Wednesday, August 4, 2010

வலி

அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் கையில் பொம்மைகளோடு குழந்தை பெற்று ஒருநாள் இரண்டுநாள் ஆன தாய்மார்களிடெமெல்லாம் ’’பொம்மை வாங்கும்மா’’ என கேட்டுக்கொண்டிருந்தார் நவநீதன்.

‘’ யோவ் இடத்த காலி பண்ணுய்யா, புறக்குற கொழந்தைங்க உடனே எழுந்திரிச்சு பொம்மைகளோட விளையாடவா போகுது?’’ எரிந்து விழுந்தான் கிருஷ்ணசாமி.

‘’இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும், கொஞ்சம் அசந்தா குழந்தைங்கள திருடிகிட்டு போய் வித்துடுவாங்க!’’ பக்கத்திலிருந்த வேலுமணி சொன்னபோது நவநீதனுக்கு இதயம் சுக்குநூறாக உடைந்து தெறித்தது போலிருந்தது.

கண்ணீர் கசிந்துருக மனதில் வலியோடு பிரசவ வார்டை விட்டு வெளியே வந்து அருகிலிருந்த இருப்பு பலகையில் அமர்ந்து வானத்தை வெறித்தார்.

‘’ யோவ், இங்க பொம்மை வியாபாரம் பண்றமாதிரி குழந்தைங்கள திருட நோட்டம் போடுறான் ஒருத்தன்!’’ பிரசவ வார்டுக்குள் நுழைந்த துப்பரவு தொழிலாளியை வழிமறித்து புகார் சொன்னார்கள் கிருஷ்ணசாமியும் வேலுமணியும்.

‘’ யோவ், அந்த பொம்மை வியாபாரி வந்ததுக்கப்பறம்தான் இங்க குழந்தைங்க காணாம போறது சுத்தமா கொறஞ்சு போச்சு, அவரு பொம்ம விக்குற சாக்குல எல்லா குழந்தைங்களையும் கண்காணிச்சுகிட்டே இருப்பார், இங்க பிரசவம் ஆகி தாயும் சேயும் நல்லபடியா வீடு போய் சேருறவரைக்கும் அவர் கண்காணிச்சுகிட்டே இருப்பார். நாலைஞ்சு திருடன்கள் கையும் களவுமா பிடிச்சிருக்கார், பாவம் அவரு போன வருஷம் இதே ஆஸ்பத்திரியில அவரோட குழந்தை திருட்டு போயிடிச்சு, இன்னமும் கிடைக்கல அதுக்கப்பறம் தான் இந்த பொம்ம வியாபாரமெல்லாம்!’’ கிருஷ்ணசாமியும் வேலுமணியும் சிலையாகி நவநீதனை தேடிக்கொண்டிருந்தார்கள் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க.