அதிகாலை இருட்டு விலக மறுத்து அடர்ந்திருந்தன. அறுந்து போன பனை ஓலைப்பாயின்மீது படுத்திருந்த ராமன்குட்டி உருண்டபோது
அடிவயிற்றில் பிரிந்து போன பனைஓலைப்பாயின் ஓலைப்பொளி லேசாக குத்த, பாயை விட்டு எழுந்து அடிவயிற்றை சொறிந்து கொண்டு தலையணைக்கடியிலிருந்த பீடிக்கட்டிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.
குளிர்ந்த காற்று வீசிப்போனதில் தீக்குச்சியில் பற்றியிருந்த தீ அணைந்து போனது, ராமன்குட்டி மீண்டும் மீண்டும் உரச குளிர்ந்திருந்த தீப்பெட்டியின் கந்தக காகிதம் கிழிந்து தொங்கியது. தீக்குச்சிகள் முடிந்துபோன கோபத்தில் தீப்பெட்டியை தூர வீசி எறிந்தான்.பக்கத்து குடிசையில் மங்கிய வெளிச்சத்தில் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது .அந்த ஓலைக்குடிசையின் கதவை மெல்ல தட்டினான்.
“வேலுச்சாமி எழுந்துருடே, நேரம் வெளுக்கப்போவுது இன்னுமா உறங்கிய, அந்த வெளக்க கொஞ்சம் காட்டு பீடி கொழுத்தணும்”
”உனக்கு வேற சோலி இல்ல, உறங்கி கிடக்கியவங்கள தட்டி எழுப்பாட்டி உனக்கு நேரம் போவாது, வேற பீடி இருக்கா, இருந்தா எனக்கு ஒண்ணு தாடே" குடிசைக்குள்ளேயிருந்து வேலுச்சாமி குரல் கொடுக்க ராமன்குட்டிக்கு கோபம் வந்தது.
” நேற்று ரெண்டு பீடி கடன் வாங்கின, குடுத்தியா நீ, எனக்கு கணக்கெல்லாம் ஊண்டு கேட்டியா? சரி, இப்பம் ஒரு பீடி தாறேன், இதோட மூணாச்சு, மொதல்ல வெளக்க வெளியில காட்டு”
வேலுச்சாமி கதவை மெல்ல நகர்த்தி மண்ணெண்ணெய் விளக்கை காற்று அணைத்துவிடாமலிருக்க கை வைத்து மறைத்தபடி குடிசைக்கு வெளியே நீட்டினான். ராமன்குட்டி பீடியை பற்ற வைத்துவிட்டு அவனுக்கும் ஒரு பீடி தந்தான்.
”இண்ணைக்கு உனக்கு வேலை உண்டா?”
”ம் உண்டு பாலோட்டு நேசன் சாருக்க வயலு இண்ணாக்கும் உழவு, உனக்கெங்கடே வேல”
”புத்தம்வீட்டு இளைய நாடான் வீட்டுல கொளவெட்டு, காலத்த ஒரு ஏழு மணிக்கு போனாப்போதுமிண்ணு நல்லா ஒறங்கீட்டு இருந்தேன், நீ வந்து எழுப்பி விட்ட, இனி எப்பிடி உறக்கம் வரும்.”
”சரி, எனக்கு நேரமாச்சு, நான் போறேன்.” தனது வீட்டு திண்ணையின் ஓரத்திலிருந்த கலப்பையை தோளில் தொங்கவிட்டபடி பொட்ட குளத்தை நோக்கி நடந்தான். காற்று மார்கழி மாத குளிரையும் சேர்த்து வீசியதில் ராமன்குட்டியின் மேலாடை அணியாத தேகம் ஆட்டம் கண்டது.
இருள் லேசாய் விலகத்தொடங்கியது. பொட்டகுளத்துக்குச் செல்லும் வழிநெடுகிலும் வாய்க்கால் தண்ணி ஓடிக்கொண்டிருந்தது. ராமன்குட்டி தண்ணீரில் கால்வைத்தபோது ஐஸ்கட்டியின் மீது கால் வைப்பதைப் போல் உணர்ந்தான். அடர்ந்த காற்றும் குளிர்ந்த தண்ணீரும் அவனை இறுகப் பற்றின. அவன் எதற்க்கும் அசராமல் வாய்க்கால் தண்ணீருக்குள் நடந்தபடியே நேசன் சார் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். மாட்டுத்தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகள் இரண்டுக்கும் சிறிது வைக்கோல் பிய்த்து வைத்தான்.
``சார், நான் வயலுக்கு போறேன், உரமும் நடவுகாறங்க கூலியும் குடுத்தனுப்புங்க” மாடுகளை அவுத்துக்கொண்டு வயலுக்கு புறப்பட்டான்.
பொழுது நன்றாக விடிந்திருந்தது. மாடுகள் இரண்டையும் கலப்பையில் பூட்டி வயலை உழ ஆரம்பித்தான். சற்று நேரத்தில் நாற்றுக்களை பிடுங்கி நட நான்கைந்து பெண்கள் வந்தார்கள். கட்டியிருந்த லுங்கியை உயர்த்தி இடுப்பில் சொருகிவிட்டு நாற்றுக்களை இளக்க ஆரம்பித்தார்கள். நாற்றின் அடியிலிருந்த சேற்றை தண்ணியில் முக்கியும் தங்கள் முழங்கால்களில் அடித்தும் விலக்கிவிட்டு கைப்பிடி அளவு நாற்றை ஒன்று சேர்த்து முடிந்து கட்டி வைத்தார்கள்.
சூரியன் மெல்ல சுட ஆரம்பித்தான். ராமன்குட்டி வயலை உழுது முடித்து மரம் அடித்த போது நாற்று நடுபவர்கள் நாற்றை முழுவதுமாக இளக்கி முடித்திருந்தார்கள். வயலங்கரையில் வைத்திருந்த உரத்தையும், மரக்கிளைகளையும் வயலில் போட்டுவிட்டு இரண்டு மணி வாக்கில் வயலை விட்டு வெளியேறினான் ராமன்குட்டி.
மாலை ஆறு மணிக்கு நடவு முடிந்து பெண்கள் அருகிலிருந்த குளத்தில் குளித்துவிட்டு ஈர உடையுடன் வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தினக்கூலியைத் தந்துவிட்டு தனக்கான கூலியையும் எடுத்துக்கொண்டான்.
மீதிப்பணத்தை நேசன் சாரிடம் தந்துவிட்டு வீடு திரும்பியபோது இரவு மணி ஒன்பதை தாண்டியிருந்தது.
காலங்கள் கடந்துபோனதில் நெற்கதிர்கள் நெல்மணிகளை சுமந்து சருகாகி நின்றன. பாலையன், வேலுச்சாமி, தாசையன், சுந்தர்ராஜ், ஆகிய நால்வரையும் வயல் அறுப்புக்கு அழைத்தான் ராமன்குட்டி. விடியற்காலை ஐந்து மணிக்கு ஒவ்வொருவரும் கைகளில் அறுப்பத்தியுடன் வயலுக்குச்சென்று சாய்ந்தும் சாயாமலும் நின்ற நெற்கதிர்களை அறுக்கத் துவங்கினார்கள்.
பதினொன்று மணிக்கு அறுப்பு முடிந்து அவரவர் குடிசைகளுக்குச் சென்று பழைய சோறு சாப்பிட்டு விட்டு மீண்டும் வயலுக்கு வந்து அறுபட்டு கிடந்த நெற்கதிர்களை வாரி கட்ட ஆரம்பித்தார்கள். கட்டிவைத்த கதிர் கட்டுகளை தலைசுமடாக சுமந்து நேசன் சாரின் வீட்டுக்கு கொண்டு சேர்த்தார்கள். ராமன்குட்டி வயலில் காவலுக்கு இருந்து கதிர்கள் மீது வந்தமர்ந்த பறவைகளை விரட்டிக்கொண்டிருந்தான்.
இரண்டு மணிவாக்கில் நாற்று நட்ட பெண்களும் கூடவே ஐந்தாறு சிறுவர் சிறுமிகளும் வயலுக்கு வந்தார்கள். தங்களின் பங்குக்கு கதிரை கொஞ்சமாக எடுத்து ஒதுக்கி வைத்துவிட்டு அதன் பக்கத்தில் நின்றார்கள்.நேசன்சார் அப்பொழுதுதான் வயலுக்கு வந்தார். வயலில் கூடிருந்தவர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
”நடவு நட்டவங்க கூலிய அண்ணைக்கே வாங்கியிட்டு போனீங்க பிறகெதுக்கு கதிரு வேணுமுண்ணு வந்து நிக்கிறீங்க, போங்க எல்லாரும்” கூடி நின்றவர்களை அற்ப பார்வை பார்த்தார் நேசன் சார்.
” சாரே, உங்க வயலுதான் முத அறுப்பு, எங்க கொழந்த குட்டிகளும் பித்தரி கஞ்சி குடிக்க கொதியா இருக்காதா? கொஞ்சம் கருண காட்டணும் சாரே” அந்த வயலில் நடவு நட்ட பெண் சொன்னபோது நேசன் சாரின் மனது லேசாய் இளகியது.
“நட்டவங்களுக்கு ஒருபிடி கதிரு தல்லாம், வந்து நிக்கிற ஆளுவள பாத்தா பதினைஞ்சு பேருக்கு மேல இருக்கே, எல்லாருக்கும் கதிர சும்மா தந்தா நான் எங்க போவேன், லே ராம்ன்குட்டி ஆரெல்லாம் வயல்ல ஞாறு நட்டு களை பறிச்சாங்களோ அவங்களுக்கு மட்டும் ஒரு பிடி கதிர குடுத்திட்டு மீதிய கட்டுக்கு கொண்டு போல” நேசன்சார் சத்தம்போட்டு சொன்னதும் ராமன்குட்டி கதிருக்குள் கைவிட்டு ஒரு பிடி அளவு கதிரை தந்துவிட்டு மீதியை கட்டுக்குள் கொண்டு சேர்த்தான்.
”ராமன்குட்டி ஒனக்கு ஓர்ம இல்லியோ நான் நடவுக்கு வரேல ஆனா கள பறிக்க வந்தேன். எனக்கும் கதிரு இல்லயிண்ணு சொல்லிய” நடுத்தர வயது பெண் கேட்டதும், ராமன்குட்டி சற்று நேரம் யோசித்துவிட்டு நேசன் சாரைப் பார்க்க, “சரி குடுத்து தொலடா” என்று அவரிடமிருந்து பதில்வர, அவளுக்கும் ஒரு பிடி கதிரை த்ந்துவிட்டு மீதியை கட்டுக்கு கொண்டு சென்றான்.
வயலில் நடவுக்கு வராதவர்கள் கெஞ்சி கேட்டும் யாருக்கும் ஒரு பிடி கதிர் தாராமல் போனதில் நேசன் சாரையும் ராமன்குட்டியையும் ஏகமாய் திட்டி தீர்த்தார்கள்.
நேசன் சாரின் வீட்டு முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த கதிர்களை பிரித்து கொடுக்க தாசையன் தரையிலிருந்த கல்லில் ஓங்கி அடித்து கதிரிலிருந்த நெல்மணிகளைப் பிரித்தார். மலைபோல் குவிந்திருந்த நெல்லையும் பதரையும் முறத்தால் வீசி பதரை வெளியேற்றினான் வேலுச்சாமி.
பதர் நீங்கிக் கிடந்த நெல்லை கடவத்தில் வாரி நேசன் சாரின் வீட்டு உள்முறியில் கொட்டினான் தாசையன். அனைவருக்கும் கூலியாக நெல் அளந்து கொடுத்துவிட்டு தனக்கும் கூலியாக கிடைத்த நெல்லை சருக்கை சந்தையில் விற்றுவிட்டு களைப்பு நீங்க கள் குடித்துவிட்டு வீடு திரும்பினான் ராம்ன்குட்டி.
பொழுது விடிந்து வெகுநேரமாகியும் ராமன்குட்டி படுத்திருந்த பாயிலிருந்து எழவில்லை. காப்பிக்காட்டிலிருந்து வந்த அவனது அத்தை செவலத்தாயின் குரல் கேட்ட பிறகுதான் படுத்திருந்த பாயை விட்டு எழுந்து அதை சுருட்டி வைத்துவிட்டு முகம் கழுவினான்.
“ ராமன்குட்டி, ஒரு சந்தோஷமான விசயத்த சொல்லியதுக்காக்கும் வந்தேன். என்மவ செவ்வந்தி சடங்கானா, என் அண்ணன் சாகாம இருந்திருந்தா நாருப்பெட்டி நெறைய பலகாரமும், துணிமணியும் எடுத்துட்டு வந்திருப்பான், , வாற ஞாறாச்சயாக்கும் செலவு. அங்க பச்சரி மாவு கிட்டாது, நீ வரும்போ பச்சரி நெல்ல இடிச்சு மாவாக்கி ஒரு நாளுக்கு முன்ன வரணும் கேட்டியா” அவனது அத்தை படபடவென பேசியதை காதில் வாங்கிக்கொண்டு மடிக்கட்டிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்தான்.
ராமன்குட்டி செய்வதறியாது திகைத்தான். நேற்று கூலியாக கிடைத்த நெல்லை ஏன் விற்றுத்தொலைத்தோம் என்று வருந்தினான். சிறு வயதில் நேசன் சார் வீட்டு த்ட்டிலிலிருந்து கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் விலகி அதிக நேரம் குனிந்து நிற்கவோ தலையில் சுமடு எடுக்கவோ முடியாத அவஸ்தை அவனை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியது. நேராக நேசன் சார் வீட்டுக்குச் சென்று நடந்த விபரத்தை கூறினான்.
”ராமன்குட்டிக்கு எல்லா விபரமும் தெரியும் எனக்கு இருக்கிறதே அந்த ஒரு சின்ன வயலு தான். அதுல விளையுற நெல்லு எங்களுக்கு சாப்பிடுறதுக்கே தெகையாது, ஒரு பக்கா நெல்லு வெணுமிண்ணா வாங்கீட்டு போ, அதுக்க மேல கேக்காதே” நேசன் சார் கறாராக பேசியது கேட்டு மறுபேச்சின்றி கிடைத்த ஒரு பக்கா நெல்லை வாங்கிக்க்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
தனது மன வருத்தத்தை வேலுசாமியிடம் பகிர்ந்து கொண்டான்.
“நாளைக்கு புத்தன் வீட்டுல வயலறுப்பு ஒன்ன விளிக்கலாமுண்ணு பாத்தா உனக்கு குனிஞ்சு நின்னு வயலறுக்கவோ, சுமடெடுக்கவோ முடியாது, வேணுமிண்ணா எனக்க கூலியில ஒரு பக்கா நெல்லு கடனா தாறேன். என்றான் வேலுச்சாமி.
அடர்ந்த இரவு வெளியேறாமல் அடங்கி கிடப்பதுபோல் உணர்ந்தான். மறுநாள் அரிப்பெட்டியை எடுத்துக்கொண்டு வயலுக்குச் சென்றான். வயலில் சிந்திய நெல்மணிகளை உட்கார்ந்து பொறுக்க ஆறம்பித்தான். ஒருவாரம் தொடர்ந்து எங்கெல்லாம் வயலறுப்பு நடந்ததோ அங்கெல்லாம் சென்று நெல் பொறுக்கி தனது அத்தை மகள் சடங்குக்கு ஐந்து கிலோ பச்சரிசி மாவுடன் ஒருநாள் முன்னதாகவே சென்றான்.
”ராமன்குட்டி விடல்ல நீ, உன் அத்தைபொண்ணு உன்க்குத்தாண்ணு தெரிஞ்சதும் கஷ்டப்பட்டு பச்சரி மாவு கொண்டு குடுத்திட்ட” வேலுச்சாமி அவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தான். ராமன்குட்டிக்கு வெட்கம் பிடுங்கித் தின்னது.
இரண்டு வருடங்கள் கழிந்த பிறகு இடியாய் அவன் காதுகளில் அந்த செய்தி வந்து விழுந்தது.
”ராமன்குட்டி உன் மொறப்பொண்ணு வேற சாதி பயலோட ஓடீட்டாளாம் டேய்”
தன் அத்தை மகள் பற்றின எல்லா நினைவுகளையும் அழித்தெறிந்துவிட்டு ஒருவருடம் வரை சமாளித்தான்.
அனால் விதி அவனை விடவில்லை. ஒடிப்போன் அவனது அத்தை மகள் கைக்குழந்தையுடன் திரும்பி வர மீண்டும் ராமன்குட்டியின் பெயரே பரிந்துரைக்கப்பட்டது. வேறு வழியின்றி அவளையே திருமணம் செய்துகொண்டான்
தனது பழைய நினைவுகளிலிருந்து மெல்ல விலகி வானத்தை அண்ணாந்து பார்த்தான் ராம்ன்குட்டி. தனது மனைவிக்கு பிறந்த
பெண் குழந்தையும் வளர்ந்து நேற்று பெரியவளும் ஆகிவிட்டாள்.
மகள் சடங்குக்கு பச்சரி மாவுக்கு நெல் வாங்க நேசன் சார் வீட்டுக்கு போகட்டுமா? என தனது மனைவியிடம் கேட்டான் ராமன்குட்டி.
”அதெல்லாம் அந்தக்காலம் இப்போ யாரும் இத வெளியில கூட சொல்ல மாட்டாவ, எல்லாம் வீட்டுக்குள்ளேயே நடக்குது”
அவள் சொன்னது சரிதான், முன்பு போல் யாரும் வயல் நடவுக்கோ, அறுப்புக்கோ போவதில்லை. எல்லாத்துக்கும் வயல்களில் மெஷின்கள்வந்துவிட்டன. பெண்கள் வயசுக்கு வந்தால் திருமண பந்தல் போட்டு, ரேடியோ செட் வைத்து கொண்டாடும் நிகழ்ச்சிகள் குறைந்திருந்தன ஆனால் காதலும், காதலர்கள் ஊரைவிட்டு ஓடும் பழக்கமும் இன்னமும் அப்படியே இருந்தது கண்டு மனம் வெறுத்தான் ராம்ன்குட்டி.
முதற்சங்கு மாத இதழ் மற்றும் கீற்று இணையதளத்தில் வெளிவந்தது.
2 comments:
மண்வாசம் மாறாத நடை..! தெள்ளெனச் செல்லும் நீரோடையாக கதை நகர்த்தல்..! சபாஷ் ராசய்யா..!!
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Post a Comment