பி செய்து எனது தனி மெயிலில் பத்திரப்படுத்திக்கொண்டேன்.

எனக்கு பாஸ்வேர்டு தெரியும் என்ற விபரம் ஷானிஷ்க்கு  எப்பொழுது நினைவு வந்ததோ தெரியவில்லை அந்த கடிதத்தை நான் பார்த்திருப்பேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் அதை அழித்துவிட்டு  என்னிடம் அதை காட்டிக்கொள்ளாதது போல் நடித்தார். நானும் அவரைபோலவே நடித்தேன்.

இரண்டு வாரம் கழிந்து அலுவலகத்தில் என்னை கடந்து போன பார்வதி உன்னிக்கிருஷ்ணனை முகத்துக்கு நேராகப் பார்த்தேன். என்வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருக்கவேண்டும் அவளைப்பற்றியும் அவள் குடும்பத்தைப்பற்றியும் ரிசப்சன் மேடத்திடம் அக்கறையாய் விசாரித்தேன்.

பிரச்சனை அங்கிருந்துதான் உதயமாகி இருக்கவேண்டும் ரிசப்சன் மேடமும் பார்வதி உன்னிக்கிருஷ்ணனும் ஒரு மதிய உணவு இடைவேளையில் நான் அவளைப்பற்றி விசாரித்த விஷயத்தை பரிமாறிக்கொள்ள, அதை ஷானிஷ்சிடம் அவள் சொல்லியிருக்கவேண்டும். மறுநாள் காலையில் அவரது  முகம் உம்மென்றிருந்தது.

இவன் அந்த கடிதத்தை நிச்சயம் படித்திருப்பான் என்று உறுதியாய் நம்பி என்னை வேலையிலிருந்து எப்படி தூக்குவது என்று காரணம் தேடிக்கொண்டிருந்தார். அமெரிக்காவில் லேமன் பிரதேர்ஸ் வங்கி திவாலாகி பலரும் வேலை வாய்ப்பிழந்து வெளியேறிக்கொண்டிருந்த நேரம், பொருளாதார சறுக்கல், விற்பனை குறைவு அதனால் ஆட்கள் குறைக்கிறோம் ஒரு மாதம் சம்பளம் வாங்கிவிட்டு நின்று விடுங்கள் என்று என் கண்கள் பார்த்துச் சொன்னபோது அதன் உள்குத்து புரிந்தது.

வேறு வேலை தேடிக்கொள்ள குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும் அதுவரையிலான சம்பளத்தை தந்தால்தான் என் ராஜினாமா கடிதத்தை தருவது என்று நான் பிடிவாதம் பிடித்தேன். மறுநாள் காலையில் வழக்கம் போல் அலுவலகம் சென்ற போது செக்யூரிட்டி என்னை உள்ளே விடாமல் தடுத்தான். என்னை உள்ளே விடக்கூடாது என்று கடிதம் தயாரித்து அறிவிப்பு பலகையில் ஒட்டியிருந்ததைப்பார்த்த போது எனக்கு சுரீரென்று கோபம் வந்தது.

இத நான் சும்மா விடமாட்டேன் என்ற வைராக்கியத்தை மனதில் பூட்டி வைத்துவிட்டு, ராஜினாமா கடிதத்தை எழுதி தந்துவிட்டு ஒரு மாத ஊதியத்தையும் செட்டில்மென்ட் பணத்தையும்  வாங்கிக்கொண்டு வேகமாய் வீடு திரும்பினேன். மூன்று மாத சம்பளத்தை  தராவிட்டால் . அந்த கடிதத்தை ஷானிஷ்சின்  மனைவியிடம் காட்டிவிடுவேன் என்று முதலில் மிரட்டல் கடிதம் தயாரிக்கவேண்டும். அந்த கடிதத்தைப்பார்த்ததும் அவர்  அலறி அடித்துக்கொண்டு மூன்று மாத சம்பளத்தை எனது வங்கிக்கணக்கில் சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கை என்னோடு பயணமானது.

ஷானிஷ்சுடன் நான்  வேலை பார்த்த  தினங்களில் ஒரிரு தினங்களில் அவரது வீட்டு  தொலைபேசியில் பேசியிருக்கிறேன். எனது மிரட்டல் மெயிலுக்கு ஷானிஷ் பதில் தராமல் போனால் அந்த நம்பரில் தொடர்பு கொண்டு அவரது மனைவியிடம் ஷானிஷ்சின் வண்டவாளங்களைச்சொல்லி அவரது மனைவிக்கு டார்ச்சர் தர வேண்டும் என தீர்மானித்திருந்தேன். பார்வதி உன்னிகிருஷ்ணனின் முழு விபரம் தெரியாது என்பதால் அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டு வைத்தேன்.

இரவு மணி பத்தரை இருக்கும் என்னுடம் வேலை பார்த்த நண்பன் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது . எனது வேலை பறிபோன விபரம் கேட்கப்போகிறான் என்ற எண்ணத்தில் தொலைபேசியை எடுத்து ஹலோ சொன்னேன்.

’’ என் மனைவிய ரெகுலர் செக்கப்புக்கு  கூட்டிகிட்டு போனேன் டாக்டர் உடனே சிசேரியன் பண்ணி குழந்தைய வெளியே எடுத்துடணும் இல்லையின்னா ரெண்டு பேருக்கும் ஆபத்து ன்னு சொல்றாங்க எனக்கு பயமா இருக்கு , கொஞ்சம் ஆஸ்பத்திரி வரைக்கும் வ்ரமுடியுமா?’’ மிகவும் தாழ்ந்த குரலில் அழாத குறையாக என்னை கேட்டபோது சரி வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தேன் .

பாவம் எனது நண்பர் குமார் அடுத்த வாரம் அவரது சொந்த ஊரான வேலூர் சென்று மனைவிக்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டு ஊரில் அவரது சகோதரர் மூலமாக உறவுக்காரர்களுக்கு அழைப்பிதழ் த்ந்திருந்திருந்தார். இன்னும் கொஞ்சநேரத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. இனி அழைப்பிதழ் தந்த வீடுகளில் விஷயத்தை சொல்லி வளைகாப்புக்கு வரவேண்டாம் எனச்சொல்ல வேண்டும் எத்தனை சிரமங்கள் என்று நினைத்தவாறே நண்பர் சொன்ன ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

முகத்தில் பதட்டமும் கண்கள் சிவந்தும் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த எனது நண்பன் குமாரைப்பார்த்து  “ கவலைப்படாத ஒண்ணும் அகாது என்று ஆறுதல் சொன்னேன். நள்ளிரவு ஒரு மணிக்கு பெண் டாக்கர் வந்தார். நண்பரின் மனைவியை ஒருமுறை கூட ஸ்கேன் செய்து உறுதிபடுத்திவிட்டு ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார்கள்.

அந்த நள்ளிரவில் தனது தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடமையே கண் என்று கருதி தன்னந்தனியாக நள்ளிரவு காரோட்டிவந்த அந்த டாக்டரைப்பார்க்க எனக்கு பெருமையாக இருந்தது. எனது மகனையோ அல்லது மகளையோ டாக்டர் படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்ற ஆவல் அந்த டாக்டரைப் பார்த்த போது எனக்குள் எழுந்தது.

இரண்டு மணிவாக்கில் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. குமாரின்  முகத்தில் அப்பொழுதுதான் மகிழ்ச்சி படர்ந்தது. டாக்டர் வெளியே வந்து எனது நண்பரை அழைத்து “ உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு “ என்றபோது குமார்  இன்னும் சந்தோசப்பட்டான். அவன் பெண்குழந்தையைத்தான் எதிர்பார்த்தானாம் என்ற போது நானும் மகிழ்ந்து போனேன்.

“ குழந்தை வெயிட் கம்மியா இருக்கு, உடனே இங்குபேட்டர்ல வைக்கணும் இந்த ஆஸ்பத்திரியுல அந்த வசதி இல்ல, குழந்தைய  வேற ஆஸ்பத்திரிக்கு தான் கொண்டு போகணும், இந்த ராத்திரி நேரத்துல ஆட்டோவில போக வேண்டாம் , என் காருல வந்துடுங்க “ டாக்டர் சொன்னபோது அவர்கள் மீதிருந்த மதிப்பு மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போனது.

குழந்தையை இங்குபேட்டரில் வைத்துவிட்டு  மீண்டும் குமாரின்  மனைவி படுத்திருக்கும் ஆஸ்பத்திரிக்கு எங்களை கொண்டு வந்து விட்டுவிட்டு  டாக்டர் வீடு திரும்பியபோது மணி நான்கை தாண்டியிருந்தது. டாக்டரின் கடமை உணர்வு பற்றி குமாரிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தேன்.

” அந்த டாக்டர் யார் தெரியுமா? நாம வேலபார்க்குற கம்பனியோட ஜி.எம் ஷானிஷ் சாரோட மனைவி” என்றபோது ஒருகணம் நான் அதிர்ந்தேன். இந்த டாக்கரையா டார்ச்சர் செய்யவேண்டும் என்று திட்டமிட்டேன், இவர்களது நிம்மதியையா கெடுக்கப்பார்த்தேன் மனம் புயல் அடங்காத கடலாய் கொந்தளித்தது.

இப்படியொரு எண்ணம் எனக்குள் எப்படி வந்தது என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். மொத்த திட்டத்தையும் குழி தோண்டி புதைத்துவிட்டு வேறு கம்பெனியில் வேலை தேடுவது என்று தீர்மானித்து இப்பொழுது தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். மனசு களங்கமில்லாமல் சலவைக்குப்போய் திரும்பியது போல் இருந்தது.


                                                                              
                                                                                 

No comments: