Tuesday, July 7, 2009

காதல் பாசிகள்

முன்சிறை திருமலை கோவிலுக்குப் பின்னாலிருந்த சுதா வீட்டுக்கு ரமேஷ்சும் அவன் தாய் தந்தையரும் உறவினர்களும் காரில் வந்து இறங்க, மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்று ஹாலில் அமர வைத்தார் சுதாவின் தந்தை ஆறுமுகம்.

” அடுத்த மாசம் பதினைந்தாம் தேதி நாள் நல்லாயிருக்கு, அண்ணைக்கு கல்யாணத்த வெச்சுடலாம்!” புரோகிதர் சொன்னபோது அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

“ ஒரு நிமிஷம்!” மணப்பெண் சுதா குரல் கொடுத்த போது மொத்த கூட்டமும் அவளை திரும்பிப் பார்த்தது.

" இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டமில்ல!” பதட்டமான குரலில் சொன்னாள் சுதா.

“ என்ன விளையாடுறியா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள வரவழைச்சுட்டு இப்பிடியா பொறுப்பில்லாம பேசறது!” சுதாவின் தந்தை ஆறுமுகம் கோபத்தில் கொதித்தார்.

" என்னம்மா போன வாரம் உன்ன பொண்ணு பார்க்க வந்தப்போ மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னதால தானே பெரியவங்க நாங்க பேசி முடிவு பண்ணி இண்ணைக்கு நிச்சயதார்த்தம் வைக்க தீர்மானிச்சோம், இப்போ திடீர்ன்னு என் மகன பிடிக்கலையின்னு சொன்னா அவன் மனசு என்ன பாடு படுமுன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?” ரமேஷின் தந்தை வேலுச்சாமி தனது மகனுக்காக பரிந்து பேசினார்.

”அங்கிள், உங்க மகன் ரெண்டு வருஷமா ஒரு பொண்ண காதலிச்சுட்டு அவ வசதி வாய்ப்புல குறைஞ்சவன்னு தெரிஞ்சதும் அவள கைகழுவி விட்டுட்டு வந்திருக்காரே அந்த பொண்ணோட மனசு என்ன பாடுபட்டிருக்குமுன்னு உங்க மகன் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தாரா?” சுதா தீர்க்கமான குரலில் சொல்ல. அனைவருக்கும் அது சுருக்கென்றிருந்தது.

“ சுதா நீ சொல்றது உண்மையா?” பதட்டக்குரலில் கேட்டார் வேலுச்சாமி.

”ஆமா அங்கிள் அவ பேரு திவ்யா, பத்தாம் வகுப்பு வரைக்கும் என்கூட ஒண்ணா படிச்சவ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் எல்லா விபரமும் என்கிட்ட போன்ல சொன்னா, என்ன மன்னிச்சிடுங்க அங்கிள்!” சுதாவின் தலை குனிந்திருந்தாலும் அவள் குரல் உயர்ந்திருந்தது.

" டேய், சுதா சொல்றதெல்லாம் உண்மையாடா?” ரமேஷை உலுக்கிக் கேட்டார் வேலுச்சாமி. அவன் பதிலெதுவும் பேசாமல் சிலையாய் நின்றான்.



" டேய், உங்கம்மாவும் நானும் காதலிச்சு அப்பறம் பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணுனவங்க, எங்களுக்கு பிறந்த நீ காதலுக்கு துரோகம் பண்ணிகிட்டு எப்பிடிடா இன்னொரு பொண்ண கட்டிக்க ஆசப்படுவ!” தனது நம்பிக்கைகள் நொறுங்கிப்போக தலைகுனிந்தபடியே வெளியேறினார் வேலுச்சாமி

” வண்டிய திவ்யா வீட்டுக்கு திருப்புப்பா, அந்த பொண்ணு தான் என் மருமக, ரமேஷ் நீ தாலி கட்டுறதா இருந்தா அவ கழுத்துல தான் கட்டணும், சம்மதமா?” ரமேஷ் தலையாட்டினான். தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்ற குற்ற உணர்வு அவனை புரட்டிப்போட்டது.

கார் திவ்யா வீட்டு வாசல் முன்பு வந்து நின்றது. அனைவரும் திடுதிப்பென வீட்டுக்குள் நுழைய திவ்யாவும் அவள் குடும்பத்தாரும் ஆச்சரியமானார்கள்.

” திவ்யா, நான் ரமேஷ்சோட அப்பா, எனக்கு உங்க காதல் விஷயமெல்லாம் தெரியாது, தெரிஞ்சிருந்தா என் மகனுக்கு உன்ன எப்பவோ கட்டி வெச்சிருப்பேன்!” வேலுச்சாமியின் வார்த்தைகள் திவ்யாவுக்க்கு ஆறுதலாக இருந்தது.

" இருங்க, எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்!” திவ்யா சமையலறைக்குள் நுழைந்து பம்பரமாய் சுழன்று காபி போட்டு எடுத்து வந்து அனைவருக்கும் பரிமாறினாள்.

”என்ன மன்னிச்சுடு திவ்யா அண்ணைக்கு நான் என்ன மறந்துடுன்னு உன்கிட்டச் சொன்னேன், அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ நான் புரிஞ்சுகிட்டேன். இனிமே நீ தான் என் மனைவி, உன்னத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்!” ரமேஷ் தனது தவறை உணர்ந்தபடியே சொன்னான்.

" ரமேஷ், நீங்க மனசு மாறுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். வாழ்க்கையுல காதல்ங்கறது ஒருத்தருக்கு ஒரு தடவ தான் வரும், அந்த காதல் மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிடும். ஒரு தடவ மனச மாத்திகிட்டு மறுபடியும் காதல அழிச்சுட்டு எழுதறதுக்கு மனசு ஒண்ணும் சிலேட்டுப் பலகை இல்ல, நீ என்ன மறந்துடுன்னு சொன்னப்பவே நான் உன்ன மறந்துட்டேன். இப்போ நீ திருந்தியிட்டதால மறுபடியும் என் மனசுல இடம் குடுத்துட்டா அது காதலையே களங்கப்படுத்தறமாதிரி ஆயிடும், உன்ன கட்டிக்க எனக்கு விருப்பம் இல்ல, நீங்க போலாம்!” திவ்யாவின் வார்த்தைகள் நெருப்பாய் வந்துவிழ தொங்கிய முகத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான் ரமேஷ்.

“ ஒரு பொண்ண காதலிச்சுட்டு அவள கைகழுவி விடுற ஆளுங்களுக்கு நீ எடுத்த முடிவுதாம்மா சரி, நாங்க வர்றோம்!” வேலுச்சாமி வேகமாய் வெளியேற அவருக்குப் பின்னால் அவரது உறவினர்களும் வெளியேறினார்கள்.

படித்துறைகளில் படிந்திருக்கும் நீர்பாசிகளை மீன்கள் வந்து கொத்தி தின்று அது சுத்தமாவதைப்போல் திவ்யாவின் மனதில் படிந்து கிடந்த காதல் பாசிகள் மறைந்து சுத்தமாக இருந்தது.

1 comment:

Raju said...

நல்ல ட்விஸ்ட்டு...!