Tuesday, March 24, 2009

புயல்

சுந்தரின் அண்ணனுக்கு அவன் மனைவி மீது சந்தேகம். காரணம், அவனைவிட அவன் மனைவி ரொம்ப அழகு.

சுந்தருக்கு திருமண ஆலோசனை வந்தபோது, தன் அண்ணனின் நிலைமை தனக்கு வந்துவிடக்கூடாதென்று தன்னைவிட சுமாரான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது எனத் தீர்மானித்தான்.

மூன்றே மாதங்களில் அவன் நினைத்ததுபோல் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான்.

திருமணம் முடிந்த மறுநாள் சுந்தரின் அலுவலகத்தில் பணிபுரியும் பார்வதி வந்திருந்தாள்.

"நேற்றைக்குத்தான் எங்க அக்கா பொண்ணுக்கு காது குத்து. அதனாலதான் உன் கல்யாணத்துக்கு என்னால வரமுடியல, தப்பா நெனச்சுடாத! ”என்று, குழைய குழைய பேசி விட்டு தன்னிடமிருந்த கிப்டை அவனிடம் தந்துவிட்டுப் புறப்பட்டாள்.

அதுவரை அமைதியாக இருந்த சுந்தரின் மனைவி கேட்டாள்.

“அந்தப் பொண்ணு உங்ககிட்ட பேசின விதம் எனக்குக் கொஞ்சமும் புடிக்கல, நீங்க கொஞ்சம் அழகா இருக்கிறதுனால எப்படியெல்லாம் பார்க்கிறா!” சுந்தர் மீது அவன் மனைவிக்கு சந்தேகப் புயல் மையம் கொள்ள, வெகு தூரத்துக்கு அடித்துச் சுழற்றியது அவள் பேச்சு

No comments: