Wednesday, July 14, 2010

வானத்தைப்போல

தனது தங்கையைப் பெண் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையைப் பார்த்ததும் ராமநாதனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மாப்பிள்ளைக்கு சுமார் நாற்ப்பது வயதுக்கு மேலிருக்கும். இருபது வயது தங்கைக்கு நாற்பது வயதில் மாப்பிள்ளையா? எனக் கொதித்தான் ராமநாதன். அவனது கோபத்தை புரிந்துகொண்ட அவன் தாயார் அவனை வீட்டுக்குள் அழைத்து வந்தாள்.

’’உன் மூத்த தங்கைக்கு அவ வயசுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை தேடணுமுன்னா ஒரு லட்சம் ரொக்கம், பத்து பவன் நகை போசணும், மாப்பிள்ளைக்கு வயசு கொஞ்சம் அதிகம்தான், ஆனா வரதட்சணை அதிகம் கேக்கல, உன் சம்பாத்தியதுலதான் உன் ரெண்டாவது தங்கச்சியையும் கட்டி குடுக்கணும், குடும்ப சூழ்நிலைய புரிஞ்சுகிட்டு உன் தங்கச்சியே இந்த மாப்பிள்ளை போதுமுன்னு சொல்லியிட்டா, அப்பறம் என்னடா தயக்கம்?’’ தாயார் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு வாயடைத்தான் ராமநாதன்.

தனது தங்கைக்கு அவள் வயதுக்கேற்ற மாப்பிள்ளையை பார்த்து கட்டி வைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் ஒரு வெறுமையை ஏற்ப்படுத்தியது.

தங்கையின் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு இரண்டாவது தங்கைக்காவது நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்து வைக்கவேண்டும். என்ற கனவுகளோடு மும்பைக்கு ரயிலேறினான் ராமநாதன்.

ஹோட்டலில் வேலை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. வீடு வாடகைக்கு பிடிக்கவேண்டியதில்லை. சமைக்க வேண்டியதில்லை. வாங்கும் சம்பளத்தை அப்படியே ஊருக்கு அனுப்பி விடலாம். என்ற நம்பிக்கையோடு காலம் கடந்து போக காத்திருந்தான்.

எப்படியாவது ஒரு லட்சம் சேமிக்க வேண்டும் அப்பொழுது தான் நல்ல வரன் பார்த்து இரண்டாவது தங்கையை கட்டி வைக்க முடியும், என்ற கனவுகளோடு மூன்று வருடங்கள் ஊருக்குக் கூட போகாமல் காசு சேர்ப்பதிலேயே கவனமாக இருந்தான்.

அவன் சேமிப்பில் ஒரு லட்சம் சேர்ந்ததும் தங்கைக்கு மாப்பிள்ளை தேடச்சொல்லிவிட்டு ஊருக்கு ரயிலேறினான் ராமநாதன்.

அவன் தாயார் அவன் தங்கைக்கு பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு காலில் சிறு ஊனம். நடக்கும்போது லேசாக வளைந்து நடப்பது போல தோன்றும். மாப்பிள்ளையைப் பார்த்ததும் ராமநாதனுக்கு கோபம் தலைக்கேறியது.

`` மூணு வருசத்துக்கு முன்னால இருந்ததவிட இப்போ மாப்பிள்ளைகளோட விலை ரொம்ப அதிகம், நீ நினைக்கிறதுமாதிரி மாப்பிள்ளைக்கு இப்போ மூணு லட்சம் ரொக்கம், முப்பது பவன் நகை போடணும்!’’ அவன் தாயார் சொல்லி முடித்த போது ராமநாதனுக்கு கண்கள் பனித்தது.

தனது இயலாமையை நினைத்து உள்ளுக்குள் அழுதான். தாயார் பார்த்த மாப்பிள்ளைக்கே தங்கையும் சம்மதிக்க எளிமையாக நடந்து முடிந்தது திரும|ணம்.

தங்கைகளுக்கு பிடித்ததோ இல்லையோ குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டு கிடைத மாப்பிள்ளைகளோடு குடும்பம் நடத்த தொடங்கினார்கள். ஆனால் ராமநாதனுக்கு அடிமனதில் அது ஒரு உறுத்தலாகவே இருந்தது.

``ராமநாதா உனக்கும் வயசாகிகிட்டே போகுது சீக்கிரத்துல நீயும் கல்யாணத்த பண்ணிக்க, இந்த காலத்துல காசு பணம் இல்லையின்னா யாரும் நம்மள மதிக்கமாட்டாங்க, உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருக்கேன், ஐந்து லட்சம் நகை, ஐம்பது பவன் நகை போடறோமுன்னு சொன்னாங்க, நமக்கு இம்புட்டு வரதட்சணையான்னு கேக்கிறியா? அது வேற ஒண்ணூமில்ல, நீ அந்த வீட்டோட மாப்பிள்ளையா இருந்தா போதும்!’’ என்று சொன்ன தாயாரை கோபமாய் முறைத்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பினான்.

தனது இரு தங்கைகளுக்கு வயதானவர், சிறு ஊனமுற்ற்வர் என்று கட்டி வைத்துவிட்டு நான் மட்டும் அதிக வரதட்சணை வாங்கிக்கொண்டு திருமணம் செய்து கொண்டால் அதைப்பார்க்கும் என் தங்கைகளுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டு சங்கடப்படுவார்கள், அப்படியொரு நிலமை ஒருபோதும் வந்துவிடக்கூடாதென்று ஒரு முடிவுக்கு வந்தான் ராமநாதன்.

`` அம்மா நீங்க பார்த்த பொண்ண நான் கட்டிக்க விரும்பல, என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா, அவ பேரு புனிதா, ரெண்டு வருஷத்துக்கு முன்னால என்கூட ஹோட்டல்ல வேல செஞ்ச என்னோட நண்பனோட மனைவி தான் புனிதா. ஒரு கார்விபத்துல என் நண்பன் இறந்துட்டான், இப்போ புனிதா அவ வீட்டுல ஒரு விதவையா வாழ்ந்துகிட்டு இருக்கா, அவளத்தான் நான் கல்யாணம் பண்ண ஆசப்படுறேன், என்றான் ராமநாதன்.

அவனது வானத்தைப்போல விரிந்த மனதைப்புரிந்து கொண்ட தாயார் தான் பார்த்து வைத்திருந்த பெண்ணை மறந்துவிட்டு ‘ விதவையா இருந்தா என்ன எனக்கு நல்ல மருமகளா இருந்தா போதும்’ என்று மனப்பூர்வமாய் சம்மதிக்க பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் குதூகலம் குடியேறியிருந்தது.

2 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

அழகான செண்டிமெண்ட் !!

சி.பி.செந்தில்குமார் said...

கதைல கலக்கறதுதான் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே