Friday, March 13, 2009

வயிறு

அந்த ரயில் பெட்டியில் கண்பார்வையற்ற ஒருவர் பிச்சை கேட்டு வந்த போது அவரவர் கையிலிருந்த சில்லரைகளைப் போட மகிழ்ச்சியாக அடுத்த பெட்டி நோக்கி நகர்ந்தார் அவர்.

சிறிது நேரத்தில் பத்து வயது சிறுவன் அழுக்கு உடையுடன் கையேந்தியபடி வந்தான். அவனுக்கு காசு போட யாருக்கும் மனசு வரவில்லை.

’’ஏண்டா கை கால் நல்லாத்தானே இருக்கு, வேலை செஞ்சு பொழைக்கிறத விட்டுட்டு பிச்சை எடுக்கிற? போடா அந்த பக்கம்!’’ ஐம்பது வயது பெரியவர் தனது நரைத்த மீசையை முறுக்கியபடி சொன்னார்.

சிறுவன் அவரது மிரட்டலுக்கு பயந்து அந்த இடத்தைவிட்டு நகர முயற்ச்சிக்கையில் குமார் அவனது கையில் பத்து ருபாயை திணித்துவிட்டு படித்துக்கொண்டிருந்த நாவலை மீண்டும் தொடர்ந்தான்.

‘’ எதுக்கு இந்த மாதிரி பசங்களுக்கு காசு கொடுத்து என்கரேஜ் பண்றீங்க? பெரியவர் நேரடியாகவே கேட்டார்.

’’அந்த பையன் வேலை செஞ்சு பொழைக்கலாம்தான் இருந்தாலும் இண்னைக்கு பிச்சை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணி வந்துட்டான், யாருமே அவனுக்கு பிச்சை போடலையின்னா அவன் எப்பிடி சாப்பிடுவான் அவனுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்குல்ல!’’ குமார் சொன்ன போது யாரிடமும் பதிலின்றி அமைதியானது அந்த பெட்டி ரயில் சத்தத்தை தவிர.

No comments: