Sunday, September 6, 2009

பரிகாரம்

தனது மகன் சுந்தர் வேறு சாதிப்பெண்ணை பதிவுத்திருமணம் செய்துகொண்டான் என்ற செய்தியை சங்கரராமன் கேட்டபோது மனம் புயல் அடங்காத கடலாய் கொந்தளித்தது. தாயில்லாத தனது ஒரே மகன் மீது பாசத்தை ஊட்டி வளர்த்த காலங்களில் அவனது விருப்பங்களுக்கு எந்த தடைகளும் போட்டதில்லை. அவன் வளர்ந்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தருணத்தில் வேறு சாதிப்பெண்ணோடு நெருங்கி பழகுகிறான் என்ற செய்தி காது வழி கேட்டபோது மட்டும் ஐம்புலன்களையும் அடக்காமல் ஆரவாரம் செய்து வீட்டையே ரணகளமாக்கினார் சங்கரராமன்.

காதல் பற்றிய புரிதல் அப்பாவுக்கு ஏன் குறைந்து போனது என்று அவருக்கு எதிராக வாக்குவாதத்தில் இறங்கி இறுதியில் தோற்றுப்போன சுந்தர், பாறசாலை பதிவு அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டு தனது மனைவியோடு மும்பைக்கு ரயிலேறினான்.

தன்னைவிட அவனுக்கு வேறுசாதிப்பெண் பெரிதாய் தோன்றியிருக்கும் அதனால்தானே தன்னை தவிக்கவிட்டுவிட்டு மும்பைக்கு ரயிலேறினான், போகட்டும் தனக்கொன்றும் வயது அதிகமாகி முடங்கி கிடக்கும் நிலை இல்லை. தனியாக காலத்தை தள்ளுவது இப்போதைக்கு பெரிய சுமை இல்லை என்று புலம்ப ஆரம்பித்தார்.

இரண்டு வாரங்களுக்குப்பிறகு சுந்தரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. தனக்கு திருமணமான விஷயத்தை விலாவாரியாக எழுதி தன்னை மன்னித்து அவனது மனைவி பிருந்தாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளும்படி எழுதியிருந்தான்.

கடிதத்தை படித்து முடித்ததும் சங்கரராமனுக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. அவன் பேச்சை நான் கேக்கிறதா என்ற தலைக்கனம் வேறு வந்து அவரை ஆட்டத்தொடங்கியது. கடிதத்தை சுக்குநூறாக கிழித்து குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தார். சற்றும் குறையாமலிருந்தது அவரது பிடிவாதகுணம்.

சுந்தர் அவனது தந்தையை சமாதானப்படுத்த தொடர்ந்து கடிதமெழுதியும் எந்த பதிலும் வராமல் போகவே பின்பு கடிதம் எழுதுவதையே நிறுத்தியிருந்தான்.

தந்தைக்கும் மகனுக்குமான உறவு துண்டிக்கப்பட்டு மகனைப்பற்றிய சிந்தனைகளற்று வாழ்க்கை எப்பொழுதும்போல் நகர்ந்துகொண்டிருந்தது, பத்து வருடங்கள் தாண்டியதுகூட தெரியாமல்.

அன்று தனது பென்ஷன் பணம் எடுக்க வங்கிக்குச் சென்ற சங்கரராமன் வழக்கம் போல் பணத்தை எடுத்துவிட்டு திரும்புகையில் வங்கியில் வேலை பார்க்கும் வரதப்பன் ஒடி வந்து அவர் கரம் பற்றினான்.

“சார் நல்லா இருக்கீங்களா? நான் வரதப்பன், உங்க மகன் சுந்தரோட ப்ரெண்ட், இதுக்கு முன்னால மும்பையுலதான் வேல பார்த்துகிட்டு இருந்தேன், போன வாரம் தான் இங்க டிரான்ஸ்பர் கிடைச்சு வந்தேன். உங்க மகன் சுந்தர மும்பையுல அடிக்கடி பார்ப்பேன். அவன் குழந்தைக்கு…..! அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சங்கரராமனுக்கு சட்டென்று கோபம் வந்தேறியது.

‘’அவனப்பற்றி என்கிட்ட எதுக்குச் சொல்ற, அவன் எனக்கு மகனும் இல்ல, நான் அவனுக்கு அப்பனும் இல்ல! சொல்லிவிட்டு வேகமாய் வங்கியை விட்டு வெளியேறினார் சங்கரராமன்.

தனது சொந்த மகன் மீதிருக்கும் வெறுப்பு இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே இருப்பது கண்டு மனம் நொந்தபடியே தனது இருக்கைக்குச்சென்று வேலைகளை கவனிக்கத்தொடங்கினான் வரதப்பன்.

சங்கரராமன் வேகமாய் வீட்டுக்கு நடந்தார். வழிநெடுகிலும் தனது மகனைப்பற்றிய செய்தி அவரை குடைந்துகொண்டிருந்தது. எதுக்கு அவன சந்தித்தோம் என நினைக்கையில் கோபத்தின் உக்கிரம் இருவர் மீதும் சரிசமமாய் இறங்கியது. இரவு படுக்கையில் விழுந்தபோதிலும் மகனைப்பற்றிய நினைவுகள் விலக மறுத்து தூக்கத்தை வரவிடாமல் தடைபோட்டது.

இருள் கவிந்த இரண்டாம் ஜாமத்துக்குப்பின்பும் குளிரூட்டப்பட்ட அந்த அடர்ந்த இரவில் தன்னைவிட்டு விலகிப்போன மகனின் நினைவுகளை அசை போட்டபடியே படுத்துக்கிடந்தார்.

கண்களில் லேசாய் கண்ணீர் உருண்டோடி அவர் காதுகளை நனைத்திருந்தது.
சுந்தருக்கு என்ன குழந்தை பிறந்திருக்கும் ஆண்குழந்தையா அல்லது பெண் குழந்தையா? ஒரு குழந்தையா இல்லை அதற்க்கும் மேலுமா? அவனது மனைவி கறுப்பா இல்லை சிவப்பா, அவனுக்கு பொருத்தமானவளா என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகள் அவரை சூழ்ந்து கொண்டு தூக்கத்தை வழிமறித்தது,

தனக்கு ஏன் இப்படியொரு சற்றும் விலகாத பிடிவாத குணம் இருக்கிறது என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். அன்றிரவு தூக்கம் வராமலேயே பொழுது விடிந்திருந்தது.

காலை பத்து மணி வாக்கில் வரதப்பனைப்பார்க்க வங்கிக்குச்சென்றார் சங்கரராமன். அவரது வருகையைப்பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டு தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார் வரதப்பன்.

நேற்று வீராப்பாய் பேசிவிட்டு இன்று அவனிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தன் மகனைப்பற்றியும் அவனது குழந்தையைப்பற்றியும் விசாரிப்பது என்ற கவலை வேறு அவரை அலைக்கழித்தது.

கவுண்டரில் பணத்தை எண்ணிக்கொண்டிருந்த வரதப்பனின் அருகே வந்து நின்று அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார் சங்கரராமன்.

‘’பணம் எடுக்கணுமா சார்! வரதப்பனே வலிய கேட்டபோது சற்று ஆசுவாசமாக இருந்தது.

‘’என் மகன் விலாசம் கிடைக்குமா? ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டதுபோல் தாழ்ந்த குரலில் கேட்டார் சங்கரராமன். வரதப்பன் சுந்தரின் விலாசமும் அவனது அலைபேசி எண்ணையும் ஒரு துண்டு சீட்டில் எழுதி தந்தான்.

‘’ரொம்ப நன்றிப்பா! என்றபடியே வீட்டுக்கு நடந்தார், தனது மகனிடம் தொலைபேசியில் பேசுவதைவிட சொல்லாமல் கொள்ளாமல் நேரில் சென்று ஒருமுறை பார்த்துவிட்டு வருவது நல்லதென்று தோன்ற மறுநாள் காலை மும்பைக்கு ரயிலேறினார் சங்கரராமன்.

மும்பையில் தனது மகனின் முகவரியை கண்டுபிடித்து அவனது வீட்டு கதவைத் தட்டிய போது கதவைத் திறந்த சுந்தருக்கு வெளியில் தனது அப்பா நிற்பதைப் பார்த்து திகைத்துப்போய் ``அப்பா’’ என்றழைத்தவாறு அவரை கட்டி அணைத்தான், அவர் கையிலிருந்த சூட்கேசை வாங்கிவிட்டு அவர் கரம் பற்றி வீட்டிற்க்குள் அழைத்து வந்தான். தன்னை வெறுத்திருந்த அப்பாவிற்கு எப்படி திடீர் பாசம் வந்தது என்று அச்சரியப்பட்டுக்கொண்டே வீட்டுக்குள் நடந்தான்.

``பிருந்தா, அப்பா வந்திருக்காரு! என்று உரக்க சத்தமிட்டான். சமையலறையிலிருந்து வெளிப்பட்ட பிருந்தா ஒடிவந்து அவர் காலில் விழுந்தாள்.

” உங்க சம்மதம் இல்லாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டோம், எங்கள மன்னிச்சிடுங்க மாமா!”

“ நல்லாயிரு” என்றபடியே தனது பேரக்குழந்தையை தேட ஆரம்பித்தார்.

”உங்களுக்கு எத்தன குழந்தையிங்க ?”

” ஒரே பையன்தான்ப்பா, பேரு ஈஸ்வர் அவனுக்கு இப்போ ஒன்பது வயசு ஆகுது, அவன் தூங்கிகிட்டு இருக்கான், நீங்க குளிச்சுட்டு வந்துடுங்க,”

சங்கரராமன் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு வந்த போது சுந்தரின் மகன் ஈஸ்வர் அவனது அம்மாவை விட்டு விலகாமல் அவள் போகுமிடமெல்லாம் அவனும் பின்னால் போய்க்கொண்டிருந்தான். தனது பேரனைக் கண்ட சந்தோஷத்தில் அவன் கைகளை பிடித்தார் சங்கரராமன். ஈஸ்வர் அவரது கைகளை உதறிவிட்டு அவன் அம்மாவின் பின்னால் முகத்தை மறைத்தான்.

” டேய், உன் தாத்தாடா!” என்றான் சுந்தர்.

” தாத்தான்னா?

“ என்னோட அப்பா!”

“ உங்க அப்பாவுக்கு முடி வெள்ளையா இருக்கு, உங்களுக்கு முடி கறுப்பா இருக்கு ஏன்?”

” எனக்கு வயசாகுறப்போ என் அப்பா மாதிரியே வெள்ளையாயிடும்!”

” எனக்கெப்போ முடி வெள்ளையாகும்!” தனது பேரனின் கேள்விகளைக்கேட்டதும் சங்கரராமனுக்கு முகம் சுருங்கியது.

” சுந்தர், பேரனுக்கு எதாவது பிரச்சனையா?” ஒரு வித பதட்டத்தோடு கேட்டார் சங்கரராமன்.

“ அப்பா, நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லப்பா, அவனுக்கு இப்போ வயசு ஒன்பது ஆனா ரெண்டு வயசு பையனோட புத்தி தான் அவன்கிட்ட இருக்கு, ஒரு மாசத்துக்கு முன்னால வரைக்கும் நார்மலாத்தான் இருந்தான், ஸ்கூல்ல ஏ கிரேடு மார்க் வாங்கி நல்லா படிக்கிறவன், தமிழ், ஆங்கிலம் இந்தின்னு மூணு மொழியிலயும் நல்லா பேசுவான், அவன் எதையோ பாத்து பயந்திருக்கிறான், அப்பறம் ஒருநாள் பயங்கரமா கோபப்பட்டான், அதுக்கப்புறம் திடீர்ன்னு மயக்கம் போட்டு கீழே விழுந்தவன் மயக்கம் தெளிஞ்சதுக்கப்புறம் என்னயும் என் மனைவியையும் பார்த்து நீங்க ரெண்டு பேரும் யாருன்னு கேட்டான், உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம், இவனுக்கு டிஸ்ஸசோசியேட் அம்னீஷியாங்கற நோய் வந்திருக்கிறதனால பழசெல்லாம் மறந்து போய் ரெண்டு வயசு குழந்தையோட ஞாபகம் தான் இப்போ அவன்கிட்ட இருக்கு, அவனுக்கு படிப்படியா இழந்து போன ஞாபகம் திரும்பிவர ஒரு வருஷம் ஆகுமாம். சென்னையுல ஒரு டாக்டர் இருக்காராம் அவர்கிட்ட சிகிட்சை எடுத்தா ஒரு மாசத்துல பழைய ஞாபகங்கள் வந்துடுமுன்னு சொல்றார், அடுத்த வாரம் அவரப்போய் பார்க்கலாமுன்னு இருக்கோம்!”. சுந்தர் சொல்லி முடித்த போது சங்கரராமன் சற்று தடுமாறிப் போனார்.

