நீலி கதை குறித்து பல ஆச்சரியமான விஷயங்கள் இருந்தாலும் நான் பிறந்த குமரி மாவட்டத்தில் பல பெயர்களில் இந்த கதை அறியப்படுகிறது. இந்த நீலிக்கு கள்ளியங்காட்டு நீலி என்றும் பழையனூர் நீலி என்றும் பழவூர் நீலி என்றும் பல பெயர்கள் உண்டு.
இந்த நீலியின் வரலாறு இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. எங்கள் குமரி மாவட்டத்தில் நிலவும் கதை எப்படியென்றால் நீலி ஒரு தாசி வீட்டுப் மகளாகவே சித்தரிக்கப்படுகிறாள். தனது தாய் பல முறை வற்புறுத்தியும் அந்த தொழிலில் ஈடுபடாமல் கற்பு நெறி காத்து வந்தாள். அவள் மனைக்கு வந்துபோகும் ஒரு கோவில் பூசாரியின் மீது எப்படியோ ஈர்ப்பு ஏற்ப்பட்டு பூசாரி மீது காதல் வசப்படுகிறாள்.
பூசாரியும் அவள் மீது மையல் கொண்டு கோவில் சிலைகளுக்கு அணிவித்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி தனது காதலிக்கு தருகிறான். கோவிலில் நகை காணாமல் போன விஷயம் மன்னருக்கு தெரிந்தால் இனி உயிரோடு இருக்க முடியாது என்று தனது காதலியை நகையோடு அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறான்.
இரவு வருகிறது இருவரும் ஒரிடத்தில் தங்கி விட்டு மறுநாள் பயணத்தை தொடர திட்டமிட்டு ஒய்வெடுக்கிறார்கள். களைப்பின் மிகுதியில் அவள் அயர்ந்து தூங்குகிறாள் ஆனால் பூசாரிக்கோ தூக்கம் வராமல் வானத்தை அண்ணார்ந்து பார்த்தபடியே எதிர்கால சிந்தனையில் மூழ்குகிறான்.
நாளை மன்னன் கோவில் நகை எங்கே என்று தேடி அது கிடைக்காமல் போனால் நிச்சயம் சும்மா விடமாட்டான். ஊரெங்கும் தேடுவான் அகப்பட்டால் கொலையும் செய்வான், பேசாமல் தனது காதலி அணிந்திருக்கும் நகைகளை எடுத்து மறுபடியும் ஊருக்கே சென்று விடுவது என்று தீர்மானிக்கிறான். அவள் அணிந்திருக்கும் நகைகளை எப்படி எடுப்பது ஒரே வழி அவளை கொன்றுவிடுவது தான் என தீர்மானித்து தூங்கிக்கொண்டிருந்த தனது காதலியின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்கிறான்.
அவனுக்கு தாகம் எடுக்கிறது. அருகிலிருந்த கிணற்றில் தண்ணீர் மோந்து குடிக்கிறான். கிணற்றின் விளிம்பிலிருந்த பாம்பு ஒன்று அவனைத் தீண்ட அவன் அந்த இடத்தில் உயிரை விடுகிறான்.
திடீரென்று இறந்து போன அவளின் ஆவி மேலுலகம் செல்கிறது. அங்கு சிவபெருமானிடம் முறையிடுகிறாள். என்னை கொலை செய்த அந்த பூசாரியை நான் பழிக்குப்பழி வாங்கவேண்டும், எனக்கு மறுபடியும் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும் என்று முறையிடுகிறாள்.
” பெண்ணே நீ பழிவாங்கத்துடிக்கும் பூசாரி இறந்துவிட்டான் இனி எப்படி பழி வாங்கமுடியும் என மறுத்தார் சிவபெருமான்.
இல்லை அந்த பூசாரிக்கு இன்னொரு ஜென்மம் உண்டல்லவா அவன் பிறந்து வளர்ந்தால் அவனைக்கொன்று பழி வாங்கினால் தான் என் ஆத்திரம் அடங்கும். என்று கேட்க வேறு வழியின்றி அவள் பூலோகம் செல்ல வரம் கொடுத்தார் சிவபெருமான். அன்றிலிருந்து அவள் நீலி என்று அழைக்கப்படுகிறாள்.
பூசாரி தஞ்சை மாவட்டத்தில் ஒரு வணிகனின் மகனாகப் பிறக்கிறான். அவன் வளர்ந்து வாலிபனாகும் வரை பேய் வடிவம் கொண்டு வருவோர் போவோரை பயமுறுத்தி வந்ததாகப் அறியப்படுகிறது.
நீலியின் உருவம் கண்டு பயந்து உயிர் விட்டவர்கள் பலர். அவள் எதிர்படுபவர்களிடம் சுண்ணாம்பு கேட்கும் பழக்கம் இருந்தது. சுண்ணாம்பை கத்தியில் வைத்துக்கொடுத்தால் அவள் வாங்கமாட்டாள். ஒருமுறை ஒரு மந்திரவாதியிடம் வசமாக மாட்ட அவளது தலையில் ஆணியை அறைந்து தனது இல்லம் அழைத்துச்சென்றான்.
மந்திரவாதியின் வீட்டில் ஒரு சாதாரண பெண்ணாகவே நடந்துகொண்டாள். ஒருநாள் மந்திரவாதியின் மனைவியும் நீலியும் ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த போது நீலியின் தலையிலிருந்த ஆணியைப் பார்த்து அவளிடம் சொல்ல நீலியும் அதை எடுத்து விடுமாறு கூற ஆணியை எடுத்ததும் அங்கிருந்து தப்பித்து பலரையும் தொடர்ந்து பயமுறுத்தியதாக வாய்வழி கதை கூறுகிறார்கள் பழைய தாத்தாக்கள்.
வணிகனின் மகன் வளர்ந்து வாலிபனாகிறான். அவனைப் பிந்தொடர்கிறாள் நீலி. அவனிடமிருக்கும் வாள் கண்டு அவனை எதுவும் செய்ய முடியாமல் தடுமாறுகிறாள். இவனை எப்படி பழிவாங்குவது என்று பலவாறு யோசித்து கள்ளியங்காடு என்னும் இடத்தில் கள்ளிச்செடியை ஒடித்து குழந்தையாக்கி இது எனக்கும் இவனுக்கும் பிறந்த குழந்தை என்றும் இவன் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிவிட திட்டமிடுவதாகவும் ஊர் பெரியவர்களிடம் முறையிடுகிறாள்.
அவள் சொல்வது உண்மை என்று நம்பிய ஊர் பெரியவர்கள் அவர்கள் இருவரையும் ஒரு அறையில் தங்கச் சொல்கிறார்கள்.
“ஐயா அவர் கையிலிருக்கும் கத்தியை பிடுங்கிவிடுங்கள் இல்லையென்றால் இரவு என்னை கொலை செய்து விடுவார் என்று தந்திரமாக நாடகமாட ஊர் பெரியவர்கள் அவனிடமிருந்த கத்தியை பிடுங்கி விடுகிறார்கள்.
அவனிடம் கத்தி இல்லையென்றால் அவனை பழிவாங்குவது சுலபம் என்று திட்டமிட்டபடியே அன்றிரவு அவனைப் பழிவாங்குகிறாள். அவள் ஆத்திரம் அடங்கிய பிறகு அவளது ஆவி மேலுலகம் சென்றதாக கதை கூறுகிறது.
ஐரேனிபுரம் பால்ராசய்யா
1 comment:
http://naayakan.blogspot.com/2009/06/blog-post_25.html
Just Read this Also Sir..!
Another Post about Nili..
Post a Comment