Friday, January 1, 2010

நண்பன்

மயிலாடியில் தனது பால்ய கால நண்பன் சுந்தரத்தை பார்க்கச் சென்றார் தங்கதுரை. கையில் அரைக்கிலோ மிக்சர் பொட்டலம் அமர்ந்திருந்தது. காம்பவுண்ட் கேட்டை திறந்த போது, ஓடும் மானை துரத்தும் புலியைப்போல உள்ளேயிருந்த நாய் குதித்தோடி வந்ததும் பயத்தில் கேட்டை மூடிக்கொண்டார் தங்கதுரை.

நாயின் வாட்டசாட்டத்தைப்பார்த்ததும் நெஞ்சு பதைபதைத்தது. முன்னங்கால்களை கேட்டில் வைத்து நாய் குரைத்தது அரைகிலோமீட்டர் தூரமாவது கேட்டிருக்கும். வீட்டுக்கதவை திறந்து எட்டிப்பார்த்தாள் சுந்தரத்தின் மனைவி.

’’நிக்‌ஷன் சும்மா நில்லு!” என்ற குரல் கேட்டும் நாய் அடங்கவில்லை, அது பாட்டுக்கு தனது விசுவாசத்தைக்காட்ட குரைத்துக்கொண்டே இருந்தது. சுந்தரத்தின் மனைவி நாயை பிடித்து போர்ட்டிகோவின் தூணில் கட்டிய பிறகே கேட்டை முழுசாய் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் தங்கதுரை.

“ அது குரைக்குமே தவிர கடிகாது, நீங்க உள்ள வாங்க அண்ணா, முன்னயெல்லாம் அடிக்கடி வருவீங்க இப்ப அதுமாதிரி வர்றதில்லையே ஏன்?” என்ற கேள்வியோடு உள்ளே அழைத்தாள் சுந்தரத்தின் மனைவி .

“ வீடு கட்டிகிட்டு இருக்கேன் இல்லியா அதான் வரமுடியல, சுந்தரம் வீட்டுல இருக்காரா?”

“ம் குளிச்சுட்டு இருக்கார், நீங்க உட்காருங்க, இப்ப வந்துடுவாரு!” சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் சுந்தரத்தின் மனைவி.

ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாவது படிக்கும் வரை ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து வீட்டுக்கதைகள் பேசி, சினிமா கதை பேசி, திரிந்த நட்பு, அவரவர்க்கு திருமணமாகி குழந்தைகள் படிக்கும் காலம் வந்த பிறகும் தொடர்வதை பெருமையாக நினைத்துக்கொண்டார் தங்கதுரை.

சுந்தரத்துக்கு வசதி வாய்ப்பு வந்தபிறகும் தன்னை மறக்காமல் நட்புடன் தன்னுடன் பழகுவது ரொம்ப பிடித்திருந்தது. முன்பு ஒரே ஊரில் வீடுகள் இருந்த போது அடிக்கடி சந்திப்புகள் நிகழும். மயிலாடி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்து அங்கேயே வீடு கட்டி சுந்தரம் குடி போனபோது ச்ந்திப்புகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தன.சுந்தரம் குளித்து முடித்து வெள்ளை வேட்டி சட்டையில் புன்னகையுடன் வெளியே வந்தார்.

”எப்படி இருக்கிற தங்கதுர!” தனது தோழனின் கரம் பற்றிக்கொண்டு கேட்டார் சுந்தரம்.

“ரொம்ப நல்லாயிருக்கேன், வீட்டு வேல முடியுற நிலமையில இருக்கு, வர்ற பதினைந்தாம் தேதி ஹிரகப்பிரவேசம் வெச்சிருக்கேன், அவசியம் குடும்பத்தோட வரணும்!” தனது கைப்பையிலிருந்து அழைப்பிதழ் ஒன்றை எடுத்து நீட்டினார் தங்கதுரை.

“ கட்டாயம் வருவோம்!” என்று மகிழ்ச்சி கலந்த குரலில் சொன்னார் சுந்தரம். சுந்தரத்தின் மனைவி காபி போட்டு எடுத்து வந்தாள். இருவரும் பேசிக்கொண்டே காபியை ருசிக்க ஆரம்பித்தனர்.

”எனக்கு பள்ளிகூடம் போக நேரமாச்சு, நீ வீட்டுல இருந்து மதியம் சாப்பிட்டுட்டுதான் போகணும்!”

