குமரிமாவட்டம் குன்னத்தூர் அருகேயுள்ள உதச்சிக்கோட்டை எனும் ஊரில் கள்ளசொக்கன் எனும் திருடன் இருந்தார். பார்ப்பதற்க்கு பீமனாக காட்சியளிக்கும் இவர் இரவு நேரங்களில் திருடுவதை ஒரு தொழிலாக கொண்டிருந்தார்.
பசுக்கன்றுகள், ஆட்டுக்குட்டிகள், அரிசிமூட்டை என எதுவாக இருந்தாலும் அவற்றை அலக்காக தூக்கி வருவது இவரது பலம். திருடுவதில் வல்லவர் என்பதைப்போல சமயோசிதமாய் சிந்திப்பதிலும் கெட்டிக்கார்.
இவரது பக்கத்து வீட்டு பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த இவர் தனது தங்கைக்கும் அதே நாளில் திருமணம் நிச்சயம் செய்தார். குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் திருமணத்திற்க்குத் தேவையான அரிசி, காய்கறிகள் வாங்கி வைத்திருந்தனர். அன்றிரவு அவர்கள் வீட்டில் ஆட்டையை போடுவது என்று தீர்மானித்து நள்ளிரவு சென்று அவர்கள் வாங்கி வைத்திருந்த அரிசி காய்கறிகளை கொண்டு வந்து தனது வீட்டில் வைத்துக்கொண்டு திருமண வேலையை தடபுடலாக நடத்திக்கொண்டிருந்தார்.
பக்கத்து வீட்டுக்காரருக்கு புரிந்தது இது கள்ளச்சொக்கன் வேலை தான் என்று. உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தனது பொருளை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொண்டார்.
தன்னைத்தேடி போலீஸ் வருவதையறிந்த கள்ளச்சொக்கன் சமயோசிதமாய் சிந்தித்து திருடி வந்த அரிசியுடன் உமி சேர்த்து உரலில் போட்டு பெண்களிடம் குத்தச் சொல்லியிருக்கிறான்.
போலீஸ் வந்த போது பெண்கள் பலர் உரலில் நெல்குத்திக்கொண்டும் சிலர் குத்திய நெல்லை முறத்தால் உமி விலக்கியும் வேலை செய்துகொண்டிருப்பதைப்பார்த்து வந்த வழியே திரும்பி நடந்தார்கள் போலீசார்.
No comments:
Post a Comment