Sunday, June 17, 2012

ஃபீலிங்


சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு வங்கி மேலாளராக பணிமாற்றம் கிடைத்து முதல்நாள் வேலைக்கு போனதும் அன்றுமாலை பக்கத்திலிருக்கும் கோவிலுக்கு தனது நண்பன் குமாரோடு சாமி கும்பிடப் புறப்பட்டார் புருஷோத்தமன்.

 கோவிலில் சாமியை வழிபட்டுவிட்டு சந்நதியில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார். `` என்ன சார் இந்த ஊர்லயாவது வேல நிர்ந்தரமா இருக்கட்டும்ன்னு வேண்டிக்கிறீங்களா..இல்ல ட்ரான்ஸ்பர் வாங்கி சொந்த ஊருக்கே போகணும்ன்னு வேண்டிக்கிறீங்களா? அவரது நண்பன் குமார் கேட்டான். ``,

எனக்கு விலாசிங்கற ஒரு பொண்ண நிச்சயம் பண்ணினாங்க, கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னால அவ காதலனோட ஓடிப்போயிட்டா, அவ இந்த ஊர்ல தான் இருக்கிறா விலாசினிய நான் எந்த சூழ்நிலையிலயும் பார்த்துடக்கூடாதுன்னுதான் வேண்டிக்கிட்டேன்!’’ பதில் தந்தார் புருஷோத்தமன்.

 ``தப்பு பண்ணினது அவ, அவள ஏன் சார் பார்த்துடக்கூடாதுன்னு வேண்டிக்கிறீங்க…? ``

அவ புருஷன் சாதாரண கூலிவேலைக்காரன் வசதி வாய்ப்பு இல்லாம வாழ்க்கை ரொம்ப சிரமத்துல போய்கிட்டு இருக்காம் ஒருவேள அவ என்ன பார்த்துட்டா, பேசாம இவர கட்டியிருந்திருக்கலாம்ன்னு ஒரு ஃபீலிங் வந்துட்டா அப்பறம் அது காதலுக்கு களங்கம்’’ சொல்லி முடித்த புருஷோத்தமனை ஆச்சரியமாய் பார்த்தான் அவனது நண்பன். 

குங்குமம் 04-06-12

No comments: