Thursday, February 19, 2009

பிடிச்ச விஷயம்

சாயங்கால வேளையில் தனது தோழி அம்பிகாவைப் பார்க்க அவள் வீட்டுக்குச் சென்றாள் அனு. பூட்டிய வீட்டுக்குள் அவளது கணவன் காட்டுகத்தலாய் கத்திக்கொண்டிருந்தார். அழைப்பு மணியை அடிப்பதா வேண்டாமா என தயங்கி பின்பு அடித்தாள்.

கதவை திறந்து வெளியே பார்த்த அவளது கணவர் ‘’ வாங்க என்று அழைத்துவிட்டு வெளியேறிப்போனார். அம்பிகாவின் முகத்தில் எந்த வித வருத்தமுமின்றி இயல்பாகவே இருந்தாள்.

’’என்னடி உன் புருஷன் இந்த திட்டு திட்டுறாரு கேட்டுகிட்டு சும்மா நிக்கற!’’ அனு ஆதங்கத்துடன் கேட்டாள்.

`` எப்பவுமே அவர் சட்டப்பாட்கெட்டுலயிருந்து செலவுக்கு பணத்த எடுத்துட்டு சொல்லிடுவேன், இண்ணைக்கு சொல்ல மறந்துட்டேன், பாவம் அவர் பாக்கெட்டுல பணமிருக்குன்னு நெனச்சு பிரண்ஸ்சோட ஹோட்டலுக்கு போய் ஏமார்ந்துட்டாராம்!’’ தனது கணவரைப்பற்றி ஆதரவாகப்பேசிய அவளை ஆச்சரியமாகப்பார்த்தாள்.

`` அதுக்காக இப்பிடியா கண்டபடி திட்டுறது, உனக்கு வருத்தமே இல்லையா?

‘’ நான் எதுக்கு வருத்தப்படணூம், அவர்தான் ரொம்ப வருத்தப்படுவாரு, என்ன அதிகமா திட்டியிட்டேன்னு வர்றப்போ மல்லிகைப்பூவோட வந்து என்ன சமாதானப்படுத்துவார், எனக்கு அவர்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே அதுதான் என்றபோது அனு அசந்துபோனாள்