அது அல்ப ஆசைதான், இருந்தாலும் அடி மனதில் ஆழமாய் புதைந்து கிடக்கும் சீனிவாசனின் நினைவுகள் அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதைப் பார்க்கும்பொழுது, ஒருமுறை அவனை பார்த்தாலென்ன என்ற எண்ணம் தோன்றும்.
அவன் பெங்களூரில் இருப்பதாகவும் மாதம் ஒருமுறை ஊர் வந்து செல்வதாகவும் தோழி சொன்னதாய் ஞாபகம்.
கல்லூரியில் இருவரும் ஒன்றாய் படித்த நாட்களில் அவன் ரொம்ப சாது. தானுண்டு தன் படிப்புண்டு என்று இருந்தான். எந்த பெண்களையும் ஏறெடுத்துப் பார்க்காத அவனது நல்ல குணம் எனக்கு பிடித்துப்போக, என்னையறியாமல் என் மனதில் வந்து உட்கார்ந்தான்.
அவன் வணிகவியல் புத்தகத்தை துணிச்சலாக வாங்கி, என் காதலை ஒரு கடிதத்தில் எழுதி புத்தகத்திற்குள் மறைத்து வைத்துக் கொடுத்தேன்.
ஒரு வாரம் ஓடிப்போனது. சீனிவாசனிடமிருந்து எந்த பதிலுமில்லை. முன்பெல்லாம் எப்பொழுதாவது திரும்பி என்னைப் பார்ப்பவன் இப்பொழுது அதையும் நிறுத்தியிருந்தான். பொறுமையிழந்த நான் நேரடியாகவே கேட்டுவிட்டேன்.
``சீனு, வணிகவியல் புத்தகத்துக்குள்ள இருந்த என் லெட்டர பார்த்தியா? பார்க்கலையா? பதிலச் சொல்லு!’’ சற்று மிதமான கோபத்தில் கேட்டேன்.
``மாலதி, காதலிக்கிற எண்ணம் எல்லார் மனசிலயும் வர்றது சகஜம் தான். நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் வசதியான குடும்பத்துல பொறந்தவன் இல்ல, ரொம்ப சாதாரணமான குடும்பம். சொல்லப்போனா காலையிலயும் சாயங்காலத்துலயும் நாலு புள்ளையிங்களுக்கு டியூசன் எடுத்து அதுல வர்ற வருமானத்துல தான் படிக்கிறேன், இந்த சூழ்நிலையில நான் காதலிக்கிறது சரியா? நீயே சொல்லு!’’ அவன் நியாயமாய்ச் சொன்னாலும் அது எனக்கு செவிடன் காதில் ஊதிய சங்காய் கேட்டது,
``இதப்பாரு சீனு, வசதியப் பார்த்து வர்றதில்ல காதல், அது மனசப் பார்த்து வர்றது. எனக்கு உன்ன புடிச்சிருக்கு, உன் ஏழ்மையும் புடிச்சிருக்கு, படிச்சி முடிச்சி நம்ம ரெண்டு பேருக்கும் வேல கிடைச்சா, இந்த ஏழ்மையெல்லாம் எத்தன நாளைக்கு…?’’ கேட்ட மாத்திரத்தில் அவன் பதில் பேசாமல் நின்றது அவன் அடி மனதில் நான் இருப்பதை உறுதிப்படுத்தியது.
கல்லூரிப்படிப்பு முடியும்வரை அவனை நான் தான் வலுக்கட்டாயமாக தியேட்டர், பீச் என்று இழுத்துச் சென்றிருக்கிறேன். தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அவனது கை விரல்கள் எனது விரல்களைத் தழுவாதா என ஏங்கியதுண்டு.
``ம்கூம் உரசல்கூட கல்யாணத்திற்குப் பிறகு தான் என்று அனியாயத்திற்கு நல்ல பிள்ளையாக நடந்துகொண்டான். இருந்தாலும் அவனது உயர்ந்த குணத்தை நான் வெகுவாய் ரசித்தேன்.
கல்லூரிப்படிப்பு முடிந்ததும் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை தேடத் தொடங்கினார்கள். நான் பதறியடித்து சீனுவிடம் ஓடினேன்.
``மாலதி, இப்பத்தான் காலேஜ் முடிச்சிருக்கேன், எனக்கொரு வேலை கிடைக்கிறதுக்கு குறஞ்சது ஒரு வருஷமாவது ஆகும். இந்த சூழ்நிலையில உன்ன எப்பிடி நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்?’’
``அப்போ வீட்டுல பார்க்குற மாப்பிள்ளைக்கு நான் கழுத்த நீட்டவா?’’ நான் சற்று கோபமாகவே கேட்டேன்,
``இப்போதைக்கு அதுதான் சரியின்னு படுது!’’ என் முகம் பார்த்து அவன் சொன்ன போது அவன் கன்னத்தில் ஓங்கி அறையவேண்டும் போல் தோன்றியது. அவன்மீது தவறில்லை, அவன் சூழ்நிலை அப்படி. நான் தானே வலியச் சென்று காதலித்தேன், வேறு வழியின்றி வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இன்றோடு பதினைந்து வருடம் ஓடிப்போனது.
இத்தனை வருடங்கள் ஆன பிறகும், இன்றுவரை சீனிவாசனை நேரில் பார்த்ததில்லை. என் அடி மனதில் அவனைப் பற்றிய ஞாபகங்கள் இன்னும் தொலைந்து விடவில்லை.
அவனை பஸ்ஸ்டேண்ட்டிலோ, ரயில் நிலையத்திலோ, சினிமா தியேட்டரிலோ எங்காவது பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் ஓளிந்து கிடந்தது.
அன்று நானும் என் கணவரும் குழந்தைகளுமாக திருப்பதி வெங்கடாஜலபதி சாமியை தரிசித்து விட்டு கூட்ட நெரிசலைத் தாண்டி வெளியேறியபோதுதான் என் பேரைச் சொல்லி கூப்பிடும் அந்த குரலைக்கேட்டேன்.
பல வருடங்களுக்கு முன்பு கேட்டு பழகிய குரல் என்பதால் சட்டென்று திரும்பினேன். எதிரில் முப்பத்தைந்து வயதில் உடல் தடித்து தொப்பை விழுந்து தலை முடியை ஏழுமலையானுக்கு மொத்தமாய் வழித்துக் கொடுத்து விட்டு நெற்றியில் பட்டையாக சந்தனம் பூசி நின்றிருந்தான் அவன்.
``மாலதி, என்ன தெரியலையா? நான் தான் சீனிவாசன், மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில ஒண்ணா படிச்சமே!’’ நான் அசந்து போனேன்.
``சீனுவா…? சாரி என்னால அடையாளமே கண்டு பிடிக்க முடியல, எப்பிடி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா..?’’
``ரொம்ப நல்லாயிருக்கேன், பெங்களூர்ல ஒரு பிரைவெட் கம்பெனியில மேனேஜரா வேல பார்க்கிறேன்.”
``இவரு என் ஹஸ்பென்ட் பேரு தேவராஜ்!’’
``ஹலோ!’’ என்று இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.
``இவன் என் மூத்த மகன் பேரு கார்த்திக், இவ என் பொண்ணு பேரு ஸ்வாதி!’’
``எனக்கு கூட ரெண்டு புள்ளயிங்க, மூத்தவன் அஞ்சாவது படிக்கிறான், ரெண்டாவது பொண்ணு மூணாவது படிக்குறா…!’’
``உங்கள இங்க சந்திச்சதில ரொம்ப சந்தோஷம், நாங்க கிளம்பறோம்!’’ என் கணவர் அவசரப்படுத்தினார்.
``ஓ.கே, சீ யூ’’ என்றபடி சீனிவாசனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனோம் நான் கொஞ்ச தூரம் முன்னால் நடந்து திரும்பிப் பார்த்தேன். சீனிவாசன் அந்த இடத்தை விட்டு நகராமல் நாங்கள் போவதையே பார்த்துக்கொண்டு நின்றான்.
இதே சீனிவாசனைத்தான் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்கமாட்டோமா என்று தவம் கிடந்தேன். அவனைப் பார்த்தால் எனக்குள் ஒரு பரவசம் எழுந்து அடங்க வேண்டும், ஆனால் இன்று பார்த்தபோது முன்பின் தெரியாத ஒருவனைப் பார்த்ததுபோல ஒரு உணர்வு… இது ஏன்?
பதினைந்து வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த சீனிவாசன் வேறு, இப்பொழுது நான் பார்த்த சீனிவாசன் வேறு. அப்பொழுது உடல் தடிமனின்றி தொப்பையின்றி ஒல்லியாக பார்க்க அழகாக இருந்தான்.
அவனுக்கு இப்பொழுது வயதாகி இருந்தாலும் என் அடிமனதில் பதிந்து கிடந்தவையெல்லாம் இருபது வயது இளமையான முகமும் அதைச்சுற்றிய காதலும்தான். அது ஒரு ஏக்கத்தை தந்தாலும் மனசு குருகுறுத்துக்கொண்டே அவனை பார்த்துவிட்மாட்டோமா என்று ஒரு ஏக்கம் வந்து போகும்.
இன்று அவனை வேறு உருவத்தில் பார்த்தபோது எனக்குள் எந்த மாற்றங்களும் எழவில்லை. ஒரு பரவசமில்லை, கணவருக்குத் தெரியாமல் அவனைப் பார்க்கும் ஒரு கள்ளப் பார்வை இல்லை, இதற்கு இவனை பார்க்காமலேயெ இருந்திருக்கலாம் போல் தோன்றியது.
No comments:
Post a Comment