என்னைக் கடந்து செல்லும்
எல்லாப் பார்வைகளிலும்
எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது
உனது பார்வை!
என்ற கவிதை வரிகளில் ஆரம்பித்து இறுதி வரை கவிதையாகவே எழுதியிருக்கும் தனது தந்தையின் 1980 வருடத்திற்க்கான நாட்குறிப்புகளை திருட்டுத்தனமாக படித்தபோது நிரஞ்சனுக்கு ஒரு சிலிர்ப்பு வந்து ஒட்டிக்கொண்டது.
இ-மெயில், எஸ்.எம்.எஸ் என்று காதலை வளர்க்கும் இந்த நவீன காலத்தில் இப்படியெல்லாம் கவிதை எழுதுவார்களா? என்ற ஆச்சரியம் அவனை உசுப்பிவிட அத்தனை பக்கங்களையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தான் நிரஞ்சன்.
ஒரு போர்வையாய்
உன் நினைவுகளை
போர்த்தியிருக்கிறேன்
உனக்கு திருமணமான பிறகும்!
கடைசி சில பக்கங்களில் காதல் தோல்வியில் முடிந்ததுமாதிரியான கவிதைகள் இடம் பெற்றிருந்தன, அதை நினைத்தபோது நிரஞ்சனுக்கு மனம் பாரமாகியிருந்தது. அதன்பிறகு எந்த கவிதைகளுமற்று நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் காலியாகவே இருந்தது.
அன்று மாலை ஆறு மணிக்கு லால்பாக் கார்டனில் சந்தித்த தனது காதலி ரோஷினியிடம் தனது தந்தையின் காதலை ஒன்றுவிடாமல் ஒப்புவித்தான் நிரஞ்சன். ரோஷினி வியந்து விழி மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அதுக்கப்பறம் உங்கப்பா கவிதை எதுவும் எழுதலையா?” நிரஞ்சனின் விழி பார்த்து கேட்டாள் ரோஷினி.
“இல்ல, எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்துட்டேன், எதுவும் கிடைக்கல!”
“உங்கம்மா இறந்து எவ்வளவு வருசமாச்சு?”
“இரண்டு வருசமாச்சு!”
“கண்டிப்பா உங்க அப்பாவுக்கு இந்த தனிமையான நேரத்துல தன்னோட பழைய காதலியோட ஞாபகம் வரலாம், அவர் மறுபடியும் கவிதை எழுதலாம்!” ரோஷினியின் வார்த்தைகள் அவனுக்குள் புது உற்சாகத்தை விதைத்திருந்தது. இருவரும் லால்பாக் கார்டனை விட்டு வெளியேறியபோது நேரம் இரவு ஏழு மணியை தாண்டியிருந்தது..
நிரஞ்சனுக்கு தனது தந்தையின் நாட்குறிப்புகளை திருட்டுத்தனமாக படித்தது ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அது தவறென்று அடிமனது அடித்துக்கொண்டது. அப்பாவிடம் உண்மையைச்சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும் போல் தோன்றியது.
அன்று இரவு சாப்பிட்டு முடித்த பின் வார இதழை படித்துக்கொண்டிருந்த தனது தந்தையின் அருகில் மெல்ல வந்து தயங்கியபடியே நின்றான்.
“என்ன மன்னிச்சிடுங்கப்பா, உங்களுக்கு தெரியாம உங்க 1980 வருசத்து டைரிய படிச்சிட்டேன், நீங்க அம்மாவ திருமணம் செஞ்சுக்கிறதுக்கு முன்னால யாரையோ காதலிச்ச விஷயம் உங்க கவிதைகள் மூலமா தெரிஞ்சுகிட்டேன், நீங்க விரும்பினா அவங்களப்பத்தி சொல்லுங்கப்பா, கேக்கறதுக்கு ஆர்வமா இருக்கு!” தயங்கியபடியே கேட்ட நிரஞ்சனை ஒருகணம் ஏற இறங்க பார்த்தார் சிவநேசன்.
அப்பாவுக்கும் மகனுக்குமான உறவில் ஒளிவு மறைவுகள் இருப்பது இயல்புதான் அது தெரியாதவரை காப்பாற்றப்படலாம் தெரிந்த பிறகு மகனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுவது உத்தமம் என்று தோன்றியது சிவநேசனுக்கு.
தனது விழிகளை மெல்ல மூடி திறந்தார். சொரசொரப்பாக இருந்த தனது தொண்டையை இருமி சரிசெய்துவிட்டு சற்று இடைவெளி விட்டு தனது காதலைப்பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
“அவ பேரு ஸ்ரீவித்யா, கல்லூரியுல என்கூட படிச்சா, எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருந்தது, விரும்ப ஆரம்பிச்சேன், ஆனா அந்த பொண்ணு வாசுதேவன்னு வேற ஒருத்தன விரும்பற விசயம் தெரிஞ்சதும் நான் என் காதல சொல்லாமலேயே விட்டுட்டேன். அதுக்கப்பறம் அவளுக்கு கல்யாணம் ஆகி திருவனந்தபுரம் போயிட்டா!” நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டபடியே வெட்கத்தை விட்டு தனது பழைய காதலை தனது மகனிடம் சொல்லி முடித்தார் சிவநேசன்.
“அப்பா ரெண்டு மாசத்துக்கு முன்னால உங்க கல்லூரி பொன்விழாவுக்கு போனீங்களே அங்க ஸ்ரீவித்யா மேடமும் வந்திருந்தாங்களா?” ஆர்வமாய் கேட்டான் நிரஞ்சன்.
“ஆமா, அங்க வெச்சு அவங்கள ஏன் பார்த்துட்டேன்னு தோணிச்சு, இந்த உலகத்துல எங்கேயோ ஒரு மூலையுல தன்னோட புருஷனோட குழந்தங்களோட சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருப்பான்னு நினைச்சுகிட்டு இருந்த எனக்கு, அவ சொன்ன விஷயத்த கேட்டு ஆடிப்போயிட்டேன், அவ புருசனுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள கொடுக்கல, கேன்சர் நோய் வந்து கல்யாணமான ரெண்டு வருசத்துலேயே இறந்துட்டார், கையுல ஒரு பெண் குழந்தைய வெச்சுட்டு ஒரு விதவையா வாழ்ந்துகிட்டு இருக்கா!” அவரது விழிகளில் நீர்த்திவலைகள் திரண்டு உருண்டோடி அவர் கால்ககளில் விழுந்து தெறித்தது.
அவரது மன இறுக்கத்தை தனது மகனிடம் சொல்லியபோது அது அவருக்கு ஆறுதலாக இருந்தது, ஆனால் நிரஞ்சன் ஒரு பெரும் பாரத்தை தனது இதயத்தில் தாங்கிக்கொண்டதைப்போல் உணர்ந்தான். இரவின் அமைதியும் சலனமற்ற அறையும் மனதின் பாரத்தை மேலும் உயர்த்தியது.
ஒரு வாரம் கழிந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தனது தந்தையின் அருகில் தயங்கியபடி வந்து நின்றான் நிரஞ்சன்.
“அப்பா, நீங்களும் ஸ்ரீவித்யா மேடமும் ஏன் கல்யாணம் செஞ்சுக்கக்கூடாது!” தனது மனதை அரித்த அந்த விஷயத்தை நொடியில் போட்டு உடைத்தான் நிரஞ்சன். சிவநேசன் உதட்டோரம் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.
“உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய வயசுல நான் இருக்கிறப்போ எனக்கு எதுக்குப்பா இன்னொரு கல்யாணம்!” அண்ணார்ந்து விட்டத்தைப் பார்த்தபடியே சொன்னார் சிவநேசன்.
“அப்பா, அடுத்த மாசம் நான் கலிபோர்னியா போகப்போறேன் திரும்பிவர ஐஞ்சு வருஷமாகும், அதுக்கப்பறம் தான் திருமணம் பண்ணிக்கணுமுன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். அதுவரைக்கும் வீட்டுல நீங்க தனியாத்தான் இருக்கணும், அந்த ஸ்ரீவித்யா மேடம் கிட்ட பேசிப்பாருங்க, அவங்களுக்கும் உங்கள பிடிச்சிருந்து நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டீங்கண்ணா உங்களுக்கு அவங்களும், அவங்களுக்கு நீங்களும் வாழ்நாள் முழுக்க துணையா இருக்கலாம், உங்களுக்கு பேச சங்கடமா இருந்தா நான் வேணும்னா பேசிப்பார்க்கிறேன்!” நிரஞ்சனின் வார்த்தைகள் கேட்டு ஒருகணம் ஆடிப்போனார் சிவநேசன்.
காலம் ரொம்பத்தான் மாறிப்போயிருக்கிறது. அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு இரு நண்பர்களுக்கிடையேயான் உறவுகளைப்போல மாறியிருப்பது கண்டு மனம் சந்தோஷப்பட்டாலும் அந்த விஷயத்தை எப்படி கூச்சப்படாமல் மகனிடம் சொல்வது என்று வெட்கப்பட்டார் சிவநேசன்.
“பேசிப்பார்க்கிறேன், அதுக்கு அவங்க சம்மதிக்கலையின்னா அத்தோட விட்டுடணும்!” அவரது வார்த்தைகளைக் கேட்டு மனதிற்க்குள் சிரித்தான். ’கண்டிப்பா அவங்க சம்மதிப்பாங்க’ என்ற நம்பிக்கையோடு கல்லூரிக்கு புறப்பட்டான் நிரஞ்சன்.
இருபது நாட்கள் கழிந்திருந்தது. திருவனந்தபுரம் பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டு காலை ஒன்பது மணிக்கு பெங்களூருக்கு வரும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ்சில் தனது தந்தைக்காக காத்திருந்தான் நிரஞ்சன்.
ரயில் வந்து நின்றபோது குளிர்வசதி செய்யப்பட்ட பி-2 கோச்சிலிருந்து சிவநேசனும் ஸ்ரீவித்யாவும் இறங்கிய போது `அம்மா’ என்று அழைத்துக்கொண்டே அவர்கள் அருகில் வந்து நின்றான் நிரஞ்சன். கண்கள் லேசாய் கலங்க குரல் தழுதழுத்தது.
“இவன்தான் என் மகன் நிரஞ்சன்!” சிவநேசன் ஸ்ரீவித்யாவிடம் தனது மகனை அறிமுகப்படுத்தியபோது ஸ்ரீவித்யாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் லேசாய் துளிர்த்தது.
“இப்படி ஒரு மகனுக்கு நான் தாயாகுற பாக்யத்த நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்!” அவன் கரங்களைப்பற்றி சொன்னபோது நெகிழ்ந்தான் நிரஞ்சன்.
“அப்பா நீங்க ரெண்டு பேரும் கால்டாக்சியுல வீட்டுக்கு வந்துடுங்க, நான் டூ வீலர்லேயே உங்க பின்னால வந்துடுறேன்!” நிரஞ்சன் இருவரையும் கால்டாக்சியில் அனுப்பிவிட்டு அவர்களுக்கு பின்னால் டூ வீலரில் புறப்பட்டான். கால்டாக்சி இருவரையும் சுமந்துகொண்டு பேங்க் காலனி நோக்கி பயணமானது.
“உங்க மகன் நிரஞ்சன் நினைக்கலையின்னா நாம நிச்சயம் ஒண்ணு சேர்ந்திருக்க முடியாது, என் பொண்ணுகிட்ட உங்கள கல்யாணம் பண்ணிக்கவான்னு கேட்டப்போ அவளும் மறுக்காம சம்மதிச்சுட்டா, இந்த காலத்து பிள்ளையிங்க ரொம்ப தெளிவா இருக்கிறத நினைக்குறப்போ மனசுக்கு சந்தோஷமா இருக்கு!” ஸ்ரீவித்யா சிலாகித்து சொன்னபோது எல்லாவற்றுக்கும் தலையாட்டினார் சிவநேசன்.
வழியிலிருந்த பி.இ.எஸ் கல்லூரியில் வண்டியை நிறுத்தினான் நிரஞ்சன். அவசரமாக தனது அலை பேசியிலிருந்து ரோஷினிக்கு அழைப்பு விடுத்தான்.
“ரோஷினி, அப்பாவும் அம்மாவும் கால்டாக்சியுல வீட்டுக்கு போயிட்டு இருக்காங்க, நீயும் வந்தேன்னா ஒரு பொக்கே வாங்கி குடுத்துடலாம்!”
“சரி, வந்துடுறேன், நீ காலேஜ் கேட் முன்னால வந்து நில்லு!” சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தாள் ரோஷினி. நிரஞ்சன் கல்லுரி முன்பு நிற்க சற்று நேரத்துக்கெல்லாம் கல்லூரியை விட்டு வெளியே வந்தாள் ரோஷினி. நிரஞ்சன் அவளை அழைத்துக்கொண்டு பொக்கே கடைக்கு பறந்தான்.
“ஏன் ரோஷினி எதுவுமே பேசமாட்டேங்கற!” வண்டியை ஒட்டிக்கொண்டே கேட்டான் நிரஞ்சன்.
“உங்க அப்பாவுக்கு பொண்ணு பார்த்து கட்டிவெச்சீங்க, எனக்கு எப்போ மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கப்போற!”தழுதழுத்த குரலில் கேட்டாள் ரோஷினி.
“உன்னோட படிப்பு முடியட்டும் நானே உனக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டிவெச்சுடுறேன்!”
“என்ன பிரியறதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா?” அவளது பதிலைக்கேட்டதும் சட்டென்று வண்டியை ஒரமாக நிறுத்தினான் நிரஞ்சன்.
“நீ இன்னும் பழைய நினைப்புலதான் இருக்கிற, என் அப்பா யாரையோ விரும்புறார்ன்னு தான் நினைச்சிருந்தேன், ஆனா அப்பறமாதான் தெரிஞ்சது அது உன்னோட அம்மான்னு, சின்ன வயசுல விதவையான உன்னோட அம்மா, அவங்கள காதலிச்சு தோற்றுப்போன என்னோட அப்பா, ரெண்டு பேரோட புள்ளைங்க நாம ரெண்டு பேரும் இந்த விஷயம் தெரியாம ஒருத்தர ஒருத்தர் விரும்பியிருக்கிறோம், அவங்க காதல சேர்த்து வைக்கிறதுக்காக நம்ம காதல மறந்துடணுமுன்னும் இந்த விஷயத்த எந்த காரணத்தக்கொண்டும் நம்ம பெத்தவங்களுக்கு தெரியக்கூடாதுன்னும் சத்தியம் பண்ணிகிட்டுதானே சம்மதிச்சோம், இப்போ திடீர்ன்னு பழைய ஞாபகத்துல பேசுனா எப்படி!” உறுதியான குரலில் நிரஞ்சன் சொன்னபோது ரோஷினி சுதாகரித்துக்கொண்டாள்.
“சரி வண்டிய எடு, பொக்கே வாங்கப்போலாம்!” அவள் சமாதானமடைந்தவளாக அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்தாள். தங்களது பெற்றோர்களுக்காக தங்களது காதலை தியாகம் செய்துவிட்டு ஒன்று மறியாதவர்களைப்போல இருவரையும் வாழ்த்த போக்கேயுடன் வீட்டுக்கு விரைந்தார்கள். காற்று வீசிய பிறகும் ஒன்றுமறியாததைப்போல அசைய மறுத்திருந்தன சாலையோர மரங்கள், அவர்கள் மனதைப்போல.
1 comment:
Arumai
Post a Comment