Wednesday, January 6, 2010

சைக்கிள்

அலுவலகத்திலிருந்து சைக்கிளில் வீடு திரும்பிய ரவிக்குமார் களைப்புடன் வந்து மூச்சு வாங்கியபடியே இருக்கையில் அமர்ந்தார்.

அவரது முகத்தில் வடிந்திருந்த வியர்வையை துண்டால் துடைத்துவிட்டு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து தந்தாள் அவரது மனைவி காவேரி.

" என்னங்க, ஏன் இப்படி கஷ்டப்பட்டு சைக்கிள் மிதிச்சு ஆபீஸ் போயிட்டு வர்றீங்க, வங்கியில பணமிருக்கு, ஒரு டூ வீலர் வாங்கலாமில்ல, எனக்கும் உங்க பின்னால உட்கார்ந்து வர ஆசையா இருக்குங்க!" தனது ஆசையை சந்தடி சாக்கில் போட்டு உடைத்தாள் காவேரி.

" நான் நினைச்சிருந்தா டூ வீலர எப்பவோ வாங்கியிருப்பேன். இப்போ நம்ம மகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான், இந்த சமயத்துல நான் டூ வீலர் வாங்குனா நம்ம மகனுக்கும் வண்டி ஓட்டறதுக்கு ஆசை வரும், லீவு நாள்ல வண்டிய எடுத்துகிட்டு எங்க வேணும்னாலும் சுத்த போயிடுவான். சின்ன வயசுல லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டுறது தப்பில்லையா? அதனாலதான் இன்னமும் டூ வீலர் வாங்கல, எப்போ அவன் லைசன்ஸ் வாங்குறானோ அடுத்த நாளே டூ வீலர் வாங்கிடுவேன், அதுவரைக்கும் நமக்கு சைக்கிள்தான்!"

மகன் லைசன்ஸ் வாங்கும்வரை காத்திருந்து அதுவரை சைக்கிள் ஓட்டும் தனது கணவரை நினைக்க நினைக்க காவேரிக்கு பெருமையாக இருந்தது.

குமுதம் 13.01.2010

No comments: