Monday, March 29, 2010

வெந்து தணியும் வெஞ்சினங்கள்

நடுநிசி கழிந்த பிறகும் சூரியன் வீசியிருந்த வெக்கையின் பாய்ச்சல் தணிந்தபாடில்லை. காற்று வீச மறுத்து அடங்கி கிடந்தது.. ஊர் ஜனங்கள் திரண்டிருந்த இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் சமய சொற்பொழிவு முடிந்து நடந்த சிறப்பு பூஜைக்குப்பிறகு வந்திருந்த கூட்டம் மெல்ல மெல்ல கரைய ஆரம்பித்தது. கோவில் காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் காணிக்கையாக வந்த பொருட்களை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்.

இரவு பத்து மணிக்கே மேக்கப் போட்டு அமர்ந்திருந்த கூத்தாட்டக் கலைஞர்கள் குண்டு பல்புகள் வீசிய வெளிச்சத்தின் வெக்கையில் முகத்தில் படிந்திருந்த வியர்வையை துணியால் ஒற்றி எடுத்துவிட்டு ஏலம் எப்பொழுது முடியுமென்று காத்திருந்தார்கள்.

“அண்ணாவி திருவிழாவுக்கு வந்த அம்புட்டு ஜனமும் திரும்பி போயாச்சு, இங்கிட்டும் அங்கிட்டும் நிக்கிற ஆளுகளப் பாத்தா ஐம்பது பேரு கூட தேறாது, இம்புட்டு பேருக்குத்தான் நாம கூத்த நடத்தணுமா? நேரமும் ஆயிட்டே போவுது, இவிங்க எப்போ ஏலத்த முடிச்சு நாம எப்போ கூத்த ஆரம்பிக்கிறது!” மார்புக்குள் துணிகள் வைத்து, கழுத்து நிறைய கவரிங் நகைகள் அணிந்து, காதில் ஜமுக்கியும் காலில் சலங்கையும் அணிந்து பெண் வேடமிட்டிருந்த செவிலப்பன் பீடியை இழுத்தபடியே கேட்டான்.

“நம்ம கூத்த ஐம்பது பேரு பார்த்தா என்ன, அஞ்சு பேரு பார்த்தா என்ன, கூத்து முடிஞ்சு காசு தர்றப்போ வேண்டாமுன்னா சொல்லப்போற, அவிங்க எத்தன மணிக்கு ஆரம்பிக்கச் சொல்றாங்களோ அப்பத்தான் ஆரம்பிக்க முடியும், அது வரைக்கும் மூடியிட்டு இரு!” அண்ணாவியின் குரலுக்கு செவிலப்பன் மறுபேச்சின்றி அடங்கிப்போனான்.

முருகன் வேடமணிந்திருந்த அன்பரசு உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.

”என்ன அன்பரசு ஒரு மாதிரியா இருக்க!” அவன் முகம் அறிந்து கேட்டான் அண்ணாவி.

“ஒண்ணுமில்ல!” கடுப்புடனே பதிலளித்தான் அன்பரசு.

ஒருவழியாக ஏலம் முடிந்திருந்தது.

” இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சூரசம்ஹாரம் எனும் கூத்து நடக்கவிருக்கிறது, பொதுமக்கள் திரண்டு வந்து கூத்தை கண்டு ரசிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் மைக்கில் உரக்கச் சொன்னபோது ஆங்காங்கே கூடி நின்றவர்கள் மேடையின் முன்பு கூடியபோது ஐம்பது பேருக்குமேல் தாண்டவில்லை. அண்ணாவி மேக்கப்போடு படுத்து தூங்கிக்கொண்டிருந்த கலைஞர்களை தட்டி எழுப்பி கூத்துக்கு தயார் படுத்தினார்.

கூத்து ஆரம்பமானது. சிவன் பார்வதி வேடமணிந்திருந்தவர்கள் மேடையில் தோன்றி ஆடியும் பாடியும் வாய்வழி கதை சொல்லியும் அரைமணி நேரத்தை கடத்தினார்கள். முருகன் வேடமணிந்திருந்த அன்பரசுவின் நடிப்பில் வீரம் துள்ளியது. வசனங்களை உச்சரித்தபோது கோபம் கொப்பளித்தது இருந்தும் வந்திருந்தவர்களில் பாதிபேர் கரைந்து போகத் தொடங்கினார்கள். கூத்து நடத்த வந்தவர்களின் எண்ணிக்கையைவிட கூத்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.

சூரபத்மனை வதம் செய்யும் இறுதி காட்சி நெருங்கியபோது அன்பரசு பேய் பிடித்தவன்போல் அடங்க மறுத்தான். மேடையில் சூரபத்மனை அழிப்பதோடு கூத்து முடிவுக்கு வரும், ஆனால் அன்று வழக்கத்திற்க்கு மாறாக அன்பரசு சூரபத்மனை திரும்ப திரும்ப வதைக்க ஆரம்பித்தான்.

சூரபத்மன் உயிரற்ற பிணம் போல் நடித்தாலும் விடாமல் அவனை அவேசம் கொண்டு தாக்கினான். ஐம்பது கிலோ எடையைக்கூட தாண்டாத அன்பரசு எலும்பும் தோலுமாக இருந்ததால்த்தான் முருகன் வேடமே அவனுக்கு தரப்பட்டது, ஆனால் இன்று அவன் மேடையில் ஒரு பயில்வானைப்போல தன்னை நினைத்துக்கொண்டு சூரபத்மனை தீராத ஆத்திரத்துடன் வதைத்தான்.

அதுஒரு திரைச்சீலையற்ற மேடை என்பதால் திரையை மூடி கூத்தை நிறுத்தவும் வாய்ப்பில்லாமல் போனது. கொஞ்சம் கொஞ்சமாக அன்பரசுவின் ஆத்திரம் அடங்க மேடையிலேயே சரிந்தான்.

” இத்துடன் கூத்து நிறைவடைந்தது” என்று மைக்கில் அண்ணாவி சொன்னபோது கலைந்து செல்ல ஆட்களின்றி மேடை அனாதையாக தெரிந்தது. அன்பரசை தூக்கிச்சென்று தண்ணீர் தெளித்த பிறகும் அவனால் எழுந்திருக்க முடியாமல் அப்படியே படுத்திருந்தான்.

அண்ணாவி காரிய கமிட்டி தலைவர் கனகராஜைத் தேடி அலைந்துகொண்டிருந்தார். இசக்கி அம்மன் கோவிலைச்சுற்றி அமைக்கப்பட்ட மின்விளக்குகள் அணைக்கப்பட்டபோது ஆள் அரவமற்ற இசக்கி அம்மன் கோவிலில் காத்திருப்பது கூத்துக்கலைஞர்களுக்கு ஒரு திகிலாகவே இருந்தது. ஒரு வழியாக காரிய கமிட்டித் தலைவர் கனகராஜ் வந்து சேர்ந்தார்.

அண்ணாவி ஆர்வமுடன் அவர் பக்கம் வந்து நின்றார்.

” பணம் வீட்டுல இருந்திச்சு, எடுக்கப் போயிருந்தேன், இந்தா கூத்துக்கான காசு!” அவர் பணத்தை நீட்ட அதை வாங்கி எண்ணிப்பார்த்த அண்ணாவியின் முகம் சுருங்கியது.

“என்ன தலைவரே பேசுன தொகையுலயிருந்து ஐந்நூறு ரூபா கொறச்சலா இருக்கு!”

“நீங்க நடத்துன கூத்துக்கு இது போதும், வந்திருந்த ஆளுகள பார்த்த இல்ல, ஊருல ஒரு பய உங்க கூத்த நடத்த கூப்பிடுறதில்ல, அப்பிடியே கூப்பிட்டாலும் கூட்டம் சேர்றதில்ல, நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி கூத்த மாத்துங்கய்யா, நாலஞ்சு வயசு பொண்ணுங்கள கொண்டு வந்து இறக்குங்க, அவளுக குலுக்குற குலுக்கல்ல கூட்டம் சேர்ந்திடும்!” காரிய கமிட்டி தலைவர் கனகராஜ் நக்கலாகச் சொன்னார்.

‘’ ஐயா இந்த கூத்த வெச்சுத்தான் எங்க பொழப்பே ஓடுது, தயவு செஞ்சு பேசுன தொகைய குடுத்துடுங்க!” அண்ணாவி கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தார்.

” இந்தாய்யா இதுல நூறு ரூபா இருக்கு, வெச்சுக்க, இதுக்கமேலயும் பணம் வேணுமுன்னு அடம்புடிச்ச அப்பறம் அடுத்த வருஷம் உங்கள கூத்து நடத்த கூப்பிடவே மாட்டேன்!” பணத்தை தந்துவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் புறப்பட்டுப்போனார். அண்ணாவி கிடைத்த பணத்தை பங்கு போட்டு அனைவருக்கும் தந்தார்.

‘’ என்னண்ணே என் பங்குல ஐம்பது ரூபா கொறையுது!” செவிலப்பன் சற்று கோபமாகவே கேட்டான்.

’’ டேய், பணம் கொறச்சலா கிடைச்சத பார்த்த இல்ல, அப்பறம் என்னடா கேள்வி, இனிமே இந்த நாறப்பொழப்புக்கு முழுக்கு போட்டுட்டு வேற வேலைக்கு போலாம்டா, கவுரவமாவது இருக்கும்!”

“வேற நமக்கு என்னண்ணா வேல தெரியும்!” வலியோடு வந்து விழுந்த அவனது வார்த்தைகளைக்கேட்டு அண்ணாவிக்கு அழவேண்டும் போலிருந்தது அடக்கிக்கொண்டார்.

“டேய், மேடைக்குப்பின்னால அன்பரசு தூங்கிகிட்டு இருக்கான், அவன எழுப்பி கூட்டியாடா, புறப்படலாம்!”

செவிலப்பன் மேடைக்குப் பின்புறம் வந்து தென்னைமர கீற்று ஓலையில் ஒருக்களித்து படுத்திருந்த அன்பரசுவை தட்டி எழுப்பினான். அன்பரசு மேக்கப்பை கலைக்காமலேயே தூக்க கலக்கத்தில் எழுந்து அவனோடு சேர்ந்து நடந்தான்.

“அன்பரசு என்னாச்சு உனக்கு, மேடையுல நீ நடிக்கிறப்போ உன் முகத்துல என்ன ஒரு வெறித்தனம், சூரபத்மனா நடிச்ச சேகர்மேல உனக்கு என்ன அம்புட்டு கோவம்!”

“நம்மள மாதிரி ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவங்களுக்கு கோவம் வந்தா எப்படி தீர்க்கறது, இந்த மாதிரி கூத்து நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ நடிச்சு தீர்த்துகிடவேண்டியதுதான்!” அன்பரசுவுக்கு கண்கள் கலங்கியிருந்தது. அவன் மனதில் எதோ ஒரு வெஞ்சினம் கொழுந்து விட்டு எரிந்து அது மேடையில் நடிப்பின் மூலமாக வெந்து தணிந்திருப்பதை உணர்ந்தான் செவிலப்பன்.

” மொத்த கலைஞர்களும் அந்த இருள்படர்ந்த நள்ளிரவில் பஸ்நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். செவிலப்பன் அன்பரசுவின் தோள்களை ஆதரவாய்த் தொட்டான்.

“நீ கோபப்பட என்ன காரணம் சொல்லுப்பா!”

” நாம எல்லாம் கூத்து நடத்துற சாதியுல பொறந்திருக்கக்கூடாதுடா, நிறைய மனுஷங்க இருக்குற சாதியுல பொறந்திருக்கணும், நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா கேக்கிறதுக்கு நாலு ஜனங்க முன்ன வந்து நிப்பாங்க, போன வாரம் என் பொஞ்சாதி கூலி வேலைக்கு போயிட்டு திரும்ப வர்றப்போ பசியோட இருந்ததால முத்துச்சாமி தோட்டத்துலயிருந்து ரெண்டு வெள்ளரி பிஞ்சு பறிச்சிருக்கா, அத பார்த்த முத்துச்சாமி என் பொஞ்சாதிய கீழே தள்ளிவிட்டுட்டு பொம்பளையின்னும் பார்க்காம அவ முதுகுல அறைஞ்சிருக்கான். இத சும்மா விடக்கூடாதுன்னு போலீசுல புகார் குடுத்தேன், முத்துச்சாமி போலீஸ்காரங்களுக்கு பணத்த குடுத்து கேச திச திருப்பி என் பொஞ்சாதிக்கு திருட்டு பட்டம் கட்டீட்டான், பணபலம் ஆள்பலம் இருக்குற முத்துச்சாமிமேல கோவப்பட்டு என்னத்த செய்ய, அதான் இண்ணைக்கு நடந்த கூத்துல முத்துச்சாமிய சூரபத்மனா நெனச்சு என் கோவம் தணியறவரைக்கும் வதைச்சிட்டேன், இப்போ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு!”

அன்பரசு சொன்ன விஷயத்தைக் கேட்ட போது தான் பிறந்த இனத்தின் மீது வெறுப்பு வந்து சேர்ந்தது அனைவருக்கும். கூத்து எனும் கலையினூடே அன்பரசுவின் வெஞ்சினங்கள் தணிந்து போயிருந்தாலும் அவனது இயலாமை தனித்து நின்று அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல உணர்ந்தான். காற்று அடர்ந்து வீசியதில் வெக்கையின் சுவடுகள் மறைந்திருந்தன அவன் மனதிலிருந்து மறைந்த வெஞ்சினத்தைப்போல.

3 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அருமை!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in