பேரனை பரிவுடன் பார்த்தவர் அவனை அருகே அழைத்து தனது மடியில் அமர வைத்து பேச அரம்பித்தார். அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான்.

சங்கரராமன் வந்து ஒரு வாரம் ஓடிப்போனதே தெரியவில்லை. தனது பேரனோடு நன்றாக பொழுது போய்க்கொண்டிருந்தது அவருக்கு.

“ என்னங்க ஈஸ்வர கூட்டிகிட்டு சென்னைக்குப் போய் டாக்டர பார்க்கணுமுன்னு சொன்னீங்களே எப்போ புறப்படுறீங்க?” அவனது மனைவி அமைதியாய் கேட்டாள்.

”இப்போ போறதுமாதிரி ஐடியா எதுவும் இல்ல”

“ என்னங்க சொல்றீங்க, உடனே அவனுக்கு சிகிட்சை ஆரம்பிச்சு ஸ்கூலுக்கு அனுப்பணும், இல்லையின்னா ஒரு வருடம் வேஸ்ட் ஆயிடும்”

“ ஒரு வருஷம் என்னடி எத்தன வருஷமானாலும் பரவாயில்ல, எப்போ அவனுக்கு பழைய நினைவுகள் திரும்புதோ அப்போ வரட்டும்!”

“ என்னங்க முட்டாள்தனமா பேசறீங்க, பையனோட எதிர்காலத்தப்பத்தி கொஞ்சம்கூட உங்களுக்கு அக்கறையே இல்லையா” சற்று கோபமாகவே கேட்டாள் பிருந்தா.

” என் அப்பாவும் நம்ம பையனும் எவ்வளவு சந்தோஷமா பழகுறாங்க பாத்தியா, ஊருல அப்பாவுக்கு எதிரா நாம ரெண்டு பேரும் திருமணம் பண்ணிகிட்டு இங்க வந்துட்டோம், இதுவே அப்பாவோட சம்மதத்தோட நடந்திருந்தா, நம்ம குழந்தைய என் அப்பா தூக்கி கொஞ்சி விளையாடி சந்தோஷப்பட்டிருப்பாரு, அந்த பாக்யத்த அவருக்கு நாம குடுக்கல, அத இப்போ அனுபவிக்கிறாரு, இந்த நேரத்துல அவனுக்கு சிகிட்சை குடுத்து பழைய படி ஈஸ்வர் மாறீட்டான்னா இதுமாதிரி என் அப்பாகிட்ட பழகுவானான்னு தெரியாது. என் அப்பாவுக்கு அந்த சந்தோஷம் கிடைக்காமலேயே போயிடும்!”.

சுந்தர் சொல்லி முடித்த போது ஊரில் ஒற்றை தனிமரமாய் விட்டு விட்டு வந்த அவளது மாமனாரை ஒரு கணம் நினைத்துக்கொண்டாள். அவருக்கு சந்தோஷம் கிடைப்பதாக இருந்தால் அந்த சந்தோஷம் நீடிக்கட்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு தாத்தாவும் பேரனும் கொஞ்சி விளையாடும் அழகை ரசித்த படி நின்றாள் மனம் நிறைந்தவளாய்.

கல்கி 13.09.09

3 comments:

சேவியர் said...

மனம் கனக்கும் கதை நண்பரே !

க.பாலாசி said...

நல்ல கதை....

இறுதியின் நம் மனமும் அதையே சொல்கிறது...நல்ல எழுத்துநடை....

அமர பாரதி said...

இப்படி கருத்து சொல்வதற்கு பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சொந்த பிடிவாதத்துக்காக 10 வருடம் குழந்தையைப் பார்க்காமல் இருந்த அரக்க தந்தைக்காக தன்னுடைய இளங்குருத்தின் எதிர்காலத்தைப் பணயம் வைப்பது கொடுமையாக இருக்கிறது. மேலும் பழைய நினைவுகள் வந்தால் என்ன தவறு? அப்போதும் தாத்தா என்றே அறிமுகப் படுத்தலேமே. அர்த்தமில்லாத சென்டிமென்ட்டுகளை ஊக்குவிக்க வேண்டாம்.