Friday, January 1, 2010

மகன்

தொலைபேசி நிலையத்திலிருந்து வந்த கடிதத்தை பிரித்து, சென்ற மாத தொலைபேசி கட்டணம் எவ்வளவு என்று பார்த்த போது ரகுவரனுக்கு மயக்கம் வராத குறையாக இருந்தது. வழக்கமாக எண்ணூறு ருபாய்க்குள் வந்துவிடும் தொலைபேசி கட்டணத்தொகை இந்தமுறை மூவாயிரத்தை தாண்டியிருந்தது.

சமையலறையிலிருந்து அப்பொழுதுதான் ரகுவரனின் மனைவி காபி போட்டு எடுத்து வந்தாள். அவள் கையிலிருந்த காபியின் உஷ்ணம் இறங்கிக்கொண்டிருக்க, ரகுவரனுக்கு உடம்பெங்கும் உஷ்ணம் ஏறிக்கொண்டிருந்தது.

" போன மாசம் போன் பில் எவ்வளவு தெரியுமா? மூவாயிரத்துக்கு மேல, அப்படி யார்கிட்டதான் பேசற!" தனது கோபத்தை உள்ளுக்குள் அடக்கியவாறே கேட்டான்.

" என்கிட்ட எதுக்கு கேக்கறீங்க! போன மாதம் ஊருலயிருந்து உங்க அப்பா வந்திருந்தாரே அவர்தான் பேசியிருக்கணும், ராத்திரியானா வாக்கிடாக்கிய தூக்கிகிட்டு மொட்ட மாடிக்கு போயி மணிக்கணக்குல பேசறாரு, இதுல ஒரு மொபைல்போன் வாங்கித்தான்னு நச்சரிப்பு வேற!" சூடான காபியை டீப்பாயின் மீது வைத்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறைக்குள் நடந்தாள் ரகுவரனின் மனைவி.

அப்பவா இவ்வளவு தொகைக்கு பேசியிருப்பார்? ரகுவரனால் நம்ப முடியவில்லை. மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து பேசின எஸ்.டி.டி கால்களின் விபரம் கேட்டு தொலைபேசி அலுவலகத்துக்கு கடிதம் எழுதினான்.

ஒரு வாரம் கழிந்து எஸ்.டி.டி கால்களின் விபரம் அடங்கிய தபால் வந்து சேர்ந்தது. தனது அப்பா வந்த நாளிலிருந்து ஊருக்கு திரும்பிய நாட்களை கண்க்கிட்டு பார்க்க ஆரம்பித்தான். அவனது மனைவி சொன்னதுபோல இரவு பத்து மணிக்கு மேல் ஒரே நம்பருக்கு டயல் செய்து அதிக நேரம் பேசியிருப்பதைப் பார்த்ததும் ரகுவரனுக்கு தூக்கிவாரிபோட்டது.

அது மும்பைக்கான எஸ்.டி.டி கோடு. மும்பையில் அவனது அப்பாவுக்கு தெரிந்த நண்பர்களோ, உறவினர்களோ யாருமில்லை வேறு யாராக இருக்கக்கூடும் என்ற கேள்வியோடு அந்த நம்பரை தனது மொபைலில் பதிவு செய்துகொண்டான் ரகுவரன்.

ஒருமாதம் கழிந்து அலுவலக விஷயமாக மும்பை வந்தபோது அந்த நம்பருக்கு டயல் செய்தான். எதிர் முனையில் கோன் என்று பெண் குரல் கேட்டதும் தனது தந்தையின் பெயரைச்சொன்னான் ரகுவரன்.

”செல்வத்தோட மகன் ரகுவரன் பேசறேன், அப்பா தான் இந்த நம்பரக் குடுத்து தொடர்பு கொள்ளச் சொன்னார்” அசாத்தியமாக ஒரு பொய்யை தடுமாறாமல் சொன்னான். சிறிது நேர மௌனத்துக்குப்பிறகு பதில் வந்தது.

" அப்பா நல்லா இருக்கிறாரா?"

“ ம் ரொம்ப நல்லாயிருக்கிறாரு, இப்போ நான் மும்பையுலயிருந்துதான் பேசறேன், உங்கள நான் சந்திக்க முடியுமா?"

‘ஓ தாராளமா முகவரி தெரியுமா?

”தெரியாது!”

“ எழுதிகுங்க!” எதிர்முனையில் பதில் வர ரகுவரன் குறித்துக்கொண்டான்.
அன்று மாலை அந்த முகவரியிலிருக்கும் வீட்டை கண்டுபிடித்து அழைப்பு மணியை அழுத்திய போது அவர்களே வந்து கதவைத்திறந்து புன்னகையோடு வரவேற்று ஷோபாவில் அமரவைத்துவிட்டு சமையலறைக்குச்சென்று காபி போட்டு எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.போனில் பேசியது இவர்களாகத்தான் இருக்கக்கூடும் எனக்கருதினான் ரகுவரன்.

”உங்க பேரு என்னன்னுகூட அப்பா சொல்லல உங்க பேர தெரிஞ்சிக்கலாமா? “ காபியை ஒரு வாய் உறிஞ்சியபடியே கேட்டான். சாவித்திரி என்று பதில் வந்தது.

" மேடம் உங்க வீட்டுக்காரரு.." அவர் இறந்து ரெண்டு வருசமாச்சு, உங்கப்பா உன்னப்பத்தி நிறைய சொல்லியிருக்கிறார், உன்னோட அம்மா இறந்ததுக்கப்பறம் நீ வேல பார்க்குற இடத்துக்கு அவர வரச்சொல்லி கட்டாயப்படுத்தினது, அவர் வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சது எல்லாமே என்கிட்ட சொல்லியிருக்கிறாரு!"

"அப்படியா!" என்று ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினான் ரகுவரன்.

“ மேடம் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்களுக்கும் என் அப்பாவுக்கும் என்ன உறவுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" சுற்றிவளைக்காமல் வெளிப்படையாகவே கேட்டான்.

சாவித்திரிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறி சுவரில் மாட்டியிருந்த தனது கணவனின் புகைப்படத்தை பார்த்தபடி சொன்னாள்

"அவர கட்டிக்க நான் குடுத்துவைக்காதவ!" சொல்லி வாய் எடுக்கவில்லை அதற்குள் சாவித்திரியின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று வந்திறங்கியது.

ரகுவரனுக்கு எல்லாமே புரிந்தது. மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறினான். வழி நெடுகிலும் அவன் தந்தையின் ஞாபகம் வந்து ஒட்டிக்கொண்டது.

" அப்பறம் எதுக்கு என் கழுத்துல தாலி கட்டினீங்க அந்த மும்பைகாரிய கட்டிக்க வேண்டியதுதானே!" என்றோ ஒருநாள் அவனது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையின்போது அவனது தாயார் கேட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

அப்பாவுக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருக்கக்கூடும் அந்த தோல்வியை தனக்குள்ளே பூட்டி வைத்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு அம்மா இறந்தபோது ஏற்ப்பட்ட தனிமை அவரது பழைய காதலை புரட்டிப்போட்டிருக்கும். மும்பையில் கணவனை இழந்து வாழும் சாவித்திரி மேடத்திடம் பேசுவது அவருக்கு ஆறுதலை தந்திருக்கும் இதைப்போய் தப்பா எடுத்துட்டனே என்று தனக்குத்தானே கோபித்துக்கொண்டான் ரகுவரன்.
மும்பையைவிட்டு வரும்பொழுதே ஊரிலிருந்து அவன் அப்பாவையும் அவன் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்திருந்தான்.

அவர் வீட்டுக்கு வந்தபோது அவரது கையில் புதிய மொபைலொன்றை தந்தான் ரகுவரன். மொத்த சந்தோசமும் அந்த மொபைலில் அடங்கியிருப்பதாக நினைத்து மாடிப்படியேறினார் அவனது தந்தை.

அனேகமாக முதல் கால் மும்பைக்குத்தான் பண்ணப்போகிறார் என நினைத்தபோது ரகுவரனுக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. தனது தந்தையின் மகிழ்ச்சி நீடிக்கட்டும் என நினைத்தபடி தனது அறைக்கு நடந்தான்.

வானம் மேகங்கள் தொலைந்து பிரகாசமாக இருந்தது அவன் மனதைப்போல

No comments: