Thursday, September 3, 2009

புத்திமதி

மூன்றாவது மாடியிலிருந்து கீழே எட்டிப்பார்த்த பார்வதி அந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். முதல்மாடியின் படிக்கட்டில் நின்று கொண்டு தனது மகன் பிரசாந்தும், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாலதியும் நெருக்கமாக நின்றிருந்தார்கள்.

பிரசாந்த் கடிதம் ஒன்றை நீட்ட, மாலதி அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் திணித்தாள். பார்வதிக்கு எல்லாமே புரிந்தது. ‘ வரட்டும் அவ!’ மனதிற்க்குள் கறுவிக்கொண்டாள். சற்று நேரத்தில் மாலதி வந்து சேர்ந்தாள்.

“ என் மகன் உனக்கு லெட்டர் குடுத்தானா?” சற்று மிடுக்காகவே கேட்டாள் பார்வதி.

“ டீச்சர் அது வந்து....” தடுமாறி தலை குனிந்தாள் மாலதி.

“ எல்லாத்தையும் பார்த்துகிட்டுதான் நின்னேன், அந்த லெட்டர குடு!” பார்வதி முறைக்க வேறுவழியின்றி ஜாக்கெட்டுக்குள்ளேயிருந்து அந்த கடிதத்தை எடுத்து தந்துவிட்டு டியூசனுக்குக்கூட காத்திருக்காமல் வேகமாய் மாடிப்படியிறங்கி ஓடினாள் மாலதி.

கடிதத்தை படித்த பார்வதியின் முகம் சுருங்கியது. மகனுக்கு புத்திமதி சொல்லி திருத்தவேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள். அரைமணி நேரம் கழிந்து வந்த பிரசாந்திடம் பொரிந்து தள்ளினாள் பார்வதி.

“ என்ன புள்ளடா நீ, இப்பிடியா பண்றது, உன்ன என் புள்ளயின்னு சொல்லவே வெட்கமா இருக்கு, ஒரு பொண்ணுக்கு இப்பிடியா லெட்டர் எழுதி தருவ? அந்த பொண்ணே வலிய வந்து அவ காதல உன்கிட்ட சொன்னதுக்கு ` முடியாது, வீட்டுல அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிடும் என்ன மறந்துடு! இப்பிடியா எழுதி அவகிட்ட குடுப்ப, காதலுக்கு நானும் உன் அப்பாவும் எப்பவுமே தடையா இருக்கமாட்டோம், காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டா ஜாதி, மதம் பார்க்கவேண்டியதில்ல, வரதட்சணையின்னு பொண்ணு வீட்டுக்காரங்கள வேதனப்படுத்த வேண்டியதில்ல, போய் மாலதிகிட்ட உன் காதல சொல்லு!” பார்வதியின் வார்த்தைகளைக்கேட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் பிரசாந்த், மாலதியிடம் ஐ லவ் யூ சொல்ல.

2 comments:

Jawahar said...

நல்லா எழுதறீங்க... அது காதல் கடிதமே இல்லைன்னு முடிப்பீங்கன்னு நினைச்சேன். இது அதைவிட ஒரு படி மேலே... பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

differentana story... nalla irundhadhu..