Thursday, March 29, 2012

பொறுப்பு

திருமணம் முடிந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை அதற்குள் தனது மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் போகச்சொன்னார் ஜனார்த்தனன்.

``ஏங்க…எல்லா வீட்டுலயும் மருமக தலையணை மந்திரம் ஓதி சட்டுன்னு தனிக்குடித்தனம் போயிடுவாங்க, இங்க நம்ம மருமக நல்ல தங்கமான மருமக, அவங்கள எதுக்கு தனிக்குடித்தனம் போகச்சொல்றீங்க?’’ புரியாமல் கேட்டாள் அவரது மனைவி.

``நம்ம மகன் கல்யாணத்துக்கு முன்னால வேலைக்கு போயிட்டு ஃபிரண்சோட சுத்திகிட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு வருவான், இப்போ அவனுக்கு கல்யாணம் ஆயிடிச்சி இப்பவாவது நேரத்துல வீட்டுக்கு வருவான்னு பார்த்தா அவன் பழையபடியே வர்றான்,காரணம் வீட்டுல நாம இருக்கிறோம்ங்கற தைரியம். ரெண்டு பேரையும் தனிக்குடித்தனம் ஆக்கியிட்டா வீட்டுல மனைவி தனியா இருப்பாளே சீக்கிரம் வீட்டுக்கு போயிடலாம்ங்கற பொறுப்பு அவனுக்கு வந்துடும் அதனால தான் அப்படிச்சொன்னேன்” என்ற கணவரைப் பெருமையாகப் பார்த்தாள் அவரது மனைவி.

குமுதம் 04-04-12

No comments: