Friday, June 17, 2011

மணவை பொன் மாணிக்கம்

எழுத்தார்வமும் கலைஆர்வமும் இதழியல் ஆர்வமும் நடிப்பார்வமும் ஒருங்கே அமையப்பெற்றவர் திரு. மணவை பொன் மாணிக்கம. திரைப்பட இயக்குநர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைமை நிருபர் பொறுப் பேற்று இன்று வரை தொடரும் நீண்டகால பத்திரிகையாளர் இவர்..

திரைப்படத்துறையில் இவரை அறியாதவர்கள் இல்லை. பழம்பெரும் நடிகர்கள் தொடங்கி புதுமுக நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிஓவியர்கள், நடன இயக்குநர்கள் என்று பலதரப்பட்டவர்களிடம் பேட்டி எடுத்த பெருமை இவருக்கு உண்டு. பிலிம்நியூஸ் ஆனந்தனுக்குப் பிறகு திரைப்படத்துறையில் நன்கு பரிச்சயமானவர் இவர் மட்டுமே.

பாக்யாவின் மற்றொரு மாத இதழான பாக்யா டாப் ஒன் இதழுக்கு இவரே பொறுப்பாசிரியராக இருந்தவர். இவருக்கு எம்.ஜி.ஆர் மீதும் இயக்குநர் திரு.கே பாக்யராஜ் மீதும் அலாதி பிரியம். உண்டு. தனது வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்கள் என்ற மரியாதையை வைத்திருப்பவர்.

ஒரு எழுத்தாளராக இவரை பிரபலப்படுத்தியது இவரது எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் எனும் நூல். இதுவரை பதினான்கு பதிப்புகள் வெளிவந்து அமோக வரவேற்ப்பைப் பெற்று காலத்தால் அழியாத நூலாக மாறி இவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

இவர் எழுதிய இன்னொரு நூலான பிரபலங்கள் மனசுல மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர் எனும் நூலும் மிகப்பிரபலம். எம்.ஜி.ஆரை எல்லோருக்கும் ஏன் பிடித்திருக்கிறது ஏன் அவர் ஒரு மறக்க முடியாத மாமனிதர் என்ற வினாக்களுக்கான விடைகள் இந்த நூலிலுண்டு. மிகவும் பயனுள்ள நூல் இது.

இவரது மற்றொரு நூல் வாரியாரைக் கவர்ந்த புராணக் கதாபாத்திரங்கள். வாரியார் எப்படி தனது எளிய பேச்சால் கேட்பவரை வசீகரிப்பாரோ அதைப்போலவே இவரும் அவரைப்பற்றி எழுதி வாசகர்களை வசீகரித்திருக்கிறார்.

ஐந்தாம்வேதம் இவர் எழுதிய இன்னொரு குறுங்காவியம் ஆகும். தனது கிராமத்தை சுற்றி நடந்த காதல் நிகழ்வுகளை கற்பனை வளத்தோடு ஒரு திரைப்படம் எடுக்குமளவுக்கு மிக சிறப்பான நடையில் எழுதி வெளிவந்திருக்கும் இந்நூலுக்கு இருபத்தி ஐந்து கவிஞர்கள் அணிந்துரை எழுதியிருப்பது ஒரு புது முயற்சியாகவே தெரிகிறது. இந்நூலைப்படித்துவிட்டு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துகையில் ஒரு திரைப்படம் எடுப்பதற்க்கான எல்லா தகுதிகளும் பெற்ற குறுங்காவியம் இது பாராட்டியுள்ளார்.

இவரது மற்றுமொரு பிரபல நூல் வந்தாங்க ஜெயிச்சாங்க. கிட்டத்தட்ட எழுபத்தி இரண்டு முக்கிய பிரபலங்களைச் சந்தித்து அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதைப்பற்றிய பத்து செய்திகள் தாங்கி வெளிவந்திருக்கும் நூல் வந்தார்கள் ஜெயித்தார்கள் எனும் நூல். வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவர் கைகளிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.

இவரது அடுத்த நூலாகிய அன்புள்ள அம்மா இது பல தாய்மார்களின் காவியம் என்று சொல்லலாம். இந்த நூலுக்கான இவரது மெனக்கெடல்கள் ஏராளம். கிட்டத்தட்ட எழுபத்திஐந்து வி.ஐ.பிகளை சந்தித்து அவர்களின் அம்மாக்களின் அன்பை கேட்டு வாங்கி இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகள் இந்த நூலின் எல்லாப் பக்கங்களிலும் கசிந்து வழிகின்றன.

இது தவிர காதலும் வீரமும் என்ற கவிதை நூலும் வெளிவந்திருக்கிறது. நவீன காதலும் அது சார்ந்த ஊடலும் வீரமும் கவிதை நூலின் எல்லா பக்கங்களிலும் பரவி கிடக்கின்றன. எல்லா நூல்களும் கற்பகம் புத்தகாலயத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

பிரபல வார இதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன. இதுதவிர மேடை வானொலி நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். மனிதன் என்ற போர்வையில், தகுதி, பத்தினிக்கும் பசிக்கும், கர்ப்பக்கிரகம் போன்றவைகள் இவர் இழுதி பிரபலமான வானொலி நாடகங்கள்.

இவர் திரைப்பட பாடல்கள் எழுதுவதிலும் கைதேர்ந்தவர். வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில் இவர் எழுதிய முதன்முதலாய் உன்னைப் பார்க்கிறேன் என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் மிக பிரசித்தம். விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படத்தில் வரும் பாசமுள்ள சூரியரே பாடலும், இதயமே படத்தில் வரும் பாடம் சொல்லித் தருவாயா பாடலும், வணங்காமுடி படத்தில் வரும் வெடக்கோழி பாடலும் இப்பொழுதும் பலரும் முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.

இது தவிர லுக், என்னவோ பிடிச்சிருக்கு, வசந்தசேன, காதல் எப்.எம், நினைவலைகள், அழகு பதினாறு இன்சூரன்ஸ், 21-ம் நூற்றாண்டு போன்ற திரைப்படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.
மணவை பொன் மாணிக்கம் ஒரு சிறந்த திரைப்பட நடிகரும்கூட, இவரை இயக்குநர் திரு கே.பாக்யராஜ் மற்றும் இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் அதிகம் பார்க்கலாம். அவசர போலீஸ் 100, ஆராரோ ஆரீராரோ, சுந்தர காண்டம், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, ஞானப்பழம், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய மன்னர்கள், தொண்டன், மூன்றாம்படி, திலகம், இயக்கம், புன்னகைதேசம், மகாநடிகன், பொம்மலாட்டம் போன்ற திரைப்படங்களிலும் இவரது நவரச நடிப்பைப் பார்க்கலாம்.

திருச்சியிலுள்ள மணப்பாரை இவரது பிறந்த ஊராக இருந்தாலும் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். எதிர் காலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கும் ஆர்வத்திலிருக்கும் இவர் பல வெற்றிப்படங்களை இயக்க முதற்சங்கு மனதார வாழ்த்துகிறது.

முகவரி : மணவை பொன் மாணிக்கம்
63, ஐந்தாவது தெரு,
மேற்கு விஜயராகவபுரம், சாலிகிராமம்
சென்னை-93
கைபேசி : 9940495579

1 comment:

மதுரை சரவணன் said...

puthu visayangkalaiyum avarai parri arinthu konden.. pakirvukku vaalththukkal