Monday, May 11, 2009

டைரி

திருமணமான மறுவாரமே அசோகனின் மனைவிக்கும் அவன் அம்மாவிற்க்கும் சமையல் செய்வதில் பிரச்சனை வந்து அது சண்டையாய் மாறியது.

” என்னங்க, அத்தை என்ன திட்டினாங்க!” .

“ டேய், உன் மனைவி என்கிட்ட மரியாதையில்லாம நடந்துகிட்டா!” வருத்தம் படிந்த முகத்துடன் சொன்னாள் அவனது தாயார். அசோகன் தீவிரமாய் யோசித்து இருவருக்கும் இரண்டு டைரி வாங்கித்தந்தான்.

” நீங்க சண்டை போடுங்க தப்பில்ல ஆனா அந்த சண்டை எதுக்காக வந்ததுன்னு நான் தெரிஞ்சுக்கணும் அதனால இந்த டைரியுல நடந்த சண்டைய எழுதி வையுங்க, நான் வந்து படிச்சு தெரிஞ்சுக்கறேன்!” என்றான் அசோகன்.

ஆரம்பத்தில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடந்த சண்டையை எழுத ஆரம்பித்தார்கள். அதன் பிறகு எழுதுவது குறைந்து சண்டையே போடாமல் சமாதானமாகிவிட்டார்கள்.

அசோகனுக்கு அது ஆச்சரியமாகப்படவே தனது மனைவியிடம் அதற்கான காரணத்தை கேட்டான்.

” ஆரம்பத்துல சண்டை போட்டுட்டு அத டைரியுல எழுத ஞாபகப்படுத்தினப்போ இப்படியெல்லாமா கோபத்துல அத்தைய திட்டினோம்னு மனசு கஷ்டமாச்சு, இதேமாதிரி தான் அத்தைக்கும் தோணிச்சாம், அப்பறம் சண்டை போடுறதையே நிறுத்தியிட்டோம்!” அவள் சொல்லச் சொல்ல அசோகன் ஆனந்தப் பரவசமானான்.

1 comment:

Anonymous said...

Good idea... nice post...
renga