”இல்ல சுந்தரம் நிறைய வீடுகளுக்கு அழைப்பிதழ் தரணும் அதனால நான் உடனே கிளம்பணும்!”

”சரி டிபன் சாப்பிட்டுட்டு போலாம்.”

இருவரும் டிபன் சாப்பிட்டுக்கொண்டே பழைய கதைகள், புது வீடு பற்றின விபரங்கள் பேசி முடித்தனர், மயிலாடி பள்ளிக்கூடம் வரை இருவரும் பேசிக்கொண்டே வந்தார்கள்.

”சுந்தரம் கையுல இருந்த பணமெல்லாம் வீடு கட்டுறதுல தீர்ந்திடிச்சு, ஹிரகப்பிரவேசசெலவுக்கு பணமில்ல ஒரு இருபதாயிரம் ரூபா பணமிருந்தா தர முடியுமா?” தங்கதுரை மெல்ல விழுங்கியபடி கேட்டார்.

”இப்போதைக்கு என்கிட்ட அவ்வளவு பணமில்ல பேங்குல பத்தாயிரம் ரூபா பணமிருக்கு, அத எடுத்து தந்துடுறேன், மீதிய வேற எங்கயாவது வாங்கி இப்போதைக்கு சமாளிச்சுக்க!” என்றார். தங்கதுரையும் சரியென்று தலையாட்டினார். இருவரும் வங்கிக்குச் சென்றார்கள், சுந்தரம் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து தந்தபோது ”ரொம்ப நன்றி” என்று வாங்கிக்கொண்டார் தங்கதுரை.

ஹிரகப்பிரவேசம் சிறப்பாக நடந்து முடிந்தது. புதுவீடு கட்டி ஒரு லட்சத்துக்கு மேல் கடனாளியாக இருந்தான் தங்கதுரை. சுந்தரத்தின் வீட்டுக்குப் போனால் பணத்தை திருப்பி கேட்பானே என கருதி மயிலாடிக்கு போவதை நிறுத்தியிருந்தான்.

வருடங்கள் இரண்டு ஓடி ஒளிந்தது. திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜில் சுந்தரம் அட்மிட் ஆகியிருப்பதை அறிந்து அவரை பார்க்கச் சென்றார் தங்கதுரை. அவருக்கு வந்திருப்பது ரத்த புற்று நோய் என்று அறிந்த போது அதிர்ந்தார். சுந்தரத்தால் எதுவும் பேச முடியாமல் படுக்கையிலேயே படுத்திருந்தார்.

”என்னங்க யார் வந்திருக்காங்க பாருங்க” விசும்பலுடன் சொன்னாள் சுந்தரத்தின் மனைவி.

”இப்ப எதுக்கு அழறீங்க சுந்தரத்துக்கு ஒண்ணும் ஆகாது” தங்கதுரை உடைந்த குரலில் சொன்னான்.
சுந்தரம் மெல்ல கண்களை திறந்து பார்த்தார். கைகளில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.
சுந்தரம் கண்களை உயர்த்தி வானத்தை காட்டினார், அதன் பொருள் தான் மேலே சென்று விடுவதை குறிப்பிட்டு சொல்வதைப்போல இருந்தது.தங்கதுரை குமுறி குமுறி அழ ஆரம்பித்தார். அன்று மாலை வரை அவருடன் இருந்துவிட்டு கண்ணீரோடு வீடு திரும்பினார் த்ங்கதுரை.

தங்கதுரைக்கு பயம் தொற்றிக்கொண்டது.சுந்தரத்துக்கு ஏதாவது ஆகிவிட்டால் அவனிடமிருந்து வாங்கிய பத்தாயிரம் ருபாய் பணத்தை உடனே திருப்பித்தர வேண்டும். அவன் மனது மெல்ல சஞ்சலப்பட்டது. தன்னிடம் வாங்கிய பணத்தை மனைவியிடம் சொல்லியிருப்பானோ? ஒருவேளை அவன் சொல்லாமல் விட்டிருந்து அவனது உயிர் பிரிந்தால் பத்தாயிரம் ருபாய் பணம் தர தேவையில்லை என்ற கனவுகளோடு வீடு வந்து சேர்ந்தான்.

அடிக்கடி சுந்தரத்தை சென்று பார்த்தால் பணம் கடன் தந்த விசயத்தை ஞாபகப்படுத்தி அவனது மனைவியிடம் சொல்லக்கூடும் எனக்கருதி சுந்தரத்தை திரும்பச்சென்று பார்ப்பதை தவிர்த்தான் தங்கதுரை.மூன்று மாதங்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை. சுந்தரம் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மைலாடிக்கு புறப்பட்டார் த்ங்கதுரை. மாலை உடல் அடக்கம் முடியும்வரை இருந்துவிட்டு புறப்படத்தயாரானான்.

”என்னோட நெருங்கிய நண்பனுக்கு இப்பிடியொரு நோய் வந்துடிச்சுன்னு தெரிஞ்சதுக்கப்பறம் அவனப் நேருக்கு நேர் பார்க்க கூட என் மனசுல தெம்பில்ல , அதனாலதான் இத்தன நாளும் அவன நான் பார்க்க வரல” என்று சமாதானம் கூறிக்கொண்டு புறப்பட்டான்.

ஒரு மாதம் கழிந்து சுந்தரத்தின் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

”என் வீட்டுக்காரர் சாகிறதுக்கு முன்னால ஒரு விசயம் சொன்னார் அது விசயமா உங்ககூட கொஞ்சம் பேசணும் மையிலாடிக்கு வந்துட்டு போக முடியுமா?”

தங்கதுரைக்கு சர்வ நாடிகளும் தகர்ந்தது போல் இருந்தது.

”சரி வர்ற ஞாயிற்றுக்கிழமை வந்துடுறேன்” என்றார். மனசு அலைபாய்ந்தது. சுந்தரத்தின் மனைவி உடனடியாக பத்தாயிரம் பணம் வேண்டும் என்று கேட்டால் பணத்துக்கு எங்கு போவது,சாகப்போகும் நேரத்தில் வாங்கிய பணத்தை மறந்திருப்பான் என்று நினைத்தவனுக்கு சுந்தரத்தின் மனைவி தொலைபேசியில் அழைத்தது பேரிடியாக விழுந்தது.

விதியை நொந்தபடி ஞாயிற்றுக்கிழமை மைலாடி புறப்பட்டார்.வீடு ஒரே அமைதியாக இருந்தது. குதித்துவரும் நாய் கூட எழுந்து வர திராணியின்றி படுத்துக்கிடந்தது.ஹாலில் போட்டிருந்த ஷோபாவில் வந்தமர்ந்தார் தங்கதுரை. பணம் உடனடியாக கேட்டால் எப்படி திருப்பி தருவது என்று மனது குடைந்துகொண்டிருந்தது.

அறைக்குள்ளேயிருந்து சுந்தரத்தின் மனைவி வெளிப்பட்டாள். கண்களை லேசாக கண்ணீர் நனைத்திருந்தது.
சிறிது நேர மவுனத்துக்குப்பிறகு பேச ஆரம்பித்தாள்.

”வீட்டுல எல்லாரும் சவுக்கியமா அண்ணா?”

”ம், சவுக்கியம் தான், சுந்தரம் இன்னும் ரொம்ப நாள் இருககவேண்டியவன் இப்பிடி ஒரு வியாதி வந்து இவ்வளவு சீக்கிரம் போவான்னு நினைச்சு கூட பார்க்கல”

”எல்லாம் விதிப்படி நடந்துடிச்சி, என் வீட்டுக்காரர்கிட்ட நீங்க வீடு வெக்குற நேரத்துல இருபதாயிரம் பணம் கேட்டு அவர் உங்களுக்கு பத்தாயிரம் பணம் கொடுத்ததா சொன்னார்!”

”ஆமா” என்று தடுமாறியபடிச் சொன்னார் தங்கதுரை.

”அவர் சாகிறதுக்கு முன்னால இந்த விசயத்தை எங்கிட்ட பல முறை சொன்னார். வீடு கட்டுற நேரத்துல நீங்க கேட்ட பணத்த மொத்தமா தர முடியலேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். எப்பிடியாவது அவருக்கு மீதி பத்தாயிரம் பணத்த குடுத்துடுன்னு சொன்னார், இதுல பத்தாயிரம் ருபா பணமிருக்கு மறுக்காம வாங்கினாத்தான் அவர் ஆத்மா சாந்தியடையும்!”,
தங்கதுரை வார்த்தைகளற்று சிலையாக இருந்தான்.

No comments: