Wednesday, July 25, 2012

பிடித்தது


பெண் பார்க்க வந்த ராதாகிருஷ்ணனுக்கு காபி பரிமாறும்பொழுது கூடவே புன்னகையையும் சேர்த்து பரிமாறினாள் ஸ்வேதா.

“”மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்கா?’’ ராதாகிருஷ்ணனின் காதோரம் வாயை கொண்டு வந்து கேட்டார் தரகர்.

``பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசிகிட்டு சொல்றனே!’’ என்றான் ராதாகிருஷ்ண்\ன். இருவரும் மாடிப்படியேறினார்கள்.

எனக்கு ரஜினி பிடிக்கும், இளையராஜா பாட்டு பிடிக்கும், மல்லிகைப்பூ பிடிக்கும், சாம்பார் இட்லி பிடிக்கும், என்று தனக்கு பிடித்த விஷயங்களை மனதிற்க்குள் பட்டியலிட்டு அதை ஸ்வேதாவிடம் சொல்ல ஆரம்பித்தான் ராதாகிருஷ்ணன்.

‘’உங்களுக்கு பிடிச்ச விஷயத்த சொல்றதவிட உங்களுக்கு பிடிக்காத விஷயம் இருந்தா அதச் சொல்லுங்க!’’ இடைமறித்தாள் ஸ்வேதா.

``ஏன், எனக்கு புடிச்ச விஷயம் என்னண்ணு கேட்கமாட்டியா?’’ சற்றே மிதமான கோபத்தில் கேட்டான் ராதாகிருஷ்ணன்.

``அப்பிடி இல்ல, உங்களுக்கு என்னன்ன பிடிக்குமுங்கறத கல்யாணத்துக்கு அப்பறம் குடும்பம் நடத்துறப்போ போகப்போக தெரிஞ்சுக்குவேன், உங்களுக்கு பிடிக்காத விஷயத்த இப்பவே சொன்னீங்கண்ணா, அத தெரிஞ்சுகிட்டு உங்க மனம் கோணாம நடந்துக்குவேன்!’’ நாணமாய்ச்சொன்ன ஸ்வேதாவை ரொம்பவும் பிடித்துப்போக தனக்கு பிடிக்காத விஷயங்களை சொல்ல ஆரம்பித்தான் ராதாகிருஷ்ணன்..

No comments: