Monday, April 6, 2009

வீரன்

ஜல்லிக்கட்டில் திமிறிய காளையை துரத்தி வந்து அதன் திமிலைப்பிடித்து அடக்கினான் லிங்கம். வெற்றிக்களிப்பில் கறிச்சோறு தின்றுவிட்டு பரிசாக கிடைத்த பணமுடிப்பை கையில் வைத்துக்கொண்டு தன்னை திருமணம் செய்ய மறுத்து வரும் முறைப்பெண் வசந்தியைப் பார்க்கப் புறப்பட்டான்.

வசந்தி குளத்தங்கரையில் துணி துவைத்துக்கொண்டு நின்றாள். அவளுக்கு முன்பாக நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து நின்றான் லிங்கம்.

’’ பார்த்தியா காளைய அடக்கி பணமுடிப்பு ம் வாங்கியிட்டேன், இப்ப சொல்லு இந்த வீரன கட்டிக்கிறியா இல்ல அந்த ஒல்லிப்பிசாசு தங்கவேலுவ கட்டிக்கப்போறியா?’’

’’ தங்கவேலு உன்ன விட வீரன், நான் அவனத்தான் கட்டிக்குவேன்!’’ வசந்தி முடிவாகச்சொன்னாள்.

“ என்னவிட அவன் எந்த விதத்துல வீரன் சொல்லு!’’ கோபம் கொப்பளிக்க கேட்டான் லிங்கம்.

‘’ தெருக்கோடியுல இருக்கிற டீக்கடையுல இருந்த இரட்டை டம்ளர் முறையுல டீ குடிக்க கூடாதுன்னு போராடி, அத வேரோட பிடுங்கி எறிஞ்சி எல்லாரையும் ஒரே டம்ளர்ல டீ குடிக்க வெச்சானே தங்கவேலு, என் பார்வைக்கு அவன்தான் வீரனா தெரியறான்!’’ வசந்தி சொன்னபோது தங்கவேலு வீரன் என்பதை ஒத்துக்கொண்டு வந்தவழியே திரும்பி நடந்தான் லிங்கம், அவளை மறந்தபடி..

1 comment:

Vadaly said...

இரட்டை டம்ளர் முறை...

ithu innuma irukkirathu..?